சென்னை: இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனமான அக்சென்சர், 2025ஆம் ஆண்டில் இந்தியாவில் வேலைவாய்ப்பு எண்ணிக்கையை அதிகரிக்க இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் மற்ற ஐடி நிறுவனங்களும் இதே நடைமுறையை பின்பற்றும் என துறை சார்ந்தவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
அண்மையில் அக்சென்சர் நிறுவனம் வெளியிட்ட ஆவணத்தில் 2025 ஆம் நிதியாண்டில் இந்தியாவில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு பாசிட்டிவான ஆண்டாக இருக்கிறது என தெரிவித்திருந்தது. மேலும் நடப்பு ஆண்டில் புதிதாக இந்தியாவில் கூடுதலானவர்களை பணிக்கு அமர்ந்திருப்பதாக தெரிவித்திருந்தது.

அக்சென்சர் நிறுவனத்தின் தலைமை செயல அதிகாரியான ஜூலி ஸ்வீட் முதலீட்டாளர்களிடையே பேசும்போது நடப்பாண்டில் தங்களது நிறுவனம் பிரதானமாக இந்தியாவில் தான் புதிதாக ஆட்களை வேலைக்கு அமர்த்த இருப்பதாக கூறி இருந்தார். அதிலும் தொழில்நுட்ப பிரிவில் இந்தியாவை சேர்ந்த திறமையாளர்களுக்கு அதிக வாய்ப்பு அளிப்பதாக கூறி இருந்தார்.
நடப்பாண்டினை பொருத்தவரை தகவல் தொழில்நுட்ப பிரிவில் வேலை வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கும் என்ற ஒரு தகவலையும் அவர் வெளியிட்டு இருந்தார். அக்சென்சர் நிறுவனத்தில் தற்போது சர்வதேச அளவில் 7.7 லட்சம் ஊழியர்கள் அதில் பணிபுரிகின்றனர். அவர்களில் 3 லட்சம் பேர் இந்தியாவை சேர்ந்தவர்கள். 2024 ஆம் ஆண்டில் இந்த நிறுவனம் புதிதாக 41,484 பேரை பணிக்கு அமர்த்தி இருந்தது.
நடப்பு நிதியாண்டில் அக்சென்சர் நிறுவனம் இந்தியாவில் அதிகமானவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க இருப்பதாக அறிவித்திருக்கும் நிலையில் மற்ற ஐடி நிறுவனங்களும் இதே நடைமுறையை பின் தொடரும் என இந்தத் துறை சார்ந்த நிபுணர்கள் கணிப்பு தெரிவித்துள்ளனர்.
சிஐஈஎல் ஹெச்ஆர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான ஆதித்யா மிஸ்ரா தற்போது ஐடி சேவைகளுக்கான தேவை அதிகரித்துள்ளதால் பல்வேறு நிறுவனங்களும் கூடுதலான ஆட்களை பணிக்கு அமர்த்த தொடங்கியுள்ளன, மந்த நிலையிலிருந்து ஐடி நிறுவனங்கள் மீண்டு வருகின்றன என தெரிவித்துள்ளார்.
எனவே கல்லூரிகளில் இருந்து ஃபிரஷர்களை தேர்வு செய்வது மட்டும் இன்றி மற்ற நடைமுறைகளிலும் ஐடி நிறுவனங்கள் ஆட்களை வேலைக்கு தேர்வு செய்து வருகின்றன எனக் கூறியுள்ளார். எனவே அடுத்தடுத்து பல்வேறு ஐடி நிறுவனங்களும் வேலை வாய்ப்பு அதிகரிப்பது தொடர்பான அறிவிப்பினை வெளியிட கூடும் எனக் கூறியுள்ளார்.
எனவே நடப்பு ஆண்டில் தகவல் தொழில்நுட்பம் பிரிவில் கல்வி பயின்றவர்களுக்கு வேலைவாய்ப்பு பிரகாசமாக இருக்கும் என நம்பப்படுகிறது. அதே வேளையில் தொழில்நுட்பங்கள் அப்டேட் ஆவதற்கு ஏற்ப திறன்களை மேம்படுத்தி கொண்டால் வேலை நிச்சயம் என்கின்றனர் துறை சார்ந்தவர்கள்.
Written by: Devika


Click it and Unblock the Notifications