இந்தியாவில் வருமான வரித்துறை வருமானவரி கணக்குகள் முறையாக தாக்கல் செய்யப்படுகின்றனவா என்பது குறித்து தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது. நவீன தொழில்நுட்பங்களின் உதவியோடு யாரெல்லாம் போலியாக கணக்கு தாக்கல் செய்கிறார்களோ அவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்தியாவை பொறுத்தவரை ஒரு கோடி ரூபாய்க்கு மேல் ஆண்டு வருமானம் கொண்டவர்களை உயர் சொத்து மதிப்பு கொண்ட தனி நபர்கள் என அழைக்கிறோம். இவ்வாறு இந்தியாவில் உயர் சொத்து மதிப்பு கொண்ட தனி நபர்கள் பலர் இருந்தாலும் அவர்களின் பெரும்பாலானவர்கள் முறையாக தங்களுடைய வருமான வரி கணக்கினை தாக்கல் செய்வதில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

மணி கண்ட்ரோல் தளத்திற்கு வருமான வரித்துறை மூத்த அதிகாரிகள் அளித்துள்ள பேட்டியில் இந்தியாவில் 7 முதல் 8 லட்சம் தனி நபர்கள் ஆண்டுக்கு 1 கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டுகின்றனர். ஆனால் அவர்கள் தங்களுடைய வருமான வரி கணக்கினை முறையாக தாக்கல் செய்யாமல் வரி ஏய்ப்பு செய்கின்றனர் என கூறியுள்ளனர். அதாவது உயர் சொத்து மதிப்பு கொண்டவர்கள் எண்ணிக்கை 7 முதல் 8 லட்சமாக இருந்தாலும் சுமார் 3 லட்சம் பேர் மட்டுமே தங்களுடைய வருமான வரி கணக்கினை தாக்கல் செய்வதாக கூறி இருக்கிறார்கள்.
2023ஆம் நிதியாண்டில் இந்தியாவில் ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய் வருமானம் இருப்பதாக 3. 50 லட்சம் பேர் வருமானவரி கணக்கினை தாக்கல் செய்திருக்கின்றனர். ஆனால் டிடிஎஸ், டிசிஎஸ், அதிக மதிப்பு கொண்ட பரிவர்த்தனை ஆகியவற்றை ஆய்வு செய்தால் இந்தியாவில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் ஆண்டு வருமானம் கொண்ட நபர்களின் எண்ணிக்கை 7.97 லட்சமாக இருக்கிறதாம். எனவே பலரும் வருமானவரித்துறையை ஏமாற்றி வரி ஏய்ப்பு செய்வதாக சந்தேகம் எழுந்துள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
எனவே 360 டிகிரி புரோபைலிங் என்ற அடிப்படையில் ஐடி துறை அதிகாரிகள் இந்தியாவில் தற்போது இருக்கும் உயர் சொத்து மதிப்பு கொண்ட தனி நபர்கள், அவர்களின் உண்மையான வருமானம் என்ன, அதை அவர்கள் எப்படி எல்லாம் செலவு செய்கிறார்கள் என்பதை கொண்டு கண்காணிக்கிறார்களாம். டிசிஎஸ், டிடிஎஸ், வெளிநாட்டிலிருந்து இந்தியாவிற்கு வரக்கூடிய பணம் , அதிக மதிப்பு கொண்ட பண பரிமாற்றம் ஆகியவற்றை முழுமையாக ஆய்வு செய்து வருகிறார்கள்.
வங்கிகள் , நிதி நிறுவனங்கள் பொதுவாகவே அதிக மதிப்பு கொண்ட பரிவர்த்தனைகளை வருமானவரித்துறையினரிடம் தாக்கல் செய்துவிடும். எனவே மற்ற நாடுகளின் அரசுகள் அரசுகளிடமிருந்தும், இந்தியாவை சேர்ந்த நிதி நிறுவனங்களிடமிருந்தும் சிறப்பு நிதி பரிவர்த்தனை அறிக்கை உள்ளிட்டவற்றை பெற்று உயர் சொத்து மதிப்பு கொண்டு தனி நபர்களின் வருமானத்தையும் செலவினங்களையும் ஆய்வு செய்யலாம் என ஸ்ரீராம் என்ற நிதி துறை நிபுணர் மணி கண்ட்ரோல் தளத்திற்கு அளித்துள்ள பேட்டியில் குறிப்பிடுகிறார்.


Click it and Unblock the Notifications