ஈரான்-அமெரிக்கா இடையே அணுசக்தி தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடர்பாக வெளியான கலவையான செய்திகள் காரணமாக கடந்த வாரம் முதல் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் நிலையற்றதாகவே உள்ளது. ஈரான்-அமெரிக்கா இடையிலான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டால், சர்வதேச சந்தையில் ஈரானிய கச்சா எண்ணெய் வரத்து அதிகரிக்கும், இதன் விளைவாக சந்தையில் எண்ணெய் சப்ளை அதிரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சப்ளை
சப்ளை அதிகரித்தால், கச்சா எண்ணெய் விலை குறையும். ப்ளூம்பெர்க் தகவல்களின்படி, ஈரானிய எண்ணெய் ஏற்றுமதி மீதான தடைகள் நீக்கப்பட்டால் கச்சா எண்ணெய் விலை (WTI விலை) ஒரு பேரலுக்கு 40 டாலர் வரை குறைய வாய்ப்புள்ளது. விலை குறைவது இந்தியா போன்ற கச்சா எண்ணெய் இறக்குமதியை அதிக நாடுகளுக்கு ஆதாயமாக அமையும். இதனால், பல்வேறு தரப்பினரும் இந்த பேச்சுவார்த்தையில் நல்ல முடிவுகள் எட்டப்பட வேண்டும் என்று எதிர்பார்த்தனர்.

ஆனால் ஈரான்-அமெரிக்கா பேச்சுவார்த்தையில் சிக்கல் நிலவுவதாக தெரிகிறது. ஏனென்றால், ஈரானின் உச்ச தலைவர் அலி கமேனி கூறுகையில், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் சமீபத்திய முயற்சி எந்த பலனையும் தரும் என்று நான் நினைக்கவில்லை என்று தெரிவித்தார். இந்நிலையில், ஈரானிய அணுசக்தி நிலையங்களை தாக்க இஸ்ரேல் தயாராகி வருவதாக அமெரிக்க உளவுத்துறை தகவல் தெரிவித்தது.
அதேசமயம் தாக்குதல்களை நடத்த இஸ்ரேலிய தலைவர்கள் இறுதி முடிவு எடுத்துள்ளார்களா என்பது தெளிவாக தெரியவில்லை என்று பெயர் குறிப்பிடாத அதிகாரிகளை மேற்கோள் காட்டி செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. அமெரிக்க உளவுத்துறையின் தகவலையடுத்து, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வர்த்தகத்தின் இடையே 3.5 சதவீதத்துக்கு மேல் உயர்ந்தது. காலை பத்து மணி அளவில் ஜூலை மாத கச்சா எண்ணெய் டபுள்யூடிஐ ப்யூச்சர்ஸ் விலை 2 சதவீதம் உயர்ந்து 63.23 டாலர் என்ற அளவில் இருந்தது.
இஸ்ரேலின் தாக்குதல், ஈரான்-அமெரிக்கா பேச்சுவார்த்தைகளில் எந்த முன்னேற்றத்தையும் தடுக்கும். மேலும், உலகின் மூன்றில் ஒரு பங்கு எண்ணெயை வழங்கும் மத்திய கிழக்கில் நிலையற்ற தன்மை அதிகரிக்கும். இந்நாடுகளின் சப்ளை பாதித்தால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரும். எண்ணெய் விலை உயர்ந்தால் இந்தியா போன்ற நாடுகளின கச்சா எண்ணெய் இறக்குதி செலவினத்தை அதிகரிக்கும். உள்நாட்டில் பெட்ரோல், டீசல் உயரும் அபாயமும் உள்ளது.
தங்கம் விலை
இஸ்ரேல் ஈரானின் அணுசக்தி நிலையங்களை தாக்கினால், அது பெரிய போர் பதற்றத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. போர் மற்றும் புவிசார் பதற்றம் காரணமாக பாதுகாப்பான முதலீட்டுக்கான தேவை அதிகரிக்கும். இதனையடுத்து தங்கத்தின் விலையும் உயரும் அபாயமும் உள்ளது.


Click it and Unblock the Notifications