ஹரியானா: எலக்ட்ரிக் வாகனங்களுக்கான அதிநவீன மோட்டார்களை தயாரித்து வழங்கும் உலகின் முன்னணி நிறுவனம் இஸ்ரேல் நாட்டை சேர்ந்த ஈவிஆர் மோட்டார்ஸ் (EVR Motors). இந்த நிறுவனம் முதல் முறையாக இந்தியாவில் தனது உற்பத்தி ஆலையை நிறுவியுள்ளது. இந்தியாவில் உற்பத்தி ஆலையை அமைத்துள்ள முதல் இஸ்ரேல் நிறுவனம் இது.
ஈவிஆர் மோட்டார்ஸ் தனது துணை நிறுவனமான ஐ.ஈ வி ஆர் மோட்டார்ஸ் (I.EVR Motors) நிறுவனத்தின் கீழ் ஹரியானா மாநிலம் மனேசர் பகுதியில் உற்பத்தி ஆலையை நிறுவியுள்ளது. மனேசர் பகுதியில் தற்போது செயல்பட தொடங்கி இருக்கும் ஈவிஆர் மோட்டார்ஸ் நிறுவனத்தின் உற்பத்தி ஆலை, இந்நிறுவனத்தின் நவீன மோட்டாருக்கு தேவையான காயில்களை உற்பத்தி செய்ய இருக்கிறது. இந்த trapezoidal geometry coil, எலக்ட்ரிக் மோட்டார்களுக்கு தேவையான மிக முக்கியமான ஒரு பாகமாகும்.

உயர் தொழில்நுட்பத்தில் தானியங்கி முறையில் நிறுவப்பட்டுள்ள ஈவிஆர் மனேசர் ஆலை ஒரு மாதத்திற்கு 20,000 மோட்டர்களுக்கு தேவையான காயில்களை உற்பத்தி செய்து வழங்கும் திறன் கொண்டுள்ளது. கூடிய விரைவில் இது ஒரு மாதத்திற்கு 1,00,000 மோட்டார்களுக்கு தேவையான காயில்களை உற்பத்தி செய்யும் அளவில் விரிவாக்கம் செய்யப்படும் என ஈவிஆர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சர்வதேச அளவில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான தேவை அதிகரித்து வரும் நிலையில் ஈவிஆர் நிறுவனம் அதற்கு தேவையான முக்கிய பாகத்தை தயாரிக்கும் ஆலையை இந்தியாவில் நிறுவியுள்ளது. காயில்கள் விநியோகத்தை சீராக வைத்து கொள்ள இந்நிறுவனம் இந்தியாவில் உள்ள ஆட்டோமொட்டிவ் நிறுவனங்களான நேபினோ (Napino), பெல்ரைஸ் குரூப் (Belrise Group), ஈகேஏ மொபிலிட்டி (EKA Mobility), ஆர் எஸ்பி டிரான்ஸ்மிஷன்ஸ் (RSB Transmissions) ஆகியவற்றுடன் வணிகரீதியான ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது.
எலக்ட்ரிக் வாகனங்களுக்கான தங்களது புதிய மோட்டார் தொழில்நுட்பத்தின் ஒரு பகுதியாக இந்தியாவில் உற்பத்தி ஆலையை அமைத்திருப்பது தங்கள் நிறுவனத்தின் மிகப்பெரிய மைல்கல்லாக பார்க்கிறோம் என ஈவிஆர் நிறுவனத்தின் மேலாண் இயக்குனரான சஜில் கிஷோர் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் இந்தியா மற்றும் சர்வதேச அளவில் இந்த துறை மிகப் பெரிய வளர்ச்சியை காணும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்தியா இஸ்ரேல் நாடுகளுக்கு இடையிலான தொழில் ஒத்துழைப்பு மற்றும் மேக் இன் இந்தியா ஃபார் த வேர்ல்ட் (make in india for the world) என்ற இலக்கு ஆகியவற்றை எளிதாக எட்ட முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications