இந்திய பொருளாதாரத்தின் முக்கிய தூணாக இருக்கும் ஐடி சேவைத் துறை, கடந்த 2 வருடமாக மந்தமான வர்த்தகத்தைப் பதிவு செய்து வந்த நிலையில் ஊழியர்களுக்குச் சம்பளம் உயர்வில் குறைப்பு, வேரியபிள் பே தொகையில் குறைப்பு, வேலைவாய்ப்புகள் அளிக்காதது, ப்ரோமோஷன் ஒத்திவைத்தது என பல பிரச்சனைகளை நிர்வாகம் வாயிலாக ஐடி ஊழியர்கள் எதிர்கொண்டனர். இதேவேளையில் ஐடி நிறுவனங்களின் வருவாய், புதிய ஆர்டர்கள், லாபத்தில் மார்ஜின் அளவு ஆகியவை பெரிய அளவில் குறைந்தது.
ஆனால் பிரச்சனை அனைத்தும் கடந்த 3 மாதங்களாக மெல்ல மெல்ல குறைந்து வருகிறது, இதற்கு முக்கியமான காரணம் அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ்-ன் வட்டி விகித குறைப்பு தான். வட்டி குறைப்பு என்னவோ சில நாட்களுக்கு முன்பு தான் நடந்தது, ஆனால் வட்டி குறைக்கப்படும் என்பது சில மாதங்களுக்கு முன்பே உறுதியான நிலையில் அமெரிக்க நிறுவனங்கள் டெக் சேவைக்குச் செலவு செய்யும் கதவுகளைத் திறந்தது.

இதனால் இந்திய ஐடி சேவை நிறுவனங்கள் இரண்டாம் காலாண்டில் சற்று சிறந்த முடிவுகளை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, கடந்த மூன்று மாதங்களில் இந்திய ஐடி சேவை நிறுவனங்கள் தனது ஆஸ்தான வர்த்தக பிரிவான வங்கி மற்றும் நிதி சேவைகள் பிரிவில் அதிகப்படியான ஒப்பந்தங்களைப் பெற்று புத்துயிர் பெற்றுள்ளது. குறிப்பாக இந்திய ஐடி சேவை நிறுவனங்களின் கோட்டையான வட அமெரிக்காவில் இருந்து அதிகப்படியான திட்டங்களைப் பெற்றுள்ளது மூலம் இந்த காலாண்டு முடிவுகள் மிகவும் சிறப்புவாய்ந்தாகவும், முக்கியமானதாகவும் இருக்கும்.
இன்ஃபோசிஸ் மற்றும் LTIMindtree ஆகியவை ஜூலை-செப்டம்பர் காலாண்டில் வருவாயில் பிற நிறுவனங்களைக் காட்டிலும் அதிகப்படியான வளர்ச்சியைப் பதிவு செய்ய வாய்ப்புள்ளது, அதேசமயம் Coforge மற்றும் Persistent Systems ஆகியவை நடுத்தர அளவிலான ஐடி சேவை நிறுவனங்களில் மற்ற ஐடி நிறுவனங்களை விட சிறப்பாகச் செயல்படலாம் என்று சந்தை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இந்த நிலையில் இந்திய ஐடி சேவை துறையின் முடிசூடா மன்னனாக இருக்கும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் இத்துறையில் முதல் ஆளாக அக்டோபர் 10 அன்று தனது காலாண்டு முடிவுகளை வெளியிட உள்ளது. அதைத் தொடர்ந்து இந்தியாவின் மூன்றாவது பெரிய ஐடி சேவை நிறுவனமான HCLTech அக்டோபர் 14 அன்றும், இரண்டாவது மற்றும் நான்காவது பெரிய ஐடி நிறுவனங்களான, இன்ஃபோசிஸ் மற்றும் விப்ரோ அக்டோபர் 17 ஆம் தேதியன்று தனது காலாண்டு முடிவுகளை வெளியிட உள்ளனர்.
இந்த காலாண்டு முடிவுகள் ஐடி துறையில் முதலீடு செய்துள்ள பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு எவ்வளவு முக்கியமோ, அதைவிட ஐடி ஊழியர்களுக்கு மிகவும் முக்கியமானது. இந்த காலாண்டு முடிவுகள் அடிப்படையில் தான் இன்போசிஸ் போன்று இன்னும் சம்பளம் உயர்வு கொடுக்காத ஐடி ஊழியர்களுக்கு, இக்காலாண்டுக்கான வேரியபிள் பே தொகை, அடுத்த ப்ரோமேஷன் சை்க்கிள் என அனைத்தும் இந்த காலாண்டு முடிவுகளைச் சார்ந்து தான் உள்ளது.
இந்த காலாண்டு முடிவில் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள்:
ஹைப்பர்-ஸ்கேலர் வளர்ச்சி: இந்திய IT துறை, 2025 நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் (Q2FY25) சற்று சிறப்பான லாபத்தை எதிர்பார்க்கிறது. குறிப்பாக அமேசான் வெப் சர்வீசஸ் (AWS), Azure மற்றும் Google Cloud போன்ற ஹைப்பர்-ஸ்கேலர் சேவை பிரிவின் தொடர் வளர்ச்சியால் இந்த உயர்வு அதிகரிக்கும், இதோடு வட அமெரிக்கச் சந்தையில் அதிகரித்துள்ள IT சேவைகளுக்கான டிமாண்ட் வாயிலாகவும் இந்த வளர்ச்சி பதிவாகும் என தெரிகிறது.
வட அமெரிக்க மறுமலர்ச்சி: நீண்ட கால மந்த நிலைக்கு பின்பு வட அமெரிக்க சந்தையிலிருந்து ஒரு வெளிச்சம் இந்திய ஐடி சேவை துறைக்கு வந்துள்ளது. இது ஐடி சேவை துறையின் மொத்த வருவாய், லாபத்திற்கு முக்கிய தூண்டுதலாக இருக்கப்போகிறது.
BFS & சுகாதார துறை உத்வேகம்: ஹெல்த்கேர் துறை மற்றும் வங்கி சேவை துறை முக்கியமானதாக இருக்கும். அமெரிக்காவில் வங்கி மற்றும் நிதி சேவைகள் (BFS) துறையில் வட்டி விகித குறைப்பிற்குப் பின்பு டெக் சேவை மீதான முதலீடுகள் அதிகரித்துள்ளது. இதோடு செயற்கை நுண்ணறிவு பிரிவில் இந்தியா ஐடி சேவை நிறுவனங்கள் போதுமான அனுபவம் பெற்ற நிலையில் இப்பிரிவிலும் புதிய ஒப்பந்தங்களில் அதிகரித்துள்ளது.
முக்கிய நிறுவனங்கள்: Infosys மற்றும் Coforge ஆகியவை காலாண்டுக்கு காலாண்டு அதிக வருவாய் வளர்ச்சியுடன் சிறப்பாக செயல்படும் என்று கணிக்கப்படுகிறது, அதே சமயம் Wipro, HCLTech மற்றும் Tech Mahindra ஆகியவை மந்தமான வருவாய் வளர்ச்சியைக் காணலாம் என சந்தை கணிப்புகள் கூறுகிறது.
புதிய ஒப்பந்தங்கள்: இந்திய ஐடி சேவை துறை இக்காலாண்டில் அதிகளவிலான ஒப்பந்த பெற்றுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது, இந்த வளர்ச்சி தான் 2025 ஆம் நிதியாண்டுக்கான வருவாய் வளர்ச்சி அளவீட்டை தீர்மானிக்கும் பராமரிக்க எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications