நாடு முழுவதும் மகிழ்ச்சி பொங்க கொண்டாடப்படும் தீபாவளிப் பண்டிகை இந்த ஆண்டு திங்கட்கிழமை வருகிறது. பண்டிகை என்றாலே, வெளியூர்களில் வசிக்கும் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று குடும்பத்துடன் கொண்டாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
திங்கட்கிழமை தீபாவளி வருவதால், அதனுடன் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறையும் இணைந்து நீண்ட வார விடுமுறையாக மாறியுள்ளது. இதனால், பெரு நகரங்களில் வசிக்கும் பொதுமக்கள் பலரும் இன்றில் இருந்தே (வெள்ளிக்கிழமை) தங்கள் சொந்த ஊர்களை நோக்கிப் படையெடுக்கத் தொடங்கிவிட்டனர்.

ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான மக்கள் ஊர்களை விட்டு வெளியேறுவதால், முக்கிய நகரங்களின் சாலைகள் கடும் போக்குவரத்து நெரிசலால் ஸ்தம்பித்து போயுள்ளன. பல மணி நேரம் வாகனங்கள் நகராமல் ஆமை வேகத்தில் ஊர்ந்து செல்வதால் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
பயணிகளின் வசதியைக் கருத்தில் கொண்டு, அரசு மற்றும் தனியார் போக்குவரத்துத் துறைகள் சார்பில் சிறப்புப் பேருந்துகளும், இந்திய ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால், இந்தச் சிறப்புச் சேவைகளிலும் நிலைமை கட்டுக்கடங்காமல் உள்ளது. சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்துவிடுகின்றன.
IRCTC இணையதளம் முடக்கம் : இதனால், கடைசி நேரத்தில் பயணச்சீட்டு கிடைக்காமல், தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல முடியாமல் ஆயிரக்கணக்கான மக்கள் கடும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். இந்த சூழலில் தான், தீபாவளியை முன்னிட்டு தட்கல் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய முயற்சிப்பவர்களால் ரயில்வே இணையதளம் முடங்கியுள்ளது.
ஏற்கனவே பண்டிகை கால சிறப்பு ரயில்களிலும் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துள்ள நிலையில், நாளை பயணிக்க தட்கல் முன்பதிவை நம்பியிருந்த பயணிகள், இணையதளம் முடங்கியதால் ஏமாற்றமடைந்தனர். இதுகுறித்து வெளியான தகவலில், ஒரு மணி நேரத்திற்கு ரயில் டிக்கெட் முன்பதிவு மற்றும் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளை ரத்து செய்யும் சேவை ஆகியவை இயங்காது என்றும் தெரிவிக்கப்பட்டது.
மீண்டும் செயல்பாட்டுக்கு வந்த இணையதளம் : இந்தத் திடீர் முடக்கம் குறித்து ஐஆர்சிடிசி செய்தித் தொடர்பாளர் விளக்கம் அளித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில், "தற்காலிகமாகச் சில தொழில்நுட்பச் சிக்கல்கள் ஏற்பட்டன. அவை உடனடியாகக் கவனிக்கப்பட்டுச் சரிசெய்யப்பட்டுவிட்டன. தற்போது இணையதளம் மீண்டும் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது" என்று தெரிவித்துள்ளார்.
ஐஆர்சிடிசியின் விரைவான செயல்பாட்டால் சேவை மீண்டும் வழங்கப்பட்டு நிலைமை சீராகியுள்ளது. எனவே, பயணிகள் இப்போது வழக்கம்போல் தங்கள் பயணச் சீட்டுகளை முன்பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில்வேயின் முக்கியச் சேவை செயலிழந்ததால், பயணிகளுக்கு சிறிது நேரம் கலக்கத்தை ஏற்படுத்தியது என்பதில் சந்தேகமில்லை.


Click it and Unblock the Notifications