மத்திய கிழக்கில் அமெரிக்கா-இஸ்ரேல்-ஈரான் இடையே நடைபெற்று வரும் மோதல் உலக எண்ணெய் மற்றும் எரிவாயு சந்தையை பெரிதும் பாதித்துள்ளது. ஒருப்பக்கம் உற்பத்தி ஆலைகள் மூடப்பட்டு வருகிறது இன்னொரு பக்கம் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டு உள்ளது இவ்வற்றின் விலையை உயர்த்தியுள்ளது.
ஆனால், இதை விட ஆழமான மற்றும் நீண்டகால பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய ஒரு பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது. அது உர (fertiliser) விநியோக சங்கிலி. உலக உணவு உற்பத்தியை நேரடியாக பாதிக்கக்கூடிய இந்த பிரச்சினைக்கு இதுவரை போதிய கவனம் கிடைக்கவில்லை. ஆனால், இப்போது இது பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

ஹார்முஸ் ஜலசந்தி
ஹார்முஸ் ஜலசந்தி வழியாக உலகின் 20 சதவீத எண்ணெய் போக்குவரத்து நடைபெறுகிறது என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், இதே பாதை உலக நாடுகளின் விவசாய உர வணிகத்தில் 33 சதவீதத்தை கையாள்கிறது என்பது எத்தனை பேருக்கு தெரியும்..?
சவுதி அரேபியா, கத்தார், ஓமான், ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகள் உர உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கின்றன. யூரியா, சல்பர், அம்மோனியா போன்ற முக்கிய உர பொருட்களை இந்த நாடுகள் உற்பத்தி செய்கின்றன. ஈரான் அம்மோனியா உற்பத்தியில் உலக அளவில் மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்த பாதை மூடப்பட்டால், உலக நாடுகளுக்கான உர விநியோகம் பெரிதும் பாதிக்கப்படும்.

போர் நீடித்தால் - உணவு பற்றாக்குறை
இந்த நிலையில் அமெரிக்கா-இஸ்ரேல்-ஈரான் இடையேயான மோதல் நீண்ட நாட்கள் தொடர்ந்தால், விவசாய உர உற்பத்தி மற்றும் ஏற்றுமதி தடைபடும். இது உலக விவசாயத்தை பாதிக்கும். பயிரிடும் காலம் தொடங்கும் நேரத்தில் உர விநியோகத்தில் தடை ஏற்பட்டால், உணவு பற்றாக்குறை ஏற்படும்.
இதன் மூலம் உலக நாடுகளில் உணவு விலை உயர (food inflation) தொடங்கும். இது எண்ணெய் விலை உயர்வை விட நீண்டகால பாதிப்பை ஏற்படுத்தும். உலக விவசாயிகள் தற்போது உர பொருட்களை பதுக்கி வருகின்றனர். இது உர விலையை மேலும் உயர்த்தும்.
இந்தியாவுக்கு என்ன பாதிப்பு..?
இந்தியா உர இறக்குமதியில் பெரும்பாலும் வளைகுடா நாடுகளை சார்ந்துள்ளது. ஹார்முஸ் பாதை மூடப்பட்டால், உர விலை உயரும். இது விவசாய செலவை அதிகரிக்கும், இதன் பாதிப்பாக பயிர் உற்பத்தி குறையலாம். உணவு விலை உயரும்.
இது அன்றாட செலவுகளை பாதிக்கும். குறிப்பாக கிராமப்புற மக்களுக்கு இது பெரும் சுமையாக மாறும். இந்தியா உர உற்பத்தியை உள்நாட்டில் அதிகரிக்க முயல வேண்டும். ஆனால் தற்போது இறக்குமதி சார்பு அதிகம்.
மொத்தத்தில், ஈரான் மோதல் எண்ணெய் சந்தையை மட்டும் பாதிக்கவில்லை. உர விநியோகத்தையும் பெரிதும் பாதிக்கிறது என்பது உலக நாடுகள் உணர துவங்கியுள்ளது.


Click it and Unblock the Notifications