ஈரான் போர் உலகையே ஸ்தம்பிக்க வைத்துள்ளது. பிப்ரவரி 28ஆம் தேதி தொடங்கிய இந்த போர் ஒவ்வொரு நாளும் தீவிரமடைந்து வருகிறது. இஸ்ரேல், அமெரிக்கா, ஈரான் ஆகிய மூன்று நாடுகளும் போட்டி போட்டு கொண்டு குண்டுமழை பொழிகின்றன.
இப்படி வான்வெளி தாக்குதல்கள், ஏவுகணை வீச்சுகள் என கண்ணுக்கு தெரிந்த தாக்குதல்களுக்கு மத்தியில் அமெரிக்க ராணுவம் கண்களுக்கு தெரியாத மறைமுக தாக்குதல்களையும் எடுத்து வருகிறது. இலங்கை அருகே இருந்த ஈரான் போர்க்கப்பல் ஒன்று திடீரென நீரில் மூழ்கியது. இதன் பின்னணியில் அமெரிக்கா இருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

ஈரானின் போர்க்கப்பல்களை வீழ்த்த அமெரிக்கா புதிய உத்திகளை கையாண்டு இருப்பது தெரிய வந்திருக்கிறது. அமெரிக்கா நீர்மூழ்கி கப்பல்கள் மூலம் ஈரான் போர்க்கப்பல்களை தகர்த்து வருகிறது. உலகிலேயே வலிமையான கடற்படை கொண்ட நாடுகளில் ஈரானும் ஒன்று. புதிய போர்க்கப்பல்களை அவ்வப்போது தாங்களே உருவாக்கி வளைகுடா மற்றும் இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிறுத்தி வைக்கும்.
இந்த சூழலில் தான் அமெரிக்கா ஈரான் நாட்டின் மீது மட்டுமில்லாமல் ஈரான் போர்க்கப்பல்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. நீர்மூழ்கி கப்பல்கள் மூலம் தேடி தேடி ஈரான் கப்பல்களை தாக்கி தகர்க்கிறது அமெரிக்கா. அப்படி தான் இலங்கை அருகே இந்திய பெருங்கடலில் இருந்த ஈரான் போர்க்கப்பல் மீது நீர்மூழ்கி கப்பல் மூலம் தாக்குதல் நடத்தி கடலில் மூழ்க செய்துள்ளனர்.
இலங்கைக்கு அருகே சென்று கொண்டிருந்த போது ஈரானின் IRIS Dena போர் கப்பல் திடீரென கடலில் மூழ்கியது. அமெரிக்க ராணுவம் நீர்மூழ்கி கப்பல்கள் மூலம் போர்க்கப்பல் மீது தாக்குதல் நடத்தியதே இதற்கு காரணம் என தகவல் வெளியாகி இருக்கிறது. தகவல் அறிந்த இலங்கை ராணுவம் மற்றும் கடற்படையினர் உடனே மீட்பு பணிகளை தொடங்கினர். தாக்குதல் நடந்த போது கப்பலில் 180 பேர் இருந்ததாக சொல்லப்படுகிறது. இதில் 78 பேர் காயமடைந்திருக்கின்றனர், 100க்கும் அதிகமானவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
இலங்கை ராணுவமும் பாதுகாப்புத் துறை அமைச்சகமும் தற்போது தேடுதலை தீவிரப்படுத்தி இருக்கிறது. கப்பல்கள் மற்றும் ஹெலிகாப்டர்களை கொண்டு மீட்பு பணி நடந்து வருவதாக தெரிவித்துள்ளது. இந்த IRIS Dena போர்க்கப்பல் 2021 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டு நாட்டிற்காக அர்ப்பணிக்கப்பட்டது. அமெரிக்கா அனைத்து வழிகளிலும் ஈரான் மீது தாக்குதலை தீவிரப்படுத்தி இருக்கிறது. இது 11 போர்க்கப்பல்களை வீழ்த்தி இருப்பதாக தெரிவித்துள்ளது. அதே வேளையில் இந்த தாக்குதல் இந்திய பெருங்கடல் வரை நெருங்கி இருப்பதும் கவலையை ஏற்படுத்துகிறது.


Click it and Unblock the Notifications