பல வாரங்களாக ஒரு சிறிய வர்த்தகப் பகுதிக்குள்ளேயே முடங்கிக் கிடந்த வெள்ளி உலோகம், தற்போது மீண்டும் ஒரு பெரிய விலை ஏற்றத்திற்கு தயாராகி வருவதாக தெரிகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் 37 டாலர் என்ற குறைந்த விலையில் இருந்து வேகமாக உயர்ந்து 54 டாலர் என்ற உச்சத்தைத் தொட்ட வெள்ளி, அதன்பிறகு சற்றே அமைதியானது.
ஆனால், கடந்த சில மாதங்களாக, 46 டாலர் முதல் 54 டாலர் வரையிலான ஒரு குறிப்பிட்ட விலைக்குள் ஏறி இறங்கிக் கொண்டிருந்தது. இந்த வெள்ளி விலை நிலவரம் சந்தை நிபுணர்களின் பார்வையைத் திரும்பப் பெற்றுள்ளது. ஏனென்றால், உலகளாவிய சந்தையில் இருக்கும் அபாயங்களை மக்கள் கையாள்வதை பொறுத்து, இந்த உலோகத்தின் விலை ஒரு புதிய பாதையில் திரும்ப வாய்ப்புள்ளது.

இதுகுறித்து சாம்கோ செக்யூரிட்டீஸ் (SAMCO Securities) நிறுவனத்தின் சந்தை ஆராய்ச்சி தலைவரான அபூர்வா ஷேத் கூறுகையில், வெள்ளியின் தற்போதைய விலை நகர்வுகள் மிகவும் முக்கியமான ஒரு தொழில்நுட்ப வடிவத்தை உருவாக்கியுள்ளதாக கூறியுள்ளார். இந்த வடிவம், வர்த்தக உலகில் மிகவும் பிரபலமான 'கப் அண்ட் ஹேண்டில்' என்பதாகும். இந்த அமைப்பு உருவானால், அடுத்து பெரிய விலை ஏற்றம் இருக்கும்.
இந்த அமைப்பை குறித்து விளக்கும் ஷேத், "வெள்ளியின் விலை குறைந்தபோதெல்லாம் 46 டாலர் என்ற அளவில் உறுதியான ஆதரவு கிடைத்தது. அதே சமயம், விலை உயர்ந்தபோதெல்லாம் 54 டாலர் என்ற உச்சத்தை நெருங்கியதும் ஒரு தடுமாற்றத்தை சந்தித்தது. இந்த தொழில்நுட்ப அமைப்பு ஒரு முக்கியமான நிலையை நெருங்கிக் கொண்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த அமைப்பின் உயரம் காட்டுவது என்னவென்றால், விலை உச்சத்தை உடைக்கும் புள்ளியில் இருந்து, வெள்ளி இன்னும் சுமார் 8 டாலர் முதல் 9 டாலர்கள் வரை உயரக்கூடும். இதன் விளைவாக, வெள்ளியின் விலை அவுன்ஸ் ஒன்றுக்கு 63 டாலர் முதல் 64 டாலர் என்ற நிலைகளை நோக்கி செல்ல வாய்ப்புள்ளது" என்று அவர் கணித்துள்ளார்.
தற்போது, வெள்ளியின் விலை ஏற்கனவே இருந்த உச்ச வரம்பான 54 டாலரை உடைக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறது. ஷேத்தின் கருத்தின்படி, வெள்ளியின் விலை 54 டாலருக்கு மேல் நிலைத்து நின்றால் (சந்தையின் இறுதிக் கட்டத்தில் அந்த விலைக்கு மேல் இருந்தால்), அது இந்த வடிவத்தில் இருந்து விலகி, புதிய பெரிய ஏற்றத்தை உறுதி செய்துவிடும். இன்னும் விலை உறுதியாக உச்சத்தை தாண்டவில்லை என்றாலும், வெள்ளியின் ஒட்டுமொத்தப் போக்கு மிகவும் பலமாகவே இருக்கிறது.
ஷேத் ஆய்வுப்படி, தொடர்ந்து உருவாகும் Higher Highs and Higher Lows ஆகியவை, சந்தையில் தொடர்ந்து வாங்கும் ஆர்வம் இருப்பதை காட்டுகின்றன. விலை 46 அமெரிக்க டாலர் என்ற ஆதரவு மண்டலத்திற்கு மேலே இருக்கும் வரை, இந்த அமைப்பு வலுவாகவே இருக்கும், மேலும் சிறிய விலை குறைப்புகள் வந்தாலும், அது உடனே வாங்குபவர்களால் ஈர்க்கப்பட்டு விலை மீண்டும் உயரும்" என்று அவர் கூறுகிறார்.
வெள்ளி விலை, ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு அமைதியாக இருந்த பிறகு, மிகப்பெரிய மற்றும் வேகமான நகர்வுகளை செய்யும் தன்மையை கொண்டுள்ளது என்று ஷேத் கூறுகிறார். வெள்ளியின் இந்த இயல்பும், இப்போது உருவாகியுள்ள தொழில்நுட்ப அமைப்பும் சேர்ந்து, இந்த உலோகம் அடுத்த பெரிய ஏற்றத்திற்குத் தயாராகிறது என்பதை உறுதிப்படுத்துகின்றன.
முக்கிய விலை நிலைகளுக்கு அருகில் இருப்பதால், வர்த்தகர்கள் அனைவரும் இப்போது வெள்ளியை மிகவும் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர். இந்த விலை உயர்வு நடக்குமா என்பதைப் பார்க்க வேண்டும். ஆனால், ஷேத் கருத்துப்படி, இப்போது நிலவும் சூழல், கடந்த காலத்தில் மிகப்பெரிய விலை மாற்றங்களுக்கு காரணமாக இருந்த அமைப்புகளையே ஒத்திருக்கிறது என்று தெரிகிறது.


Click it and Unblock the Notifications