பெங்களூரு: இந்தியாவின் பெருநகரங்களில் வாழ்க்கை செலவினங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இந்திய நகரங்களிலேயே பெங்களூருவில் தான் வாழ்க்கை செலவினங்கள் மிக அதிகமாக இருக்கிறது என ரெடிட் தளத்தில் ஒரு நபர் வெளியிட்டுள்ள பதிவு வைரலாகி இருக்கிறது.
பெங்களூரு நகர வாழ்க்கை செலவினம் குறித்து ஒரு நபர் வெளியிட்டுள்ள பதிவில் " மக்களே, நான் புனே, அகமதாபாத் , மும்பை ஆகிய நகரங்களில் வசித்திருக்கிறேன். ஐதராபாத் மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்களில் எனக்கு நண்பர்கள் இருக்கிறார்கள். இந்த அனைத்து நகரங்களிலும் ஆட்டோவில் தொடங்கி சாலையோரம் கிடைக்கும் உணவுகள் வரை அனைத்துமே மலிவு விலையில் இருக்கின்றன. ஆனால் பெங்களூருவில் எல்லாமே விலை அதிகமாக இருக்கிறது" என தெரிவித்துள்ளார் . பெங்களூருவில் ஒரு சிறிய குடும்பம் வசிப்பதற்கு மாதம்தோறும் 50,000 இல் இருந்து 60,000 ரூபாய் வருமானம் கிடைத்தால் கூட போதாது என தன்னுடைய ஆதங்கத்தை வெளியிட்டுள்ளார்.

மும்பை நகரில் தான் வசித்தபோது தனக்கு கிடைத்த அனுபவத்தை இந்த பதிவில் அவர் குறிப்பிட்டிருக்கிறார். அதில் மும்பையின் ரயில் நிலையத்திலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு இடத்திற்கு நான் செல்ல வேண்டும் அங்கு இருக்கக்கூடிய ஆட்டோ ஓட்டுநர் என்னை 30 ரூபாயிலேயே அந்த இடத்திற்கு அழைத்து சென்று விட்டார், அங்கே சாலையோரங்களில் 10 ரூபாயிலிருந்து 15 ரூபாய்க்கு நம்மால் உணவு வாங்கி உண்ண முடியும். ஆனால் பெங்களூருவில் எல்லாமே விலை அதிகம் சாலையோரங்களில் உணவு வாங்கினால் கூட நாம் அதற்கு பல நூறு ரூபாயை செலவிட வேண்டி இருக்கிறது என குறிப்பிட்டு இருக்கிறார்.
பெங்களூருவில் வீட்டு வாடகைகள் மிக அதிகம் என்றும் அகமதாபாத் போன்ற நகரங்களில் அதில் பாதி விலையிலேயே நம்மால் நல்ல வீட்டினை வாடகைக்கு எடுக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார். அவருடைய இந்த பதிவு நூற்றுக்கணக்கானவர்களின் கவனத்தை பெற்றிருக்கிறது. பலரும் இந்தியாவின் பெருநகரங்களில் வாழ்க்கை செலவினங்கள் மற்றும் அங்கே கிடைக்கக்கூடிய வசதிகள் குறித்து விவாதிக்க தொடங்கியுள்ளனர்.
ஒரு பயனர் பெங்களூருவில் எல்லாமே காஸ்ட்லியாக இருக்கிறது என்பது உண்மைதான் அதற்காக மும்பையில் பொருட்களின் விலை குறைவாக இருக்கிறது என கூறாதீர்கள் என தெரிவித்துள்ளார். அண்மைக்காலமாக ஐதராபாத் கூட பெங்களூரு நகரம் போல மாறி வருகிறது அங்கும் வாழ்க்கை செலவினங்கள் அதிகரிக்க தொடங்கி விட்டன என ஒரு பயனர் கூறியிருக்கிறார். ஒரு நபர் நான் தற்போது புனேவில் வசிக்கிறேன் ஆனால் பெங்களூருவில் கிடைப்பது போன்ற ஒரு உள்கட்டமைப்பு வசதி புனேவில் கிடையாது நான் மீண்டும் பெங்களூருக்கே வரவேண்டும் என நினைக்கிறேன் என கூறி இருக்கிறார்.
ஒரு பயனர் பெங்களூருக்கு பலரும் வருகை தருவதற்கு காரணம் அங்கே பெரிய பெரிய ஐடி நிறுவனங்கள் இருக்கின்றன எனவே அங்கே டிமாண்ட் அதிகமாக இருக்கிறது என்பதால் அனைத்து பொருட்களின் விலையும் அதிகமாக இருக்கிறது என கூறியிருக்கிறார். பலரும் பெங்களூருவில் ஆட்டோ வாடகை மற்ற நகரங்களுடன் ஒப்பிடும்போது மிக அதிகமாக இருக்கிறது என கருத்து தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications