ரியல் எஸ்டேட் முதலீடு தொடர்பான இந்திய மக்களின் மனோபாவத்தை விஸ்டம் ஹாச் நிறுவனர் அக்ஷத் ஸ்ரீவாஸ்தவா கடுமையாக விமர்சித்துள்ளார். ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்யும் போது தனிநபருக்கு தான் அதிகப்படியான நிதி இழப்பு ஏற்படுத்துகிறது, கட்டுமான நிறுவனங்கள் தான் இதில் அதிகப்படியான லாபத்தை செய்து வருகின்றனர் என்று கூறியுள்ளார்.
இந்தியாவில் வீடு வாங்குவது முதலீடு என்ற பொதுவான கருத்தை அக்ஷத் ஸ்ரீவாஸ்தவா உடைத்துள்ளார். இந்தியாவில் வீடு வாங்குவது பெரும்பாலும் கட்டுமான நிறுவனங்களுக்கு லாபம் தருகிறதே தவிர, தனிநபர் வாங்குவோருக்கு நீண்ட கால லாபத்தை அரிதாகவே தருகிறது என்று கூறியுள்ளார்.

"வீடு வாங்குவதற்கு மூன்று நியாயமான காரணங்கள் உள்ளன" என்று கூறும் அக்ஷத் ஸ்ரீவாஸ்தவா, புதிய விளக்கத்தை முன்வைக்கிறார்.
முதலாவது, வசிக்க வேண்டுமென ஒரு வீட்டை வாங்கினால் அது முதலீடு அல்ல, உங்கள் விருப்பத்தின் பெயரிலும், அடிப்படை தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டும் வாங்குகிறீர்கள்.
இரண்டாவது, வீடு வாங்கினால் அதன் மூலம் ஒரு வணிகத்தை தொடங்கலாம், எடுத்துக்காட்டாக, ஏர்பிஎன்பி. இது உங்கள் வருவாயை மேம்படுத்துகிறது. இதன் மூலம் வெறுமென நிலம் விலை உயர்வு, மாத வாடகை போன்ற குறுகிய வட்டத்திற்குள் நுழையாமல் உங்கள் முதலீட்டுக்கு அதிகப்படியான வருமானம் கிடைக்கும்.
மூன்றாவது, நீங்கள் ஒரு கடுமையான சூழ்நிலையில் வீடு வாங்கினாலும் அதன் மூலம் நீண்ட கால வாடகை வருமானம் வருமாயின் அது நியாயமாக இருக்கும். ஆனால், இந்தியாவின் எந்த ஒரு முக்கிய நகரத்திலும் இது அரிதாகவே நடக்கிறது என்று கூறுகிறார்.
"இந்தியாவில் வீட்டு விலை கடந்த 3 ஆண்டுகளில் இரட்டிப்பாகியுள்ளது, எனவே அடுத்த 3 ஆண்டுகளிலும் அது இரட்டிப்பாகும் என்று நினைக்கிறீர்களா?" என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த விலை உயர்வு கட்டுமான நிறுவனத்தின் விலை.
கட்டுமான நிறுவனங்கள் செயல்படுத்தும் ஒரு திட்டத்தில் டவர் ஏ-வை வெற்றிகரமாக கட்டி முடித்த பிறகு, டவர் பி-யை சந்தையின் டிமாண்ட் அடிப்படையில் தடாலடியாக உயர்த்தி விற்பார்கள். இந்த விலை தான் மேலே கூறப்பட்ட இரட்டிப்பு லாபம். இது நீங்கள் 3 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய டவர் ஏ-யின் மதிப்பு அல்ல என்று ஸ்ரீவாஸ்தவா விளக்குகிறார்.
2024 ஆம் ஆண்டில், நாட்டின் முதல் ஏழு நகரங்களில் சொத்து விலைகள் சராசரியாக 21% அதிகரித்துள்ளன, மக்கள் மத்தியில் புதிய வீடுகளுக்கான தேவை அதிகமாக இருக்கும் காரணமாக இது ஏற்பட்டது. குறிப்பாக, டெல்லி-என்சிஆரில் 30% விலை உயர்வு பதிவாகியுள்ளது. 2023 ஆம் ஆண்டில் ஒரு சதுர அடிக்கு ₹5,800-லிருந்து 2024 ஆம் ஆண்டில் ₹7,550 ஆக உயர்ந்துள்ளது.
2025 ஆம் ஆண்டிலும் இந்திய ரியல் எஸ்டேட் துறையில் விலை உயர்வு ஒரு இலக்கமாக குறையக்கூடும் என்று நிபுணர்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் இதே வேளையில் இந்தியா முழுவதும் நிலம் மற்றும் கட்டுமான செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், நிலையான தேவை காரணமாக விலையில் வீழ்ச்சி ஏற்படாது எனவும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications