பாகிஸ்தான் நாட்டின் வெளியுறவு அமைச்சர் இஷாக் தர் பாகிஸ்தானின் துணைப் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார் என்று அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை X தளத்தில் செய்த பதிவில் தெரிவித்துள்ளது.
ஷெபாஸ் ஷெரீப்-ன் முந்தைய ஆட்சி காலத்தில் பாகிஸ்தான் நாட்டின் நிதியமைச்சராக இருந்த இஷாக் தர், வெளியுறவு அமைச்சராக இந்த முறை நியமிக்கப்பட்டார்.

வெளியுறவு அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட பாகிஸ்தான் அரசு அறிக்கையில், "மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் முகமது இஷாக் தர் நாட்டின் துணைப் பிரதமராக நியமிப்பதில் பிரதமர் மகிழ்ச்சியடைகிறார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து இஷாக் தர் வெளியுறவு அமைச்சர் பதவியிலும் தொடர்ந்து நீடிப்பார் என்று பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மொபைல் இன்டர்நெட் முடக்கம், கைதுகள் மற்றும் வன்முறைக்கு மத்தியில் அந்நாட்டின் மோசமான தேர்தல் நடந்த நிலையில், பாகிஸ்தானின் பாராளுமன்றம் ஷெபாஸ் ஷெரீப்பை 2வது முறையாகப் பிரதமராகத் தேர்ந்தெடுத்தது. இந்த ஒரு மாத காலத்தில் புதிய நிதியமைச்சர், முதல் துணை பிரதமர் வரையில் பல அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளது அந்நாட்டின் அரசு.
கடந்த ஆட்சியில் இஷாக் தர் நிதியமைச்சராக இருந்தபோது சர்வதேச நாணய நிதியத்துடன் கடன் தொகையைப் பெற முடியாமல் நான்கு மாதங்களுக்கும் மேலாக போராடியது, மேலும் கடைசி ஒப்பந்தத்தை உறுதி செய்யப் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் தலையீடு தேவைப்பட்டது.
பணமில்லாமல் தவிக்கும் பாகிஸ்தான் பொருளாதாரத்தை எப்படியாவது மேம்படுத்த வேண்டும் என்ற ஒற்றை இலக்குடன் பழைய ஆட்களை ஓரம் கட்டிவிட்டு புதிதாக ஒருவர் நிதியமைச்சராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் தலைமையிலான அரசு ஜேபி மோர்கன் சேஸ் & கோ நிறுவனத்தில் பணியாற்றிய முன்னாள் வங்கியாளரை நிதியமைச்சராகத் தேர்ந்தெடுத்துள்ளது. முகமது ஔரங்கசீப், 59 வயதான இவர் பாகிஸ்தான் நாட்டின் நிதியமைச்சர் பதவியில் நியமிக்கப்பட்டு உள்ளார்.
முகமது ஔரங்கசீப் முன்னதாக டெபாசிட் அடிப்படையில் பாகிஸ்தான் நாட்டின் மிகப்பெரிய வங்கியான ஹபீப் பேங்க் லிமிடெட்-ன் தலைமை செயல் அதிகாரி பதவியில் இருந்து விலகியவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications