இஸ்ரேல் கடந்த வாரம் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா மரணம் அடைந்ததிற்கும், ஹமாஸ் தலைவரின் மரணத்திற்கும் பழிவாங்க வேண்டும் என்பதற்காக ஈரான் செவ்வாய்க்கிழமை இரவு இஸ்ரேல் மீது கிட்டத்தட்ட 400 ஏவுகணைகளை ஏவியது. இதில் பெரும்பாலான ஏவுகணைகள் இஸ்ரேலை தாக்கியது மட்டும் அல்லாமல் குறிப்பிடத்தக்க அளவிலான சேதத்தையும் ஏற்படுத்தியுள்ளதால் இஸ்ரேலின் பதில் தாக்குதல் மிகவும் மோசமானதாக இருக்கும் என அச்சம் மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டு உள்ளது.
இவை அனைத்தையும் விட முக்கியமாக இஸ்ரேலின் ஐயன் டோம் இந்த தாக்குதலில் சரியாக இயங்கவில்லை என்றும் கூறப்படுகிறது, மறுபுறம் ஈரான் தாக்குதல் குறித்து மோசாட்-க்கு எவ்விதமான தகவலையும் முன்கூட்டியே பெறவில்லை என்ற கருத்தும் நிலவுகிறது. ஈரானின் நேற்றைய தாக்குதல் மூலம் இஸ்ரேல் பாதுகாப்புத் துறையும், உளவுத் துறையில் இருக்கும் ஓட்டையும் வெளிச்சத்திற்கு வந்துள்ளதாகக் கருத்து நிலவுகிறது.

இஸ்ரேல் கடந்த ஒரு வருடமாகத் தனது அண்டை நாடுகள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் காரணத்தால், ஈரானின் தாக்குதலை உலகம் முழுவதும் இருக்கும் பாலஸ்தீன மக்களின் ஆதரவாளர்கள் கொண்டாடினர். பாலஸ்தீன மக்களின் ஆதரவாளர்களின் கொண்டாட்ட வீடியோ, புகைப்படங்கள் டிவிட்டரில் மலைப்போல் குவிந்துக்கிடக்கிறது. இதேவேளையில் இஸ்ரேல் இதற்குப் பதிலடி கொடுக்கும் என்பதையும் திட்டவட்டமாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் - ஈரான் நாட்டிற்கு மத்தியிலான இந்த தாக்குதல் இரு நாடுகளுக்கு மத்தியிலானது இல்லை, ஒட்டுமொத்த மத்திய கிழக்கு நாடுகளையும் உள்ளடக்கியது. இதேபோல் இஸ்ரேல் நாட்டிற்கு அமெரிக்க ராணுவம், அமெரிக்க அரசு அதிகப்படியான உதவிகளைச் செய்து வருகிறது. எனவே இது உலக போராகக் கூட மாறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.
இஸ்ரேல் - ஈரான் மத்தியிலான போர் மூலம் அதிகம் பாதிக்கப்படப் போவது கச்சா எண்ணெய் தான், சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையில் ஈரான் பங்கீடு கணிசமாக இருப்பது மட்டும் அல்லாமல் பல நாடுகளுக்குத் தினசரி அடிப்படையிலும் சப்ளை செய்து வருகிறது. இந்த நிலையில் இந்த தாக்குதல் மூலம் ஈரான் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்படும்.
கடந்த சில நாடுகளாக கச்சா எண்ணெய் விலை குறைந்து வந்த நிலையில் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறையும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் நேற்றைய தாக்குதல் மூலம் கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் தடாலடியாக அதிகரித்துள்ளது.
இன்று காலை வர்த்தகத்தில் WTI கச்சா எண்ணெய் விலை 1.75 சதவீதம் அதிகரித்துள்ளது, இதேபோல் ஐரோப்பிய சந்தையில் முக்கிய ஆதாரமாக இருக்கும் பிரெண்ட் கச்சா எண்ணெய் 1.60 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு கச்சா எண்ணெய் வர்த்தக சந்தையில் பெரும் பாதிப்பை ஏற்பட கூடும். மேலும் இந்த விலை உயர்வு உடனே நிறுத்தப்படாது, தொடர்ந்து அடுத்த சில நாட்களுக்கு இருக்கும் என்பது தான் முக்கியமான பிரச்சனை.
இதனால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறைப்பிற்கான வாய்ப்பு மொத்தமாக மறைந்துள்ளது.


Click it and Unblock the Notifications