கொரோனா தொற்று காலத்தில் வழங்கப்பட்ட அதிகப்படியான வொர்க் ப்ரம் ஹோம் சலுகையில் என்ஜாய் பண்ண ஐடி ஊழியர்கள், கொரோனா அச்சம் முடிந்து 3 ஆண்டுகள் ஆன பின்பும் அலுவலகத்திற்கு வர மறுக்கின்றனர்.
இது ஐடி நிறுவனங்களுக்கு பெரும் தலைவலியாக மாறி வருகிறது, ஒருபக்கம் ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்றுவதால் பாதுகாப்பு குறித்த அச்சம் அதிகரித்து வரும் அதேவேளையில் ஊழியர்கள் செயல்திறன் குறைவாக உள்ளதாக பல நிறுவனங்கள் கணக்கிட்டு உள்ளது.

இதனால் ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைத்து வருவது கட்டாயமாக்க டெக் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளது. இதற்கு ஏற்ப நிறுவனங்களும் அலுவலக சூழல் மாறி வருகிறது. டெக் நிறுவனங்கள் பணியாற்றும் இடத்தின் சூழலை மேம்படுத்தவும், பணியாற்றும் தரத்தை மெருகேற்றவும் பல்வேறு ஊக்க நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
இதனால் ஊழியர்கள் நிறுவனங்களின் வொர்க் ப்ரம் ஆபீஸ் விதிமுறைகளை பின்பற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர், இல்லையெனில் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்ற எச்சரிக்கையும் விடுத்துள்ளது.
Cognizant: காக்னிசென்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ரவி குமார், மேலாளர்கள் தேவைக்கேற்ப பணியாளர் அலுவலகம் வந்து பணியாற்றும் ஊழியர்களின் பட்டியலை உருவாக்க உதவும் புதிய செயலியை அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிவித்தார். இது ஏற்கனவே இருக்கும் FlexiSeat செயலியுடன் இணைந்து செயல்படும், FlexiSeat செயலி என்பது நிறுவன வளாகம் முழுவதும் இருக்கைகள் முன்பதிவு செய்ய உதவுகிறது.
இந்த புதிய செயலி நிறுவனத்தின் இந்த ஆண்டு தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஊழியர்கள் அலுவலகத்தில் பணிபுரியும் கொள்கைகளை மேற்பார்வை செய்யும். இதன் மூலம் ஊழியர்களின் வருகையை துல்லியமாக கண்காணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
TCS: டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம், ஊழியர்களுக்கு ஒவ்வொரு காலாண்டிலும் அளிக்கும் வேரியபிள் பே தொகையை அவர்களின் அலுவலக வருகையுடன் இணைக்கும் புதிய கொள்கையை அமல்படுத்தியுள்ளது. 60% க்கும் குறைவான நேரம் அலுவலகத்தில் பணிபுரிபவர்களுக்கு வேரியபிள் பே வழங்கப்படாது. 60 முதல் 75 சதவீதம் வரை அலுவலகத்தில் பணிபுரிபவர்களுக்கு 50 சதவீத வேரியபிள் பே வழங்கப்படும். இந்த நடவடிக்கை மூலம் டிசிஎஸ் ஊழியர்கள் அலுவலகத்திற்கு தெறித்து ஓடி வருகின்றனர்.
DELL: அமெரிக்க நிறுவனமான டெல் டெக்னாலஜிஸ், மின்னணு பேட்ஜ் ஸ்கேன், வி.பி.என் மற்றும் வண்ணக் குறியீட்டு முறை ஆகியவற்றைப் பயன்படுத்தி ஊழியர்களின் வருகையை கண்காணிக்க திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் டெல் தனது ஊழியர்களின் அலுவலக வருகையை நான்கு வண்ணங்களில் வகைப்படுத்துகிறது: நீலம் (தொடர்ச்சியாக அலுவலகத்திற்கு வருபவர்), பச்சை (வழக்கமாக அலுவலகத்தில் வருபவர்), மஞ்சள் (பகுதி நேரம் அலுவலகத்திற்கு வருபவர்), மற்றும் சிவப்பு (குறைவான நேரம் அலுவலகத்திற்கு வருபவர்) என வகைப்படுத்தியுள்ளது.
Infosys: இந்தியாவின் 2வது பெரிய ஐடி சேவை நிறுவனமான இன்போசிஸ் ஊழியர் அனுபவ தளமான "InfyMe," மூலம், குறிப்பிட்ட வணிக பிரிவுகளைச் சேர்ந்த ஊழியர்கள் மாதத்திற்கு 11 நாட்கள் வரை வீட்டிலிருந்து பணிபுரிய அனுமதி கோரும் வாய்ப்பை வழங்கியுள்ளது. இதை தவிர மற்ற நாட்களில் அலுவலகத்திற்கு கட்டாயம் வர வேண்டும்.
Wipro: இந்தியாவில் வொர்க் ப்ரம் ஹோம் கட்டுப்பாட்டில் இன்னும் அதிகப்படியான தளர்வுகளோடு இயங்குவது விப்ரோ நிறுவனம் தான். சமீபத்தில் விப்ரோ தலைமை மனித வள பிரிவு அதிகாரியான சௌரப் கோவில் ஊழியர்களுக்கு அனுப்பிய கடிதத்தில் ஊழியர்களுக்கான ஆன் கேம்பஸ் ஆக்டிவிட்டிகளை அதிகரிக்க திட்டமிட்டு உள்ளதாக அறிவித்துள்ளார்.
இதுநாள் வரை ஊழியர்களை அலுவலகத்திற்கு வரவழைக்க கெஞ்சி வந்த ஐடி நிறுவனங்கள் தற்போது வேரியபிள் பே, ப்ரோமோஷன், சம்பள உயர்வு ஆகியவற்றில் கைவைக்க துவங்கியுள்ளது. இனி வரும் காலத்தில் வொர்க் ப்ரம் ஹோம் விவகாரத்தில் ஊழியர்களின் ஆதிக்கம் குறைந்து, நிறுவனங்களின் ஆதிக்கம் அதிகரிக்க உள்ளது.


Click it and Unblock the Notifications