இந்திய பொருளாதாரத்தில் முக்கிய தூணாக இருக்கும் ஐடி சேவை துறை எப்போதும் இல்லாத வகையில் பெரிய அளவிலான பாதிப்புகளை சந்தித்து வருகிறது. ஒருபக்கம் உலகளாவிய வர்த்தக பாதிப்பால் புதிய ஒப்பந்தம் பெற முடியாமல் தவித்து வரும் வேளையில், ஏஐ தொழில்நுட்பத்தின் எழுச்சி, உள்நாட்டில் ஜிசிசி நிறுவனங்களில் வேகமான வளர்ச்சி ஆகியவற்றின் மூலம் புதிதாக பணியில் சேர்ப்போர் எண்ணிக்கை தரையைதட்டியுள்ளது.
இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனங்களில் புதிதாக ஊழியர்களை பணியில் அமர்த்தும் வேகம் கடுமையாக குறைந்துள்ளது. 2025-26 நிதியாண்டின் முதல் 9 மாதங்களில் அதாவது 2025ஆம் ஆண்டின் ஏப்ரல்-டிசம்பர் வரையிலான காலக்கட்டத்தில் டாப் 5 ஐடி நிறுவனங்களில் ஒட்டுமொத்தமாக 17 பேரை மட்டுமே அதிகமாக சேர்த்துள்ளது.

நீங்கள் படித்தது சரி தான், 17000, 170 எல்லாம் இல்லை வெறும் 17 பேரை மட்டுமே கூடுதலாக சேர்த்துள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் 17,764 பேரை சேர்த்த டாப் 5 ஐடி நிறுவனங்கள், இந்த ஆண்டு வெறும் 17 பேரை மட்டுமே கூடுதலாக சேர்த்துள்ளது.
டிசிஎஸ் நிறுவனம் ஏற்கனவே 2 சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்த நிலையில் இந்த 9 மாத காலகட்டத்தில் மொத்தமாக சுமார் 25,816 பணியாளர்கள் எண்ணிக்கையை குறைத்துள்ளது. இந்த பணிநீக்கத்தில் நடுத்தர மற்றும் மூத்த பதவிகளில் அதிகப்படியானோர் பாதிக்கப்பட்டனர். இக்காலக்கட்டத்தில் புதிதாக ஊழியர்கள் சேர்க்கப்பட்டாலும் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையில் 25,816 குறைந்துள்ளது.
மேலும் இந்த 9 மாதத்தில் இன்போசிஸ் 13,456 பேர் சேர்த்துள்ளது. விப்ரோ 9,740 பேர் சேர்த்துள்ளது. HCL டெக் 1,885 பேர் சேர்த்துள்ளது. டெக் மஹிந்திரா 752 பேர் சேர்த்துள்ளது. இப்படி டாப் 5 நிறுவனத்தில் புதிதாக சேர்க்கப்பட்ட ஊழியர்களையும், வெளியேறிய ஊழியர்களையும் கணக்கிட்டால் வெறும் 17 பேர் மட்டுமே கூடுதலாக சேர்ந்துள்ளனர்.
டிசம்பர் காலாண்டில் மட்டும் 5 நிறுவனங்களின் ஒட்டுமொத்த பணியாளர் எண்ணிக்கை 2,174 பேர் குறைந்துள்ளது. டிசிஎஸ் 11,151 பேர் குறைத்துள்ளது. இன்போசிஸ் 5,043 பேர் சேர்த்துள்ளது. விப்ரோ 6,529 பேர் சேர்த்துள்ளது.
இதை மொத்தமாக சேர்க்கும் போது கடந்த ஆண்டின் முதல் 3 காலாண்டில் 17,764 பேரை சேர்த்த டாப் 5 நிறுவனங்கள் இந்த ஆண்டு வெறும் 17 பேரை மட்டுமே கூடுதலாக சேர்த்துள்ளது.
ஐடி துறையில் வளர்ச்சி மந்தநிலை நீடிப்பதால் பணியமர்த்தல் குறைந்துள்ளது. AI மற்றும் ஆட்டோமேஷன் மூலம் வேலைகள் குறைவதும், வாடிக்கையாளர்கள் செலவு குறைப்பதும் இதற்கு காரணமாக உள்ளன. இது புதிதாக பட்டம் பெறும் நபர்களுக்கு ஐடி துறையில் வேலைவாய்ப்பை பெறுவது கடினமாக்கியுள்ளது.
தற்போது டிசிஎஸ் உட்பட பல நிறுவனங்கள் ஊழியர்களை சேர்ப்பதை காட்டிலும், ஏஐ துறையிலும், முக்கிய தொழில்நுட்ப துறையிலும் பணியாற்றி வரும் நிறுவனங்களை கையகப்படுத்துவது மூலம் மட்டுமே ஊழியர்களை அதிக எண்ணிக்கையில் சேர்க்கிறது. இதேபோல் நேரடியாக சேர்க்கப்படும் ஊழியர்களில் பெரும்பாலானோர் முக்கிய தொழில்நுட்பத்தில் திறன் பெற்றவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
இதுதான் இந்தியாவின் டாப் ஐடி சேவை நிறுவனங்களான டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ, ஹெச்சிஎல், டெக் மஹிந்திராவின் நிலை. இத்தகைய சூழ்நிலையில் புதிதாக ஐடி துறைக்குள் நுழைபவர்களுக்கும், வேறு நிறுவனத்தில் வேலைக்கு மாறுபவர்களுக்கும் பெரும் நெருக்கடி உருவாகியுள்ளது.


Click it and Unblock the Notifications