உலகில் மிகவும் பிரபலமான சர்ச் இன்ஜின் கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பபெட், இஸ்ரேல் நாட்டை சேர்ந்த "Wiz" என்ற சைபர் செக்யூரிட்டி ஸ்டார்ட்அப் நிறுவனத்தை சுமார் 23 பில்லியன் டாலருக்கு வாங்குவதற்காகப் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், அந்தப் பேச்சு வார்த்தை முடியும் தருவாயில் இருப்பதாகவும் செய்திகள் வெளியானது. அனால் தற்போது இஸ்ரேலிய நிறுவனம் அதற்கு மறுப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. ஒருவேளை கூகுள் நிறுவனம் Wiz நிறுவனத்தை வாங்கி இருந்தால், அது உலகிலேயே மிகப்பெரிய கையகப்படுத்தலாக இருந்திருக்கும்.
Wiz நிறுவனம் இஸ்ரேல் நாட்டில் தொடங்கப்பட்ட ஒரு நிறுவனம் ஆகும். மேலும் நியூயார்க்கை தலைமையிடமாகக் கொண்டு, உலகின் பல நாடுகளில் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் வேகமாக வளர்ந்து வரும் நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. இங்கு சைபர் செக்யூரிட்டி சேவைகள் வழங்கப்படுகின்றன. ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பத்தின் உதவியால், ஹேக்கர்கள் பிரச்சனை மற்றும் சைபர் செக்யூரிட்டி பிரச்சினைகளுக்கு தீர்வு காண இந்நிறுவனம் உதவுகிறது.

2023-ஆம் ஆண்டில் மட்டும் Wiz நிறுவனத்தின் வருவாய் 350 மில்லியன் டாலர். இந்நிறுவனம் ஆசியா, இஸ்ரேல், அமெரிக்கா, ஐரோப்பா என பல நாடுகளில் இயங்கி வருகிறது. இங்கு சுமார் 900 ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
சமீபகாலமாக தொடர்ந்து பல நிறுவனங்கள், பிற நிறுவனங்களைக் கையகப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளன. அந்த வகையில் Synopsys நிறுவனம் தனது போட்டி நிறுவனமான "Ansys" என்ற நிறுவனத்தை 35 பில்லியன் டாலருக்கு கைப்பற்றியது. அதேபோல தற்போது ஆல்பபெட் நிறுவனமும் Wiz நிறுவனத்தை வாங்கும் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
Wiz நிறுவனத்தின் சிஇஓ அசாப் ராப்பபோர்ட், தனது ஊழியர்களுக்கு அனுப்பிய கடிதத்தில் இந்த முடிவு குறித்து விளக்கியுள்ளார். ஒரு வேளை இந்த பேச்சுவார்த்தையை வெற்றிகரமாக முடித்து இருந்தால், ஆல்பபெட் நிறுவனம் ஸ்டார்ட் அப் நிறுவனமான Wiz நிறுவனத்தை 23 பில்லியன் டாலருக்கு வாங்கியிருக்கும். ஆனால் தற்போது Wiz நிறுவனம் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.
தி கார்டியன் பத்திரிகை வெளியிட்ட கடிதத்தில், ராப்பபோர்ட் கூறியிருப்பதாவது, "கடந்த வாரம் ஒரு கையகப்படுதல் குறித்த செய்திகள் பரவியதால், மிகவும் தீவிரமான நாட்களாக இருந்தது. நாங்கள் பெற்ற சலுகைகளால் நாங்கள் மகிழ்ச்சியடைந்தாலும், Wiz நிறுவனத்தை உருவாக்குவதில் தொடர்ந்து கவனம் செலுத்த முடிவு செய்துள்ளோம். இத்தகைய சலுகைகளை மறுப்பது சற்று கடினம்தான்.
ஆனால் எங்கள் குழுவினருடன், இந்த முடிவை எடுப்பதில் நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன். எங்களுக்கு கிடைத்த சந்தை அங்கீகாரம் எங்கள் இலக்கை வலுப்படுத்தியுள்ளது. எனவே, பாதுகாப்பை விரும்பும் ஒரு தளத்தை உருவாக்குவதுதான் எங்கள் இலக்கு என்று கூறியுள்ளார்.
மேலும் Wiz நிறுவனம் அடுத்த கட்ட இலக்குகளை நோக்கி பயணிக்க இருப்பதாக தெரிவித்துள்ளது. மேலும் கூகுள் உடனான பேச்சுவார்த்தைகள் அறிவிக்கப்படுவதற்கு முன்பே நிறுவனம் சில இலக்குகளை வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications