சர்வதேச முதலீட்டு சந்தையில் ரஷ்யா - உக்ரைன் போருக்கு பின்பு அதிகளவிலான பாதிப்பை இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பு மத்தியிலான போர் ஏற்படுத்தியுள்ளது. சனிக்கிழமை முதல் துவங்கிய போர் இரு தரப்பிலும் அதிகப்படியான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. உயிர் சேதம், பொருட் சேதம், எல்லை தாண்டிய ஊடுருவல் என பல பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளது.
தொழில்நுட்பத்திலும், ஆயுத தயாரிப்பிலும், விவசாயத்திலும் முன்னோடியாக இருக்கும் இஸ்ரேல், ஹமாஸ் உடனான போர் மூலம் பங்குச்சந்தை, நாணய மதிப்பு என அனைத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது.

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பு மத்தியிலான போர் மத்திய கிழக்கு நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. திங்களன்று அமெரிக்க டாலருக்கு எதிரான இஸ்ரேல் நாட்டின் நாணயமான ஷெக்கல் கிட்டத்தட்ட 8 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குறைந்ததுள்ளது. இது மத்திய கிழக்கு பொருளாதார சந்தையில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்லாமிய அமைப்பான ஹமாஸ் போராளிகள் 700 இஸ்ரேலியர்களைக் கொன்றனர் மற்றும் 200க்கும் அதிகமான இஸ்ரேலிய நாட்டினரை சிறைப்பிடித்துள்ளனர். மேலும் பல முக்கிய இஸ்ரேலிய நகரங்களை சனிக்கிழமை முதல் தொடர் தாக்குதல் மூலம் கைப்பற்றி வருகின்றனர்.
இதற்கு பதிலடியாக, ஞாயிற்றுக்கிழமை காசாவில் உள்ள ஹமாஸ் அதிகாரிகளின் வீட்டுத் தொகுதிகள், சுரங்கப்பாதைகள், ஒரு மசூதி மற்றும் வீடுகள் மீது இஸ்ரேலிய விமானத் தாக்குதல்கள் நடத்தப்பட்டது. இது மட்டும் அல்லாமல் ஹமாஸ் அமைப்பின் அடித்தளமாக இருக்கும் காசா ஸ்டிரிப் பகுதிக்கு தண்ணீர், மின்சாரம் என அனைத்தையும் துண்டிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இஸ்ரேல் ஷெக்கல் மதிப்பு திங்கட்கிழமை வர்த்தகத்தில் மட்டுமே 3 சதவீதத்திற்கும் அதிகமாக குறைந்து 3.9581 ஆக இருந்தது. அக்டோபர் 8 ஆம் தேதியன்று 3.86 டாலராக இருந்த நிலையில், தற்போது 3.95 டாலராக குறைந்துள்ளது. செவ்வாய்க்கிழமை வர்த்தகத்திலும் 3.95 டாலர் மதிப்பிலேயே துவங்கியுள்ளது.
மேலும் இஸ்ரேல் நாட்டின் பங்குச்சந்தை குறியீடான TA-35 இன்டெக்ஸ், கடந்த 5 வர்த்தக நாளில் 7.43 சதவீதம் சரிந்தாலும், திங்கட்கிழமை இஸ்ரேல் நாட்டின் பதில் தாக்குதல் மூலம் ஹமாஸ் அமைப்பின் பல சொத்துகள் தகர்க்கப்பட்ட நிலையில், TA-35, TA-125, TA-Bank ஆகியவை அதிகளவில் சரிந்தது. ஆனால் இன்று TA-35 கிட்டதட்ட 1 சதவீதம் உயர்வுடன் வர்த்தகம் துவங்கியுள்ளது, இதனால் இஸ்ரேல் ஷெக்கல் நாணய மதிப்பும் காப்பாற்றப்பட்டு உள்ளது.


Click it and Unblock the Notifications