உலகம் முழுவதுமாக ஐடி துறையில் பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் முதல் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் வரை கடந்த சில ஆண்டுகளாக பணியாளர்களை படிப்படியாக குறைத்து வருகின்றன. நிதி நெருக்கடி மற்றும் நிறுவன மறுசீரமைப்பு போன்ற காரணங்களை காட்டி பணியாளர்களை நீக்கி வருகின்றன.
இதனால் ஐடி துறையில் பணிநீக்கம் குறித்த செய்திகள் சமீபகாலமாக பெரிய அளவில் வியப்பை ஏற்படுத்தாத அளவுக்கு மாறியுள்ளது. இருப்பினும் கடந்த இரண்டு ஆண்டுகளில் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் சராசரியாக 23 பணியாளர்களை பணிநீக்கம் செய்துள்ளன என்ற புள்ளிவிவரம் கொஞ்சம் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

தொழில்நுட்ப துறைகளில் வேலை இழப்புகளை கண்காணிக்கும் இணையதளமான layoff.fyi-ன் புள்ளி விவரங்களின் படி, உலகம் முழுவதுமாக 2,120 தொழில்நுட்ப நிறுவனங்கள் இதுவரை 4.04 லட்சம் பணியாளர்களை பணிநீக்கம் செய்துள்ளன.
2022ம் ஆண்டில் மட்டும் 1,061 தொழில்நுட்ப நிறுவனங்கள் 1.64 லட்சம் ஊழியர்களை பணிநீக்கின. இந்த ஆண்டில் கடந்த 13ம் தேதி வரை 1,059 நிறுவனங்கள் 2.40 லட்சம் பணியாளர்களை வேலையிலிருந்து நீக்கியுள்ளன. ஐடி துறையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் தினமும் சராசரியாக ஒவ்வொரு மணி நேரத்துக்கும் 23 பணியாளர்கள் வேலை இழக்கின்றனர்.
நம் நாட்டில் பைஜூஸ், சார்ஜ்பீ, கார்ஸ்24, ஓலா, ஓயோ, மீஷோ, எம்.பி.எல்., உதான், அன்க்கடாமி மற்றும் வேதாந்து போன்ற யூனிகார்ன் நிறுவனங்கள் உள்பட 70க்கும் மேற்பட்ட இந்திய தொழில்நுட்ப ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் 21 ஆயிரத்துக்கும் அதிகமான ஊழியர்களை பணிநீக்கம் செய்தன.
ஐடி துறையில் பணிநீக்கம் நடவடிக்கை 2022ல் தொடங்கியது. இந்த ஆண்டு தொடக்கத்தில் பணிநீக்கம் உச்சத்தில் இருந்தது. கடந்த சில மாதங்களாக வேலைஇழப்பு செய்திகள் குறைந்துள்ளது. இருப்பினும் அது இன்னும் முடியவில்லை என்று தெரிகிறது.
மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்கு சொந்தமான LinkedIn இந்த வாரம் ஆட்குறைப்பு நடவடிக்கையை அறிவித்தது. அந்நிறுவனத்தில் 668 பேர் வேலை இழக்க உள்ளனர். வரும் வாரங்களில் பல தொழில்நுட்ப நிறுவனங்கள் பணிநீக்க நடவடிக்கையை மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெரிய சிப் தயாரிப்பாளரான Qualcomm நிறுவனம் தனது கலிபோர்னியா அலுவலகங்களில் சுமார் 1,258 பணியாளர்களை குறைக்க திட்டமிட்டுள்ளது. எபிக் கேம்ஸ் நிறுவனம் தனது பணியாளர்களில் 16 சதவீதத்தை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. மெட்டா மற்றும் மைக்ரோசாப்ட் ஆகிய நிறுவனங்களும் இந்த மாதத்தில் பணியாளர்களை குறைக்க உள்ளதாக அறிவித்தன.


Click it and Unblock the Notifications