தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது . இதற்கான அரசியல் களம் தற்போதே பரபரப்பை காட்டத் தொடங்கிவிட்டது. இந்த அரசியல் களத்தில் நாள்தோறும் பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணம் இருக்கின்றன. அந்த வகையில் தற்போது புதிதாக ஒரு தகவல் பரவி வருகிறது.
தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருக்கும் மு. க. ஸ்டாலினின் பேரனும், துணை முதலமைச்சரான உதயநிதி ஸ்டாலினின் மகனமான இன்பநிதி பற்றிய தகவல் தான் அது. கடந்த சில ஆண்டுகளாகவே இன்பநிதி தன்னுடைய தந்தை உதயநிதியோடு பல்வேறு பொது நிகழ்வுகளில் கலந்து கொண்டு வருகிறார். கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நிகழ்வில் கூட பார்வையாளராக இன்பநிதி பங்கேற்றார்.

உதயநிதிக்கு கட்சியில் புதிய பொறுப்புகள் வழங்கப்படும் நிலையில் அவரது மகன் இன்பநிதியும் படிப்படியாக தங்கள் குடும்ப தொழில்களை நிர்வாகம் செய்யும் வகையில் பொறுப்புகள் வழங்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன. அண்மையில் கூட கலைஞர் டிவி நிர்வாகத்தில் இன்பநிதிக்கு பொறுப்பு வழங்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் தன் தந்தையால் தொடங்கப்பட்ட ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனத்தின் தலைமை பொறுப்பை இன்பநிதி ஏற்க இருப்பதாக சில ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. ரெட் ஜெயிண்ட் மூவிஸின் தலைமை செயல் அதிகாரி பொறுப்பை இன்பநிதி ஏற்க இருக்கிறார் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2008ஆம் ஆண்டு உதயநிதி ஸ்டாலினால் தொடங்கப்பட்டது தான் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம். முதன்முதலில் இந்நிறுவனம் நடிகர் விஜய்யின் குருவி படத்தை தான் தயாரித்து வெளியிட்டது. படிப்படியாக பல்வேறு பெரிய நட்சத்திரங்களின் படங்களையும் இந்நிறுவனம் தயாரித்து வெளியிட தொடங்கியது. இது தவிர வேறு நிறுவனங்களோடு கூட்டாக படம் தயாரிப்பது, வெளியிடுவது உள்ளிட்ட பணிகளையும் மேற்கொள்கிறது.
தமிழ் சினிமாவில் 15 ஆண்டு காலமாக அசைக்க முடியாத திரைப்பட தயாரிப்பு நிறுவனமாக ரெட் ஜெயிண்ட்ஸ் மூவிஸ் நிறுவனம் இருக்கிறது. இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இந்த நிறுவனத்தின் இயக்குனராக அர்ஜுன் என்பவரும் துணை தயாரிப்பாளராக செண்பக மூர்த்தி என்பவரும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனத்தின் வருவாய் குறித்த தகவல்கள் பொதுவெளியில் வெளியிடப்படவில்லை இருந்தாலும் இந்த நிறுவனத்தின் ஆண்டு வருமானம் 5 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்குள் இருக்கும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் தான் தந்தையால் தொடங்கப்பட்ட ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பொறுப்பை 20 வயதான மகன் இன்பநதி பெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இவர் பொறுப்பேற்ற உடன், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு படத்தை இணைந்து தயாரிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது .


Click it and Unblock the Notifications