இந்திய டெக் துறையில் அதிகரித்து வரும் பணிநீக்கங்கள், ஊழியர்களுக்கு மட்டுமல்லாமல் நாட்டின் மொத்த பொருளாதாரத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது எத்தனை பேருக்கு தெரியும். கிட்டத்தட்ட இந்த பணிநீக்கம் ஒரு டோமினோ சரிவது போல் நாட்டின் அனைத்து துறையை பாதிக்கும் ஓரு விஷயம்.
இந்திய பொருளாதாரம் என்பது நுகர்வு அடிப்படையில் இயங்குகிறது என்பது அனைவருக்கும் தெரியும், இந்த நுகர்வில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் மொத்தமாக சந்தையும் பாதிக்கும். இதில் குறிப்பாக தொழில்நுட்பத் துறை ஊழியர்கள் நகரங்களின் பெரும் நுகர்வோராக உள்ளனர்.

சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், புனே, டெல்லி, நொய்டா போன்ற பெரிய நகரங்களின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக ஐடி மற்றும் கார்ப்ரேட் ஊழியர்களே உள்ளனர். இவர்களின் வேலைவாய்ப்பு இழப்பு மற்றும் ஊதியத்தில் மந்த நிலை ஆகியவை நுகர்வு செலவினங்களை பாதித்து, பொருளாதார வளர்ச்சியின் வேகத்தை குறைக்கும் என்பது தான் உண்மை.
IT துறை ஒரு காலத்தில் பெரிய அளவிலான வேலை உருவாக்கியது, இப்போது ஊழியர்கள் சேர்ப்பு எண்ணிக்கை மந்தமாக உள்ளது, இதேபோல் ஊதிய உயர்வும் குறைக்கப்பட்டும், மறுக்கப்பட்டும் வருகிறது. இது மறைமுகமாக நுகர்வோர் சந்தையை பாதிக்கும்.
2025 நிதியாண்டில் ஐடி ஊழியர் செலவு சராசரியாக 5 சதவீதம் மட்டுமே உயர்ந்தது, 2019-2023 காலக்கட்டத்தில் இது சராசரியாக 15 சதவீதம் இருந்தது. இதுவே ஆட்சேர்ப்பில் ஏற்பட்ட சரிவு, ஊழியர்களுக்கான சம்பள உயர்வில் ஏற்பட்ட மந்த நிலையும் தெளிவாக தெரிகிறது.
ஐடி துறை என்று இல்லாமல் எந்த துறையில் அதிகப்படியான பணிநீக்கம் இருந்தாலும் இத்தகைய பாதிப்பு வரும். ஆனால் ஐடி துறையில் பணியாற்றுபவர்கள் மற்ற துறைகளை காட்டிலும் அதிகப்படியான சம்பளத்தை சராசரியாகவே வாங்குகின்றனர். இதனால் நுகர்வோர் சந்தையில் இவர்களின் பங்கு சற்று அதிகம்.
அதிக சம்பளம் வாங்கும் ஐடி துறையில் பணிநீக்கம் அதிகரித்தால் இவர்கள் மூலம் சந்தையில் நடக்கும் அதிகப்படியான வர்த்தகம் அனைத்தும் பாதிக்கப்படும். உதாரணமாக வீடு வாங்குவது குறையும், வாடகை வீட்டை காலி செய்வது அதிகரிக்கும், கார் - பைக் வாங்குவது குறையும், நகரங்களில் உணவகங்களுக்கு செல்லும் மக்கள் எண்ணிக்கை குறையும். பணிநீக்கம் பயத்தால் மற்ற ஊழியர்களும் செலவுகளை குறைக்கவே முயற்சி செய்வார்கள்.

இதுமட்டுமா டாக்சி பயன்படுத்துவது குறையும், மால்களில் கூட்டம் - வர்த்தகம் குறையும், ஆடம்பர பொருட்கள் விற்பனை குறையும், ஆடை மற்றும் காஸ்மெட்டிக் துறையின் வர்த்தகம் குறையும். இப்படி பல துறையில் இதன் தாக்கம் இருக்கும் காரணத்தால் மொத்தமாக வேலைவாய்ப்பு சந்தை பாதிக்கும், இது ஒட்டுமொத்த பொருளாதாரத்தின் பாதிப்பாக மாறும். இதையே பொருளாதார வல்லுனர்கள் டோமினோ எபக்ட் என கூறுகின்றனர்.
இதேபோன்ற பாதிப்பு தான் 2000த்தில் நடந்த டாட் காம் பபுள், 2008 ரெசிஷன் காலக்கட்டத்திலும் நடந்தது. திருப்பவும் இந்த பாதிப்பு ஏஐ மற்றும் ஆட்டோமேஷன் உருவத்தில் வந்துள்ளதா என்பது தான் தற்போதைய அச்சம்.


Click it and Unblock the Notifications