மத்திய கிழக்கு பகுதியில் உருவாகியிருக்கும் போர் பதற்றம் மற்றும் கச்சா எண்ணெய் - எரிவாயு குறித்து தான் தற்போது உலகம் முழுவதும் முக்கிய பேசுபொருளாக உள்ளது. ஆனால் இவை அனைத்தையும் தாண்டி ஈரான் மக்களுக்கு மிகப்பெரிய பிரச்சனையாக இருப்பது குடிநீர் தான்.
ஏற்கனவே ஈரான் தீவிரமான குடிநீர் பற்றாக்குறையை எதிர்கொண்டு வரும் நிலையில், ஈரான் போர் இந்தப் பிரச்னையை மேலும் மோசமாக்கியுள்ளது. போர் தாக்குதல் ஈரான் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் விநியோக அமைப்புகள் சேதமடைந்து வருவதால், பல லட்சம் மக்களின் அன்றாட வாழ்க்கை பெரும் சிக்கலில்உள்ளது.
உலக வளங்கள் அமைப்பு (World Resources Institute - WRI) வெளியிட்டுள்ள தகவல் படி, மத்திய கிழக்கு பகுதியில் 83 சதவீத மக்கள் ஏற்கனவே அதிக நீர் பற்றாக்குறையில் வாழ்கின்றனர். 2050ஆம் ஆண்டுக்குள் இந்த எண்ணிக்கை கிட்டத்தட்ட 100 சதவீதமாக உயரும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கின் நீர் நெருக்கடி ஏன்?
இப்பகுதியில் இயற்கையான நீர் ஆதாரங்கள் (மழை, ஆறுகள்) மிகவும் குறைவு. ஆனால் மக்கள் தொகை வளர்ச்சி மற்றும் தொழில்துறை தேவை காரணமாக தண்ணீர் தேவை அதிகரித்து வருகிறது. சவுதி அரேபியா, குவைத், ஓமன் போன்ற நாடுகளுக்கு இயற்கையாக கிடைக்கும் தண்ணீர் போதுமானதாக இல்லாததால், இந்த நாடுகள் கடல் நீரை குடிநீராக மாற்றும் "டீசாலினேஷன்" (desalination) தொழிற்சாலைகளை பெரிதும் நம்பியுள்ளன.
டிரம்ப் தனது பதிவுகளில் ஈரான் அமைதி ஒப்பந்தம் விரைவில் செய்யப்படவில்லை எனில் அந்நாட்டின் மின்சாரம், எரிபொருள், மற்றும் குடிநீர் வசதிகளை தாக்குதலுக்கு உள்ளாகும் என எச்சரிக்கை விடுத்த பின்பு தண்ணீர் பிரச்சனை தொடர்பான அச்சம் அதிகரித்துள்ளது.
இந்தத் தொழிற்சாலைகள் மிக முக்கியமானவை, ஆனால் எளிதில் சேதமடையக்கூடியவை. ஒரு சிறிய பாதிப்பு ஏற்பட்டாலும், பெரிய நகரங்களில் நீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது. ஈரான் போர் காரணமாக டீசாலினேஷன் தொழிற்சாலைகள், குழாய்கள் மற்றும் அணைகள் சேதமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எகிப்து, யெமன் ஆகிய நாடுகளிலும் குடிநீர் தட்டுப்பாடு பெரிய அளவில் அதிகரித்துள்ளது.
ஈரானின் நிலைமை மிக மோசம்
ஈரான் போருக்கு முன்பே தீவிரமான குடிநீர் நெருக்கடியில் இருந்தது. நீண்ட கால வறட்சி, மழைப்பொழிவு குறைவு மற்றும் தவறான நீர் மேலாண்மை ஆகியவை இதற்கு முக்கிய காரணங்களாக கருதப்படுகிறது. இந்த நிலையில் போர் காரணமாக பல இடத்தில் தண்ணீர் சேமிப்பு மற்றும் சப்ளை பாதிக்கப்பட்டு உள்ளது.
ஈரான் பொதுவாக தனக்கு கிடைக்கும் நீர் ஆதாரத்தை சுமார் 80 சதவீதத்துக்கு மேல் ஒவ்வொரு ஆண்டும் பயன்படுத்தி வருகிறது. இது மிகவும் ஆபத்தான மற்றும் போதுமான நீர் வளம் சேமிக்க முடியாத நிலையாகும்.
உதாரணமாக ஈரான் தலைநகர் தெஹ்ரானில் சுமார் ஒரு கோடி மக்கள் வசிக்கின்றனர். 2025ஆம் ஆண்டில் மழைப்பொழிவும் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாத காரணத்தால் நீர் தேக்கங்களின் சேமிப்பு அளவு மிகவும் குறைந்துவிட்டது. இதனால் இந்நகரம் தற்போது நீர் பற்றாக்குறையின் விளிம்பில் இருந்து வருகிறது.
பெரும் அபாயம்
போர் தொடர்ந்தால் நீர் மற்றும் உணவுப் பற்றாக்குறை ஒன்றாக ஏற்படும் வாய்ப்பு உள்ளது. வளைகுடாவில் பல நாடுகள் இறக்குமதி உணவை நம்பியுள்ளன. போர் காரணமாக விநியோகப் பாதைகள் பாதிக்கப்பட்டால், உணவு பொருட்கள் நெருக்கடி ஏற்படும் அபாயம் அதிகம். ஈரான் ஏற்கனவே "நீர் திவால் நிலை" (water bankruptcy) என்ற நிலைக்கு நெருங்கியிருந்தது. இந்த போர் தற்போது உணவு நெருக்கடியையும் தீவிரப்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications