துபாய்: துபாயில் கிட்டத்தட்ட 2000 இந்தியர்கள் கருப்புப் பணம் மூலம் சொத்துக்களை வாங்கிக் குவித்துள்ளதை வருமான வரித்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
கருப்புப் பணம் தொடர்பான ரெய்டுகள், கண்டுபிடிப்புகள் ஒரு பக்கம் தொடர்ந்து கொண்டே உள்ளன. அவ்வப்போது ஏதாவது பெரிதாக சிக்கும். ஆனால் தற்போது துபாயில் 2000 இந்தியர்கள், கருப்புப் பணத்தை வைத்து சொத்துக்களை வாங்கிக் குவித்துள்ள பகீர் தகவல் வெளியாகியுள்ளது. இவர்களை வருமான வரித்துறையின் புலனாய்வுப் பிரிவு கண்டுபிடித்துள்ளது.

இந்த சொத்துக்கள் குறித்த விவரங்களை இந்த இந்தியர்கள் தங்களது வருமான வரிக் கணக்கில் தெரிவிக்கவில்லை. இதன் மூலம் இந்த சொத்துக்கள் கருப்புப் பண சொத்துக்கள் என்ற முடிவுக்கு வந்துள்ளது ஐடி துறை.
கடந்த சில வருடங்களாகவே இந்த சொத்துக்கள் வாங்கப்பட்டு வந்துள்ளன. தங்களுக்கு தர வேண்டிய பணத்தை பணமாக வாங்காமல் இப்படி சொத்துக்களாக வாங்கியுள்ளனர் இந்த 2000 பேரும். இவர்களில் பல்துறையினரும் அடங்குவர். தொழிலதிபர்கள், திரைத்துறையினர், வர்த்தகத்துறையினர் என பலரும் அடக்கமாம். வருமான வரி வலையில் சிக்காமல் தப்பிக்க இப்படி சொத்துக்களை வாங்கி குவித்துள்ளனர் இவர்கள்.

கருப்புப் பண முதலைகள் சொத்துக்களை வாங்கிக் குவிக்க ஈசியான ஒரு இடமாக துபாய் மாறியுள்ளது. துபாயில் சமீப ஆண்டுகளாக சொத்துக்கள் வாங்கும் இந்தியர்கள் எண்ணிக்கை அதிகரித்ததைத் தொடர்ந்து ஆய்வில் குதித்தது வருமான வரித்துறை. இந்த ஆய்வில்தான் 2000 பேர் சொத்துக்களை வாங்கியுள்ளது தெரிய வந்துள்ளது.
இவர்களில் பலர் அரசு அதிகாரிகள் அதாவது உயர் அதிகாரிகள் என்பது தெரிய வந்து வருமான வரித்துறை அதிர்ச்சி அடைந்துள்ளது. இவர்கள் மீது கருப்புப் பண தடுப்புச் சட்டத்தின் கீழ் வருமானவரித் துறையினர் நடவடிக்கை எடுக்கவுள்ளனர். முதல் கட்டமாக இந்த 2000 பேரிடமும் விளக்கம் கேட்கப்பட்டது. அதில் 600 பேரால் உரிய கணக்கை கூற முடியவில்லை. இந்த சொத்துக்களை வாங்க நிதி எங்கிருந்து வந்தது என்பதை இவர்களால் விளக்க முடியவில்லை.

துபாயில் சொத்துக்களை வாங்கிக் குவித்த இந்தியர்களில் பெரும்பாலானோர் மும்பையைச் சேர்ந்தவர்கள் அடுத்த இடத்தில் கேரளத்தினர் உள்ளனர். குஜராத்தும் இந்த லிஸ்ட்டில் 3வது இடத்தில் உள்ளது.


Click it and Unblock the Notifications