தற்போது ஐடி துறை வேலைவாய்ப்புகள் நல்ல சம்பளம் தருபவையாக உள்ளன. எப்படியாவது ஒரு பெரிய ஐடி நிறுவனத்தில் வேலை கிடைத்தால் லைஃப் செட்டிலாகிவிடும். அதுவும் கணவன், மனைவி என இருவருமே ஐடி வேலையில் கைநிறைய பணம் சம்பாதிக்கிறார்கள் என்றால் ஊரே அவர்களை பார்த்து பொறாமைபடும். ஆனால் அப்படி ஒரு வாழ்க்கையை துறந்து சுய தொழிலில் இறங்கி சாதித்துள்ளனர் பெங்களூரு தம்பதியினர்.
அங்கூர் என்பவர் கான்பூரை சேர்ந்தவர் பொறியியல் படிப்பை முடித்து பிளிப்கார்ட் உள்ளிட்ட பெரிய நிறுவனங்களில் வேலை பார்த்தவர் . அவருடைய மனைவி ரஷ்மி மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்து பெங்களூரில் மிகப்பெரிய எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனத்தில் வேலை பார்த்தவர். இருவருமே பெங்களூரில் செட்டில் ஆகி நல்ல வருமானம் பார்த்து வந்தனர்.

இந்த சூழலில் தான் கோவிட் இரண்டாவது அலையின் போது இருவரும் தங்களுடைய சொந்த ஊரான கான்பூருக்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது . அப்படி கான்பூரில் தங்கி இருந்தபோது ரஷ்மிக்கு மியாவாக்கி ஃபாரஸ்ட் என்ற கான்செப்ட் குறித்து தெரிய வந்தது . கான்பூரில் தங்களுக்கு சொந்தமாக இருந்த நிலத்தில் மியாவாக்கி முறையை பின்பற்றி குறிப்பிட்ட சில பயிர்களை வளர்த்து பார்க்கலாம் என முயற்சி செய்தார்.
ரஷ்மியும் அவருடைய கணவரும் இணைந்து பல மாதங்களாக இது குறித்து பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு விவசாயம் குறித்தும் மியாக்கி பாரஸ்ட்டின் அடிப்படை குறித்தும் கற்றுக் கொண்டனர் . ஆறு மாதங்கள் திட்டமிட்டு தங்களுடைய வேலையை கைவிட்டு அக்ரோ ஃபாரஸ்ட் என்ற மாடல் முறையில் 5.5 ஏக்கர் நிலத்தில் தங்கள் வீட்டிற்கு தேவையான வேளாண் பொருட்களை உற்பத்தி செய்ய தொடங்கினர்.
இது அவர்களுக்கு பல்வேறு பாடங்களை கற்றுத் தந்தது. முதலில் பப்பாளி, கொய்யா, மாம்பழம், நெல்லிக்காய் உள்ளிட்ட பழ வகைகளையும் பின்னர் மஞ்சள் , கோதுமை உள்ளிட்ட பயிர்களையும் வேளாண்மை செய்து வெற்றி கண்டனர். முதல் ஆண்டிலேயே 500 மரங்களை நட்டு பல வகையான பழங்களை அறுவடை செய்தனர். இதற்காக ரசாயனம் எதுவுமே இவர்கள் பயன்படுத்தவில்லை என்பது தான் ஹைலைட். நண்பர்கள் உறவினர்கள் இவற்றின் சுவை மற்றும் தரத்தால் பணம் கொடுத்து வாங்கிய போது தான் நாம் ஏன் இதனை விற்பனை செய்ய கூடாது என்ற எண்ணம் தோன்றியதாம்.
அப்படி 4 ஆண்டுகளுக்கு முன்னர் துஹி ஃபார்ம்ஸ் (tuhi farms) என்ற நிறுவனத்தை தொடங்கினர். எந்த ஒரு ரசாயனமும் பயன்படுத்தாமல் ஆர்கானிக் முறையில் காய்கறி மற்றும் பழங்களை வேளாண்மை செய்து இந்த நிறுவனத்தின் மூலம் விற்பனை செய்கின்றனர். சொந்த நிலத்திலேயே உற்பத்தி செய்கின்றனர் இவற்றை வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கு நேரடியாக டெலிவரியும் செய்து கொண்டு வருகின்றனர்.
Farm to forks அதாவது நிலத்தில் இருந்து நேரடி விற்பனை என்ற கான்செப்ட் இவர்களுக்கு பல்வேறு நகரங்களிலும் வாடிக்கையாளர்களை பெற்று தந்துள்ளது. முதலில் தங்களுக்கு பாரம்பரிய விதைகளை தேடுவது தான் மிகப்பெரிய சவாலாக இருந்ததாக இருவரும் கூறுகின்றனர் . 5 லட்சம் ரூபாய் முதலீட்டில் தொடங்கப்பட்ட துஹி ஃபார்ம்ஸ் ஒரு மாதத்திற்கு 300 ஆர்டர்கள் வரை பெறுகிறது. மாதந்தோறும் 50 ஆயிரம் ரூபாய் வரையும் ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் வரையும் வருமானம் கிடைக்கிறதாம்.இதனை அடுத்தடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதற்கு அவர்கள் முடிவு செய்திருக்கின்றனர். நேரடியாக நிலத்திலிருந்து வாடிக்கையாளர்கள் என்ற முறையில் அவர்கள் பின்பற்றுகின்றனர்.


Click it and Unblock the Notifications