இந்தியாவின் ஐடி நகரமான பெங்களூரில் பிரபலமான ரமேஸ்வரம் கஃபே உணவகத்தில் ஏற்பட்ட குண்டுவெடிப்பு சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில், ஹைதராபாத் காவல்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.
இந்தியாவின் ஐடி நகரம் என அழைக்கப்படும் பெங்களூரில் நடந்த இந்த குண்டு வெடிப்பு பிற ஐடி நகரமான ஹைதராபாத்-ஐ பதறவைத்துள்ளது. கடந்த 2 வருடங்களாகப் பெங்களூர் மற்றும் ஹைதராபாத் மத்தியில் ஐடி துறை வளர்ச்சியில் கடுமையான போட்டி நிலவி வருகிறது.

அதேபோல் சில மாதங்களுக்கு முன்பு தான் ரமேஸ்வரம் கஃபே ஹைதராபாத்தில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் திறக்கப்பட்டது. முதல் நாளில் இருந்து சிறப்பான வரவேற்பைப் பெற்று வருகிறது ஹைதராபாத் ராமேஸ்வரம் கஃபே.
இந்த நிலையில் பெங்களூர் சம்பவத்தைத் தொடர்ந்து பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், ஹைதராபாத் நகரம் முழுவதும் காவல்துறை தீவிர கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது.
ஹைதராபாத் நகரின் முக்கிய சாலைகள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், மார்க்கெட் பகுதிகள் என அனைத்து இடங்களிலும் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு அனைத்து கோணங்களிலும் விசாரிக்கப்பட்டு வருவதாகவும், சம்பவம் குறித்து விசாரிக்க 7-8 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
இதற்கிடையில், ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு சம்பவத்தை விசாரிக்க மத்திய ஏஜென்சிகளுக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா சுதந்திரம் வழங்க வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சி (பாஜக) தலைவர் தேஜஸ்வி சூர்யா வெள்ளிக்கிழமை கூறினார்.

பெங்களூரு ராமேஸ்வரம் ஓட்டல் குண்டுவெடிப்பில் தொடர்புடைய குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டுத் தண்டிக்கப்படுவார்கள் என்று உறுதியளித்த கர்நாடக முதல்வர் சித்தராமையா, இந்த சம்பவத்தில் எதிர்க்கட்சிகள் அரசியலில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் கூறினார்.
ராமேஸ்வரம் கஃபே-வில் வெள்ளிக்கிழமை நடந்த குண்டுவெடிப்பைத் தொடர்ந்து, ஹைதராபாத் போலீசார் நகரில் பாதுகாப்பைப் பலப்படுத்தியுள்ளனர். போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு, மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ரோந்து சென்று பொதுமக்களுக்குக் கூடுதல் பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.
ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சோதனை நடத்துமாறு உயர் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். நகரின் பல்வேறு இடங்களில் மோப்ப நாய்களுடன் வெடிகுண்டு கண்டறிதல் படைகள் நிறுத்தப்பட்டு, முக்கிய நிறுவல்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஹைதராபாத் காவல்துறை, வாகன சோதனை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. நகரின் முக்கிய இடங்களில் தற்காலிக சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. கார்கள், ஸ்கூட்டர்கள், ஆட்டோக்கள் உட்பட அனைத்து வாகனங்களையும் காவல்துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.
பெங்களூரில் வெடிகுண்டு வெடித்ததை அடுத்து டெல்லி போலீசார் உச்சக்கட்ட பாதுகாப்பை நகரின் அனைத்து பகுதிகளிலும் உறுதி செய்துள்ளனர். டெல்லி நகரின் சந்தைகள் மற்றும் முக்கியமான இடங்களில் அதிகப்படியான பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதேபோல் லஜ்பத் நகர், பஹர்கஞ்ச், ஹவுஸ் காஸ் மற்றும் சரோஜினி நகர் போன்ற இடங்களில் பாதுகாப்பிற்காக அதிக போலீசார் உள்ளனர்.


Click it and Unblock the Notifications