இந்திய ஐடி சேவைத் துறையைச் சேர்ந்த நிறுவனங்கள் 2024 ஆம் நிதியாண்டில் மிகவும் சிறிய அளவிலான (slow growth) வளர்ச்சியை மட்டுமே பதிவு செய்யும் எனக் கூறப்படும் வேளையில் அனைத்து நிறுவனங்களும் செலவுகளைக் கட்டுப்படுத்தி வருவது மட்டும் அல்லாமல் புதிதாக ஊழியர்களைச் சேர்ப்பதைக் குறைத்துவிட்டு, தற்போது இருக்கும் ஊழியர்களின் செயல்திறனை அதிகரிக்கும் முக்கிய இலக்கை கொண்டு உள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமான டிசிஎஸ் முதல் Persistent Systems போன்ற நடுத்தர ஐடி சேவை நிறுவனம் வரையில் நாட்டின் டாப் 10 ஐடி சேவை நிறுவனத்தில் இந்த ஆண்டு மார்ச் மாத முடிவில் 21.1 லட்சம் பேர் பணியாற்றினர்.

இதுவே செப்டம்பர் 30 ஆம் தேதி உடன் முடிவடைந்த காலாண்டின் முடிவில் டாப் 10 ஐடி சேவை நிறுவனத்தில் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை 20.6 லட்சமாகக் குறைந்துள்ளது. இதன் மூலம் டாப் 10 நிறுவனங்களில் வெறும் 6 மாத காலத்தில் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை 50,129 பேர் குறைந்துள்ளனர். இது தான் ஐடி சேவைத் துறையின் மந்தமான வளர்ச்சிக்கு முக்கியச் சான்றாக அமைக்கிறது.
இந்த நிலையில் ஐடித்துறையில் கொரோனா லாக்டவுன் காலத்தில் அதிகப்படியான ஊழியர்கள் டிமாண்ட் இருந்த நேரத்தில் முன்னணி ஐடி சேவை நிறுவனங்கள் சக போட்டி நிறுவனங்களில் இருந்து ஊழியர்களை ஈர்த்து வந்த நிலையில் 70 முதல் 120 சதவீதம் வரையில் சம்பள உயர்வை அள்ளிக் கொடுத்தது. இனி இதெல்லாம் கனவிலும் நடக்காது.
இது ஐடி ஊழியர்களின் பொற்காலமாக விளங்கிய நிலையில், சர்வதேசச் சந்தையில் ஏற்பட்டு உள்ள பொருளாதார மந்தநிலை காரணமாகத் தற்போது பெரும்பாலான நிறுவனங்கள் ஊழியர்களைப் பணியில் சேர்ப்பதைத் தாண்டி குறைக்கத் துவங்கியுள்ளது. இன்போசிஸ் பிரஷ்ஷர்களைத் தேர்வு செய்யக் கூடக் கேம்பஸ் இண்டர்வியூவ் செல்லவில்லை என அறிவித்துள்ளது.
இந்திய ஐடித்துறையில் வேலைவாய்ப்புகள் குறைந்துள்ள காரணத்தால் 4 - 7 வருட அனுபவம் கொண்ட ஐடி ஊழியர்களுக்கு 2021-22 ஆம் நிதியாண்டில் 15- 31 லட்சம் வரையில் சம்பள உயர்வு அளிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 10- 26 லட்சம் ரூபாயாகக் குறைந்துள்ளது எனப் பிரபல ஸ்டாஃபிங் நிறுவனமான Xpheno தெரிவித்துள்ளது.
இதுமட்டும் அல்லாமல் ஒரு ஐடி ஊழியர் புதிய நிறுவனத்திற்கு மாறும் போது பொதுவாக அளிக்கப்படும் 30-40 சதவீத சம்பள உயர்வு தற்போது 18-22 சதவீதமாகக் குறைந்துள்ளது தான் தற்போது ஐடி ஊழியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தும் முக்கியமான விஷயமாக உள்ளது.


Click it and Unblock the Notifications