பெங்களூரு: இந்தியாவின் ஐடி நிறுவனங்களின் மையமாக கர்நாடகா மாநிலத்தின் பெங்களூரு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கர்நாடகாவில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஊழியர்களின் பணி நேரத்தை 14 மணி நேரமாக நீட்டிக்க கோரி அரசிடம் கோரிக்கை வைத்திருப்பதாக வெளியான தகவலுக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
கர்நாடகா கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் சட்டம் 1961ஐ திருத்தம் செய்வது குறித்து அம்மாநில அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. இந்த திருத்தத்தில் ஐடி நிறுவன ஊழியர்களின் பணிநேரத்தை 14 மணி நேரமாக (12 மணி நேரம் + 2 மணி நேரம் கூடுதல்) திருத்தம் செய்ய வேண்டும் என ஐடி நிறுவனங்கள் முன்மொழிவை கொடுத்துள்ளன. இது ஐடி ஊழியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது.

தற்போது தொழிலாளர் சட்டங்கள் 12 மணி நேரம் (10 மணி நேரம் +2 மணி நேரம் கூடுதல்) என்ற வகையில் வேலை நேரத்தை அனுமதிக்கின்றன. ஆனால் ஐடி நிறுவனங்களின் புதிய முன்மொழிவில் IT/ITeS/BPO ஆகிய துறைகளில் உள்ள பணியாளர்கள் ஒரு நாளைக்கு 12 மணி நேரத்திற்கு மேல் வேலை செய்ய வேண்டும் அல்லது மூன்று மாதங்களுக்கு தொடர்ச்சியாக 125 மணி நேரத்திற்கு மேல் வேலை நேரம் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
கர்நாடக அரசு ஐடி நிறுவனங்களின் இந்த கோரிக்கை தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகிறது. இந்த நிலையில் வேலை நேரத்தை நீட்டிக்க வேண்டும் என்று ஐடி நிறுவனங்களின் முன்மொழிவுக்கு ஊழியர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. கர்நாடக மாநில ஐடி ஊழியர் சங்கம் இந்த சட்ட திருத்தம் தற்போது நடைமுறையில் உள்ள மூன்று ஷிப்ட் முறைக்கு பதிலாக இரண்டு ஷிப்ட் என்ற அடிப்படையில் நிறுவனங்களை செயல்பட அனுமதிக்கும், இது மூன்றில் ஒரு பங்கு பணியாளர்களை வேலையில் இருந்து நீக்க வழி வகுக்கும் என கூறியுள்ளது.
ஐடி துறையில் ஏற்கனவே 45% ஊழியர்கள் மனச்சோர்வு மற்றும் மனநல பிரச்சினைகளையும், 55 சதவீத ஊழியர்கள் உடல் ஆரோக்கிய பாதிப்புகளையும் எதிர்கொள்கின்றனர். வேலை நேரத்தை மேலும் அதிகரிப்பது ஐடி ஊழியர்களின் உடல்நலம் மற்றும் மனநலத்தை மேலும் பாதிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐடி நிறுவனங்களின் இந்த முன்மொழிவு மனிதநேயமற்ற செயல் என ஊழியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அரசு இந்த முன்மொழிவை செயல்படுத்த முற்பட்டால் பெரும் எதிர்ப்பை சந்திக்க நேரிடும் என தெரிவித்துள்ளனர். அரசு கார்ப்பரேட் நிறுவனங்களால் கிடைக்கும் லாபத்தை பார்க்காமல் ஊழியர்களை இயந்திரமாக கருதாமல் மனிதநேயத்துடன் செயல்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications