2024 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து தற்போது வரை இந்த 7 மாத காலத்தில் மட்டும் ஐடி நிறுவனங்களை சேர்ந்த சுமார் 1.30 லட்சம் ஊழியர்கள் தங்களது வேலையை இழந்துள்ளனர். சர்வதேச அளவில் பெரிய தொழில் நுட்ப நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை பணி நீக்கம் செய்வது தொடர்ந்து வருகிறது.
ஐடி துறையை பொறுத்தவரை தற்போது பொருளாதார சவால்கள் மற்றும் போட்டி அழுத்தங்கள், ஏஐ தொழில்நுட்பத்தால் வந்துள்ள மாற்றங்கள் என பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருவதால் ஊழியர்கள் பணி நீக்கம் என்பது தொடர்ந்த வண்ணம் இருக்கிறது. Layoffs.fyi என்ற தளம் சர்வதேச அளவில் ஊழியர்கள் பணி நீக்கம் தொடர்பான தரவுகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பு ஆண்டில் மட்டும் 397 நிறுவனங்கள் 1, 30,482 ஊழியர்களை பணி நீக்கம் செய்திருப்பதாக தெரிவித்துள்ளது.

இதனிடையே சிஸ்கோ நிறுவனம் கூடிய விரைவில் சுமார் 4000 பேரை வேலையில் இருந்து நீக்க இருப்பதாக செய்தி வெளியிட்டுள்ளது. சிஸ்கோ நிறுவனம் தங்களுடைய கவனத்தை சைபர் செக்யூரிட்டி மற்றும் செயற்கை நுண்ணறிவு துறைகளை நோக்கி திருப்பும் நிலையில் தங்களுடைய மற்ற பிரிவுகளை சார்ந்த ஊழியர்களை பணியில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
அதே போல புகழ்பெற்ற இன்டெல் நிறுவனம் தங்களுடைய ஊழியர்களில் 15000 பேரை வேலையில் இருந்து நீக்குவதாக அறிவித்தது. அதாவது இன்டெல் நிறுவனம் தங்கள் நிறுவன ஊழியர்களில் 15 சதவீதம் பேரை குறைக்க போவதாக தெரிவித்திருந்தது. ஏனெனில் இன்டெல் நிறுவனம் வரலாறு காணாத வருவாய் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
கடந்த மாதம் தான் மைக்ரோசாப்ட் நிறுவனம் தங்களது ஊழியர்களில் 1000 பேரை வேலையில் இருந்து நீக்கி வீட்டுக்கு அனுப்பி வைத்தது .குறிப்பாக மேலாண்மை பிரிவுகளில் இருந்தவர்களை மைக்ரோசாப்ட் நிறுவனம் பணியில் இருந்து நீக்கி இருப்பதாக தெரியவருகிறது. அதேபோல மென்பொருள் நிறுவனமான யுகேஜி தங்களுடைய ஊழியர்களின் 2200 பேரை வீட்டுக்கு அனுப்பி இருப்பதாக தெரிவித்துள்ளது. முன்னதாக டைசன் நிறுவனம் தங்களுடைய ஊழியர்களில் 1000 பேரை வேலையில் இருந்து நீக்குவதாக தெரிவித்திருந்தது.
சர்வதேச அளவில் பல்வேறு நிறுவனங்களும் தங்களது ஊழியர்களை பணி நீக்கம் செய்வது தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்ட வண்ணம் இருக்கின்றன. இந்தியாவிலும் இந்த பணி நீக்கம் தொடர்கிறது. அன்அகாடமி நிறுவனம் 250 ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கி உள்ளது. அதேபோல வே கூல் நிறுவனம் 200 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளது. ஐடி துறையில் மட்டுமல்லாது மற்ற துறைகளிலும் கூட ஊழியர்கள் பணி நீக்கம் தொடர்கிறது.
உதாரணமாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் 42,000 பேரை வேலையில் இருந்து நீக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை என்பது 3.89 லட்சத்தில் இருந்து 3.47 லட்சமாக குறை இருக்கிறது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications