ஜனவரி 20ஆம் தேதி அமெரிக்காவின் 47வது அதிபராகப் பதவியேற்க உள்ள டொனால்டு டிரம்ப் ஜனவரி 18ஆம் தேதி $TRUMP என்ற பெயரில் அதிகாரப்பூர்வ கிரிப்டோகாயின்-ஐ அறிமுகம் செய்துள்ளார். இதை மீம் காயின் வகையில் அறிமுகம் செய்து DeFi/Cefi பிரிவில் டிரம்ப் நிறுவனம் இயங்க உள்ளதாக டிரம்ப் மகன் எரிக் டிரம்ப் அறிவித்தார்.
$Trump கிரிப்டோ காயின் அறிமுகம் செய்த நொடியில் இருந்து தாறுமான உயர்வைப் பதிவு செய்துள்ளது. ஒவ்வொரு மணிநேரத்திற்கும் இதன் சந்தை மதிப்பு 100-150 மில்லியன் டாலர் மதிப்பில் அதிகரித்து வருகிறது. வெறும் 0.18 டாலருக்கு அறிமுகம் செய்யப்பட்டு தற்போது 71 டாலருக்கு வர்த்தகமாகி வருகிறது.

இந்த நிலையில் இந்த $Trump கிரிப்டோ காயின் உருட்டா..? உண்மையா..? என்பது குறித்து மக்கள் மத்தியில் பெரும் குழப்பம் உள்ளனர். இதை டிரம்ப் டிவிட்டர் கணக்கின் தகவல் வைத்தே ஒருவர் தெரிந்துகொள்ள முடியும். ஆனால் பலர் இதைக் கவனிக்கவில்லை என்பது இந்த தடாலடி உயர்வு மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது.
டொனால்டு டிரம்ப் டிவிட்டர் தளத்தில் வெளியிட்டு பதிவில் சில முக்கியமான தகவல்களையும், இணைய தள முகவரியும் வெளியிட்டு உள்ளார். இதில் என்னுடைய அதிகாரப்பூர்வ டிரம்ப் மீம் காயின் அறிமுகம் செய்கிறேன் என்பத பதிவு இதுவரையில் 80 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.
அமெரிக்காவின் வெற்றிக்காக என்னுடன் இருந்தவர்கள் அனைவரும் கொண்டாடும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. என்னுடைய ஸ்பெஷல் டிரம்ப் கம்யூனிட்டியில் சேருங்கள். உங்களுக்கான டிரம்ப் காயினை வாங்குங்கள். உடனே gettrumpmemes.com என்ற தளத்திற்கு செல்லுங்கள் என தெரிவித்தார்.

இந்த gettrumpmemes.com அதிகாரப்பூர்வ இணையதளத்தின்படி, டிரம்ப் மீம்ஸ் என்பது "$TRUMP" என்ற சின்னத்தை ஆதரவளிக்கும், இந்த ஐடியா-வை விரும்புவோர் ஆதரவளிக்கும் ஒரு கலைப்படைப்பாகும். இது முதலீட்டுக்கானதோ அல்லது முதலீட்டு ஒப்பந்தம் அல்லது கடனுக்கான பிணையாகவோ எடுத்துக்கொள்ளக் கூடாது என அறிவிக்கப்பட்டு உள்ளது.
அமெரிக்க நேரத்தில் 18ஆம் தேதி காலை 10 மணிக்கு அறிமுகம் செய்யப்பட்ட டிரம்ப் காயின் தற்போது 985.46 சதவீதம் உயர்ந்து 70.48 டாலரை தொட்டுள்ளது. இதன் மூலம் டிரம்ப் காயின் சந்தை மதிப்பு யாரும் எதிர்பார்க்காத வகையில் 14.17 பில்லியன் டாலர் வரையில் உயர்ந்துள்ளது.

டொனால்டு டிரம்ப்-ன் குடும்ப நிறுவனம் 1 பில்லியன் $TRUMP டோக்கன்களை மொத்தமாக வெளியிட முடிவு செய்துள்ளது. இதில், 200 மில்லியன் நாணயங்கள் ஆரம்ப விநியோகத்திற்காக உள்ளன, மீதமுள்ள 800 மில்லியன் அடுத்த மூன்று ஆண்டுகளில் பல்வேறு கட்டங்களாக வெளியிடப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இதேபோல் GetTrumpMemes.com என்பது அரசியல் தொடர்புடையதோ, அல்லது தேர்தல் பிரச்சாரத்திற்குத் தொடர்புடையதோ அல்லது கட்சி தொடர்புடையதோ அல்லது அரசு அமைப்போ கிடையாது என்றும் இத்தளத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தற்போது சந்தையில் இருக்கும் 200 மில்லியன் காயினில் 80 சதவீதம் CIC Digital LLC, Fight Fight Fight LLC ஆகிய இரு நிறுவனங்கள் கட்டுப்பாட்டில் உள்ளது. இதில் CIC Digital LLC என்பது டிரம்ப்-ன் சொந்த நிறுவனமான Trump Organization-க்கு சொந்தமானது. மீதமுள்ள 800 மில்லியன் காயினும் இதே கட்டமைப்பில் தான் சந்தைக்கு வரும்.


Click it and Unblock the Notifications