இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. பிப்ரவரி 28 அன்று அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து தொடங்கிய இந்த மோதல் இப்போது 21-வது நாளை எட்டியுள்ளது. மார்ச் 20ஆம் தேதி வெள்ளிக்கிழமை ஈரானின் தலைநகர் தெஹ்ரானை இஸ்ரேல் வான்வழி தாக்குதல்களை நடத்தியது. இந்த தாக்குதல் ஈரானியர்கள் பெர்சிய புத்தாண்டான நவ்ரூஸ் (Nowruz) கொண்டாடும் நாளில் நடைபெற்றது.
இஸ்ரேல், ராணுவம் தெஹ்ரானில் ஈரானிய ராணுவ உள்கட்டமைப்புகளை இலக்காகக் கொண்டு தாக்குதல்களைத் தொடங்கியதாக அறிவித்தது. இந்த தாக்குதல்கள் கிட்டத்தட்ட தினசரி நடைபெற்று வரும் நிலையில், நவ்ரூஸ் பண்டிகை நாளில் இது நடந்தது மிகவும் வருத்தம் அளிக்கும் விஷயமாக பார்க்கப்படுகிறது.

தெஹ்ரான் மக்கள் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தயாராக இருந்தபோது வானில் ஏவுகணை வந்தது ஈரான் மக்களை சோகத்தில் ஆழ்த்தியது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஈரான் "முற்றிலும் அழிக்கப்பட்டு வருகிறது" (decimated) என்று கூறினார். ஈரானின் ராணுவ வலிமை பெரிதும் பலவீனமடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மார்ச் 19 அன்று ஈரான் இஸ்ரேலின் வடக்கு துறைமுக நகரமான ஹைஃபாவில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை ஏவுகணை மூலம் தாக்கியது. இஸ்ரேலின் எரிசக்தி அமைச்சகம் இதை உறுதிப்படுத்தியது. தாக்குதலால் சில இடங்களில் மின்சாரம் தடைபட்டது. ஆனால் "குறிப்பிடத்தக்க சேதம்" ஏற்படவில்லை என்று அமைச்சர் எலி கோஹன் தெரிவித்தார். பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் விரைவில் மீட்டமைக்கப்பட்டது. இஸ்ரேலின் உள்நாட்டு எரிபொருள் தேவையில் சரி பாதியை உற்பத்தி செய்யும் இந்த சுத்திகரிப்பு நிலையம் இஸ்ரேலுக்கு மிகவும் முக்கியமானது.
இந்த போர் உலக பொருளாதாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வளைகுடா பகுதியில் எரிசக்தி உள்கட்டமைப்புகள் தாக்கப்படுவதால் எண்ணெய் மற்றும் எரிவாயு விலைகள் உயர்ந்துள்ளன. ஈரானின் தாக்குதலால் குவைத், சவுதி அரேபியா, கத்தார், UAE போன்ற நாடுகளின் எண்ணெய் மற்றும் எரிவாயு தளங்கள் பாதிக்கப்படுகின்றன.
இஸ்ரேல் தெஹ்ரானை தொடர்ந்து தாக்கி வருகிறது. ஈரான் பதிலடியாக இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசுகிறது. நெதன்யாகு ஈரானின் இராணுவ திறனை பெரிதும் குறைத்துள்ளதாக கூறினாலும், போர் முடிவுக்கு வரும் அறிகுறி இல்லை. இந்த மோதல் தொடர்ந்தால் உலக நாடுகளுக்கு எரிசக்தி விலை உயர்வு, பொருளாதார நெருக்கடி போன்றவை ஏற்படலாம். சாதாரண மக்களுக்கு எரிபொருள் விலை உயர்வு பெரும் சுமையாக இருக்கும்.


Click it and Unblock the Notifications