இந்தியாவின் மிகப்பெரிய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பாகவும், மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் அமைப்பாக இருக்கும் இஸ்ரோ தற்போது சந்திராயன் 3 முதல் விண்வெளிக்கு மனிதர்கள் பயணம் என பல முக்கியமான திட்டத்தில் பணியாற்றி வரும் வேளையில், யாரும் எதிர்பார்க்காத நெருக்கடி உருவாகியுள்ளது.
கடந்த சில மாதத்தில் இஸ்ரோ-வில் இருந்து 100க்கும் அதிகமான ஆராய்ச்சியாளர்கள், மூத்த அதிகரிகள் தங்களுடைய பணியை ராஜினாமா செய்தோ அல்லது ஓய்வு பெற்றோ வெளியேறியுள்ளனர் என என்டிடிவி ரிப்போர்ட் வெளியிட்டுள்ளது.

இந்த தகவல் மத்திய அரசு பெரும் அதிர்ச்சி கொடுத்துள்ளது மட்டும் அல்லாமல் விண்வெளி துறை உடனடியாக இஸ்ரோ ஆராய்ச்சியாளர்கள் பணியை விட்டு வெளியேறுவதில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளியுள்ளது.
குறிப்பாக சந்திராயன், ககன்யான் போன்ற திட்டங்களில் பணியாற்றுவோருக்கு கூடுதல் கட்டுப்பாடுகள் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த கட்டுப்பாடுகள் விதித்தால் மட்டுமே முக்கிய அதிகாரிகளை தொடர்ந்து பணியில் அமர்த்தி இந்திய அரசின் திட்டங்களை செயல்படுத்த முடியும்.
சரி ஏன் இஸ்ரோ ஆராய்ச்சியாளர்கள் சாரை சாரையாக வெளியேறுகின்றனர்..?
இதற்கு ஒரேயொரு காரணம் தனியார் துறை. இந்தியாவில் விண்வெளி ஆராய்ச்சி துறை 2020ல் தனியார் துறைக்கு திறந்துவிடப்பட்டது, இதன் மூலம் ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ், அக்னிகுல் காஸ்மோஸ், பிக்சல், பெல்லாட்ரிக்ஸ் ஏரோஸ்பேஸ், துருவ விண்வெளி மற்றும் திகந்தாரா என பல நிறுவனங்கள் ராக்கெட், செயற்கைகோள், ஏவுகணை ஊர்தி, ஸ்பேஸ் தொழில்நுட்பம் என பலவற்றில் பணியாற்றி வருகிறது.
இதனால் இத்துறையில் அனுபவம் வாய்ந்தவர்களுக்கான டிமாண்ட் தனியார் துறையில் அதிகரித்தது. இதுவரையில் பொதுத்துறை நிறுவனமான இஸ்ரோவில் மட்டுமே இத்துறை அதிகாரிகள் இருந்த நிலையில் தற்போது தனியார் துறையில் அதிக சம்பளம், உயர் பதவி, பங்கு விருப்பங்கள், பணிநேரத்தில் சுதந்திரம் என பல சலுகைகள் கிடைக்கும் காரணத்தால் இஸ்ரோ அதிகாரிகள் அடுத்தடுத்து தனியார் நிறுவன பணிகளுக்கு மாற தங்களது பணியை ராஜினாமா செய்து வருகின்றனர்.
இதை கட்டுப்படுத்தவே மத்திய அரசின் கீழ் செயல்படும் DoS எனப்படும் விண்வெளி துறை புதிய கட்டுப்பாடுகளை கொண்டு வரும் திட்டத்தில் இறங்கியுள்ளது. ஏற்கனவே இஸ்ரோவில் ஐஐடி கல்லூரியில் படித்தவர்கள் வேலைக்கு சேர்வது இல்லை என்ற பேச்சு இருக்கும் நிலையில் தற்போது இஸ்ரோவில் பணியாற்றுபவர்களும் தனியார் துறை பணிக்கு மாறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications