இந்தியாவின் மிகப்பெரிய ரயில்வே புக்கிங் சேவை தளமான ஐஆர்சிடிசி தளத்தில் புதிதாக ஆன்லைன் பஸ் புக்கிங் சேவை அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இந்தியாவில் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ள ஆன்லைன் பஸ் புக்கிங் சேவை துறையில் இந்தியா முழுவதையும் இணைக்கும் அரசு பேருந்துகளின் பங்கீடு மிகவும் குறைவாக இருக்கும் நிலையில் இந்தப் பிரச்சனையைத் தீர்க்கும் வண்ணம் ஐஆர்சிடிசி களத்தில் இறங்கியுள்ளது.
ஐஆர்சிடிசி தளத்தில் ஏற்கனவே ரயில் மற்றும் விமானச் சேவைக்கான டிக்கெட்களை விற்பனை செய்து வரும் நிலையில், தற்போது பஸ் புக்கிங் சேவையை அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

இந்நிலையில் ஐஆர்சிடிசி அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆன்லைன் பஸ் புக்கிங் சேவைக்காக அரசு பேருந்து அமைப்புகள் மட்டும் அல்லாமல் தனியார் பேருந்து நிறுவனங்களையும் தனது தளத்தில் இணைத்துள்ளது. இதன் மூலம் 50,000 பஸ் நிறுவனங்களுடன் சுமார் 22 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களை இணைக்கும் பேருந்து சேவைகளை ஐஆர்சிடிசி தளத்தில் அளிக்க உள்ளது.
இத்தளத்தில் அதிகப்படியாக 6 பேருக்கு டிக்கெட் புக் செய்ய முடியும். டிக்கெட் புக் செய்யும் முன் பஸ்-ன் புகைப்படத்தை வாடிக்கையாளர்கள் பார்த்து டிக்கெட் புக் செய்யும் வசதி இதில் உண்டு.
மேலும் இத்தளத்தில் UPSRTC, APSRTC, GSRTC, OSRTC, Kerala RTC, எனப் பல மாநிலங்களின் அரசு போக்குவரத்து அமைப்புகளின் பஸ்களும் இருக்கும் காரணத்தால் வாடிக்கையாளர்கள் தங்களது விருப்பத்திற்கு ஏற்ப பஸ்களைப் புக் செய்ய முடியும் என அறிவித்துள்ளது.
மேலும் ஆன்லைன் பஸ் புக்கிங் சேவையை ஐஆர்சிடிசி மொபைல் செயலியில் மார்ச் மாத்திற்குள் இணைக்கப்பட உள்ளதாகவும், பிற முன்னணி ஆன்லைன் பஸ் புக்கிங் தளத்தில் இருக்கும் அனைத்து சேவைகளும் இந்தச் செயலியில் இருக்கும் எனும் ஐஆர்சிடிசி அமைப்பு தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications