டெல்லி: புதிய வருமான வரி மசோதாவில் வரி செலுத்துவோரின் சமூக வலைதள கணக்கு, மின்னஞ்சல் உள்ளிட்ட டிஜிட்டல் தளங்களை அணுகும் உரிமம் வருமானத்துறை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டிருப்பதாக வெளியான செய்தி நாடு முழுவதும் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலில் வருமானவரித்துறை அதிகாரிகள் இது சார்பாக விளக்கம் அளித்துள்ளனர்.
புதிய வருமானவரி மசோதாவின் படி வரி ஏய்ப்பு செய்து சோதனைக்கு உள்ளாகும் நபர் விசாரணைக்கு ஒத்துழைப்பு தராத போது மட்டுமே அவருடைய சமூக வலைதன வலைதள கணக்கு , மின்னஞ்சல் மற்றும் அவர் பயன்படுத்தும் கருவிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என தெரிவித்துள்ளனர். கடந்த 1961 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட வருமான வரி சட்டத்தில் மத்திய அரசு பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்திருக்கிறது.

வருமானவரி மசோதா குறித்த விவரங்கள் அண்மையில் வெளியிடப்பட்டன. அதில் வருமான வரி கணக்கு தாக்கலில் முன்னுக்கு பின் முரணான தகவல்களை அளிப்பவர்கள் அல்லது வரி ஏய்ப்பு செய்து விசாரணை வளையத்துக்குள் சிக்குவோரின் சமூக வலைதள கணக்குகள், மின்னஞ்சல்கள் , வாட்ஸ் அப், லேப்டாப் உள்ளிட்ட டிஜிட்டல் தளங்களையும் கருவிகளையும் தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்து சோதனையிடும் அதிகாரத்தை இந்த புதிய மசோதா வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு அளித்திருப்பதாக தகவல் வெளியானது.
இது வரி செலுத்துவோரின் ஆன்லைன் தனியுரிமையை மீறும் செயலென பலரும் தங்களது விமர்சனங்களையும் முன் வைத்தனர் .இந்த சூழலில் தான் வருமானவரித்துறை அதிகாரிகள் விளக்கம் தந்துள்ளனர். அதில் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்துவதே இது போன்ற செய்திகள் பரப்பப்படுவதன் நோக்கம் என்றும் வருமானவரித்துறை அதிகாரிகள் ஒருபோதும் வரி செலுத்துவோரின் சமூக ஊடக கணக்குகளையும் அல்லது ஆன்லைன் செயல்பாடுகளையும் கண்காணிக்க மாட்டார்கள் என்று தெரிவித்துள்ளது.
வரி ஏய்ப்பு செய்து விசாரணை வளையத்துக்குள் சிக்கும் நபருக்கு சொந்தமான இடத்தில் சோதனை நடத்தும் போது அவர் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்றால் மட்டுமே இது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என வருமானவரித்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். சோதனையின் போது டிஜிட்டல் சாதனங்கள் மற்றும் இடங்களை ஆய்வு செய்வது ஆதாரங்களை கண்டறிய உதவியாக இருக்கும் என்கின்றனர்.
ஆய்வுக்கு உள்ளாகும் அனைவரின் டிஜிட்டல் தரவுகளும் சோதனைக்கு உட்படுத்தப்படாது பெரிய அளவிலான சோதனை நடவடிக்கையில் சிக்குவோரின் டிஜிட்டல் தகவல்கள் மட்டுமே ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என விளக்கம் தந்துள்ளனர். தற்போது நடைமுறையில் இருக்கும் வருமான வரி சட்டத்தில் பிரிவு 132 வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு ஒரு குறிப்பிட்ட வரிஏய்ப்பு மோசடியில் சிக்கி உள்ள நபருக்கு சொந்தமான கணக்கு புத்தகங்கள் மற்றும் பிற ஆவணங்களையும் மின்னணு வடிவில் இருக்கும் ஆவணங்களையும் பார்த்து ஆய்வு செய்வதற்கும் பறிமுதல் செய்வதற்கும் அதிகாரம் வழங்குகிறது. தற்போது நவீன காலத்தில் வரி ஏய்ப்பு மற்றும் பிற மோசடிகள் அனைத்தும் டிஜிட்டல் மயமாகியுள்ள சூழலில் தான் இது போன்ற டிஜிட்டல் தளங்கள் மற்றும் கருவிகளை அணுகுவதற்கான உரிமம் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications