சென்னை: இன்ஃபோசிஸ், விப்ரோ, டிசிஎஸ் போன்ற முன்னணி IT நிறுவனங்கள் புதிய பணியாளர்களின் சேர்க்கையை தாமதப்படுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், பல புதிய பணியாளர்களின் சேர்க்கை தேதி குறித்த உறுதியான தகவல் இல்லாமல் பலரும் குழப்பத்தில் உள்ளனர் என்று கூறப்படுகிறது.
இந்தியாவின் முன்னணி IT நிறுவனங்கள் குறைந்தது 10,000 புதிய பணியாளர்களை பணி அமர்த்துவதில் தாமதம் செய்ததாக IT ஊழியர் சங்கமான நாசென்ட் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி எம்ப்ளாய்ஸ் செனட்டின் (NITES) தரவை, மேற்கோள்காட்டி டைம்ஸ் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது.

NITES-இன் தலைவர் ஹர்பிரீத் சிங் சலுஜா கூறுகையில், விப்ரோ, டிசிஎஸ், விப்ரோ, ஜென்சார், மற்றும் LTI மைண்ட்ட்ரீ போன்ற நிறுவனங்களில் பதவிகள் வழங்கப்பட்ட விண்ணப்பதாரர்களிடமிருந்து புகார்கள் வந்துள்ளன என்று கூறியுள்ளார். மார்ச் மாதம் முடிவடைந்த நிதி ஆண்டில், டிசிஎஸ், இன்ஃபோசிஸ் மற்றும் விப்ரோ ஆகிய 3 நிறுவனங்களின் மொத்த பணியாளர் எண்ணிக்கை கிட்டத்தட்ட 64,000 ஆக குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
புதியதாக பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சலில், இன்ஃபோசிஸ் நிறுவனம் "பணி தேவைகளை அடிப்படையாகக் கொண்டு சேர்க்கை தேதி தெரிவிக்கப்படும். சேர்க்கை தேதி குறைந்தது 3-4 வாரங்களுக்கு முன்னதாக அனுப்பப்படும் என்று தெரிவித்துள்ளதாக அந்த அறிக்கை கூறுகிறது. 2024-ஆம் நிதி ஆண்டில், இன்ஃபோசிஸ் நிறுவனம் வெறும் 11,900 பாணியாளர்களை மட்டுமே பணியில் அமர்த்தியுள்ளது. முந்தைய ஆண்டில் நிறுவனம் பணியில் அமர்த்திய 50,000 மாணவர்களைக் காட்டிலும் 76% குறைவு.
விப்ரோ 2 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்ட கேம்பஸ் ஆஃபர்களை நிறைவேற்றவில்லை. விப்ரோ CHRO சௌரப் கோவில் கூறுகையில், கடந்த வருடத்திற்கு முன்பு பல கல்லூரிகளில் இருந்து நாங்கள் ஆஃபர்களை வழங்கினோம். ஆனால், இன்னும் அவர்களுக்கே பணிகளை வழங்கவில்லை. முதலில் நாங்கள் அந்த ஆஃபர்களை முடித்து விட்டு புதியவர்களை வேலைக்கு அமர்த்துவோம். இந்த ஆண்டு புதியவர்களை எடுக்க உள்ளோம். ஆனால் மேக்ரோ சூழல் காரணமாக எங்களால் எவ்வளவு நபர்களை எடுக்க இருக்கிறோம்.. என்று கூற முடியவில்லை என்று கூறியுள்ளார்.
2022-ஆம் ஆண்டில் முன்னணி IT சேவை நிறுவனங்களால் பணிக்கு தேர்வு செய்யப்பட்ட 3% முதல் 5% புதிய பட்டதாரிகள் இதுவரை பணியில் சேர்க்கப்படவில்லை என்று டீம் லீஸ் நிறுவனத்தின் ஐடி பணியாளர் கிருஷ்ணா விஜ் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டில் இதுபோன்ற சூழல் நிலவுமா அல்லது புதிய பணியாளர்கள் பணியமர்த்தப்படுவார்களா என்ற விவரங்களை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications