நம் நாட்டில் கச்சா எண்ணெய் உற்பத்தி கணிசமான அளவு நடைபெறுகிறது. இருப்பினும் அது உள்நாட்டு தேவையில் 20 சதவீதத்தை மட்டுமே பூர்த்தி செய்கிறது. இதனால் இறக்குமதி வாயிலாக தேவையின் பெரும் பூர்த்தி செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால் உள்நாட்டில் பெட்ரோல். டீசல் விலை உயரும். தற்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு சுமார் 62 டாலர் என்ற அளவில் உள்ளது.
பிரெண்ட் கச்சா எண்ணெய்
ஒபெக் நாடுகளிலிருந்து அதிகரித்து வரும் சப்ளை மற்றும் அமெரிக்காவின் வரி போர் காரணமாக அதிகரித்து வரும் தேவை நிச்சயமற்ற தன்மைகளுக்கு மத்தியில் கடந்த ஒரு மாதமாக சர்வதேச சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 60 முதல் 66 டாலர் வரை ஏற்ற இறக்கமாக இருக்கிறது. இந்த சூழலில், புவிசார் அரசியல் பதற்றம் போன்ற காரணங்களால் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயருமா என்ற அச்சம் எழுந்துள்ளது. ஆனால், சப்ளை அதிகமாக உள்ளதால் கச்சா எண்ணெய் விலை 65 டாலர் என்ற அளவில்தான் இருக்கும என்று மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி நம்பிக்கை தெரிவித்தார்.

பெட்ரோலிய துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி இன்று ஒரு தொழில்துறை கூட்டத்தில் கலந்து கொண்டார். அந்த கூட்டத்தில் ஹர்தீப் சிங் பூரி பேசுகையில் கூறியதாவது: சந்தையில் அதிகமான சப்ளை இருப்பதால் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 85 டாலர் அல்ல 65 டாலருக்கு அருகில் இருக்கும் என்பது எனது கருத்து. எண்ணெய் சந்தையில் அதிக கூடுதல் உற்பத்தி திறன் ஆதிக்கத்தை செலுத்தும். இடையூறுகள் இருக்கும்போது கூட அதிக விநியோகம் கிடைக்கிறது என்பதை சந்தை அறிந்திருக்கிறது.
புத்திசாலித்தனம்
குறைந்த எண்ணெய் விலைகளால் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்துவதில் ஒருவர் புத்திசாலித்தனமாக இருக்க வேண்டும். நிச்சயமாக, உங்களிடம் மூலோபாய இருப்புகள் இருக்கும்போது, எண்ணெய் விலை குறைவாக இருக்கும்போது அவற்றை நிரப்ப விரும்புகிறீர்கள். நாட்டின் பகுதி காலியான மூலோபாய பெட்ரோலிய இருப்புகளை (எஸ்பிஆர்) நிரப்ப இந்த ஆண்டு பட்ஜெட்டில் அரசாங்கம் ரூ.5,600 கோடியை ஒதுக்கியுள்ளது.
ஈரான் மற்றும் ரஷ்யா மீதான தடைகள் நீக்கப்பட்டால், எதிர்காலத்தில் சர்வதேச அளவில் சப்ளைகள் மேலும் உயரக்கூடும். ஒரு கட்டத்தில் (தடைகள்) பிரச்சினை தீர்க்கப்படும் என்று நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன். ஈரான் மீண்டும் முக்கிய சப்ளையராக மாறும். ரஷ்யாவும் கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார். கச்சா எண்ணெய் விலை பெரிய அளவில் உயர வாய்ப்பில்லை என்று மத்திய அமைச்சர் நம்பிக்கையாக கூறியிருப்பது, தற்போதைய சூழலில் உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம் இல்லை என்பதை உறுதிப்படுத்துவதாக உள்ளது.
ஈரான்
2018ம் ஆண்டு வரை இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியில் பத்தில் ஒரு பங்கை ஈரான் கொண்டிருந்தது. அப்போது ஈரான் மீது அமெரிக்க தடைகள் மீண்டும் விதிக்கப்பட்டதால் ஈரானிய கச்சா எண்ணெய் சப்ளை நின்றது. அணு ஆயுத திட்டத்தை நிறுத்துவதாக ஈரான் வாக்குறுதி அளித்தால் அதற்கு பதிலாக தடைகளை நீக்கும் ஒப்பந்தத்தை மேற்கொள்ள அமெரிக்கா தற்போது ஈரானுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.


Click it and Unblock the Notifications