டெல்லி: உலகிலேயே வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் பொருளாதாரம் என இந்தியாவை தான் சுட்டுக்காட்டுகிறார்கள். ஆனால் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது குறிப்பிட்ட துறைகளில் வளர்ச்சி குறைந்து இந்திய பொருளாதாரம் சரிவு பாதையில் செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய தொழில் துறை சார்ந்த செய்திகளை வழங்கும் ஜெயந்த் முந்த்ரா என்பவர் தன்னுடைய லிங்குடின் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் இதனை சுட்டிக்காட்டி உள்ள. இதற்காக அவர் எட்டு தரவுகளையும் முன்வைத்துள்ளார். முதலில் இந்தியாவில் கார் விற்பனை குறைந்திருப்பதை அவர் குறிப்பிடுகிறார். இதன்படி செப்டம்பர் மாதத்தில் இந்தியாவில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது கார்களின் விற்பனை 19% சரிவடைந்துள்ளது என கூறுகிறார்.

அதேபோல ஏப்ரல் முதல் ஆகஸ்டுக்கு இடைப்பட்ட காலத்தில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது நடப்பு ஆண்டில் டீசல் விற்பனை 1 சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ளதாம். மேலும் சேவைகளுக்கான பர்சேஸ் மேனேஜஸ் இன்டெக்ஸ் (Services Purchase Manager’s Index) என்பது செப்டம்பர் மாதத்தில் 57.7 புள்ளிகள் என குறைந்துள்ளது. இது கடந்த 10 மாதங்களில் இல்லாத சரிவு என கூறுகிறார்.
அடுத்ததாக பர்ச்சேஸ் மேனேஜர் இன்டெக்ஸ் (Purchase Manager’s Index) கடந்த எட்டு மாதங்களில் இல்லாத அளவாக செப்டம்பரில் 56.5 புள்ளிகள் என சரிவை கண்டுள்ளது என ஜெயந்த் முத்ரா தன்னுடைய பதிவில் குறிப்பிட்டார்.
இந்திய பொருளாதாரம் சரிவடைவதாக கூறும் அவர், இந்தியாவில் நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் வீட்டு கடன்கள் வழங்கப்பட்ட விகிதம் 9 சதவீதம் வரை சரிவை கண்டுள்ளது என்கிறார். அதேபோல வாகன கடன்கள் வழங்கும் அளவு வெறும் 2 சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ளது. ஜிஎஸ்டி வரி வசூல் கடந்த 40 மாதங்களில் இல்லாத அளவாக 6.5 சதவீதம் என்ற நிலைக்கு குறைந்துள்ளது.
இந்தியாவிலிருந்து ஏற்றுமதி கடந்த கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 38.3 மில்லியன் டாலர்களாக இருந்து நடப்பாண்டு ஆகஸ்ட் மாதத்தில் 34.7 மில்லியன் டாலர்கள் என குறைந்துள்ளது.
இந்தியாவில் நிலக்கரி ,எண்ணெய் மற்றும் மின்சார உள்ளிட்ட 8 முக்கிய தொழில்துறைகளின் வெளியீட்டை கண்காணிக்க கூடிய இன்டெஸ் ஆப் இண்டஸ்ட்ரியல் ப்ரோடெக்சன் ( index of industrial production ) கடந்த மூன்று ஆண்டுகளில் ஆகஸ்ட் மாதத்தில் முதன்முறையாக நெகட்டிவ் நிலையில் இருக்கிறது. எனவே இவை அனைத்துமே இந்திய பொருளாதாரம் மெதுவாக சரிவை நோக்கி செல்வதையே சுட்டிக்காட்டுகிறது என அவர் கூறுகிறார்.
மத்திய அரசுக்கு நேரடி வரி வசூல் மட்டும் எப்படி அதிகரித்திருக்கிறது என்பதற்கும் அவர் தன்னுடைய பதிவிலேயே பதிலளித்துள்ளார் . அதாவது மக்கள் சம்பாதிக்கும் பணத்தில் பெரும் பங்கு தொழில்களுக்கோ அல்லது விற்பனை நிறுவனங்களுக்கோ சந்தைகளுக்கோ போகாமல் வரி மூலம் நேரடியாக அரசுக்கே செல்கிறது என அவர் கூறுகிறார் . அவரது இந்த பதிவுக்கு ஆதரவாகவும் எதிராகவும் பலரும் பின்னூட்டங்களை பதிவு செய்துள்ளனர்.


Click it and Unblock the Notifications