இந்தியாவில் கொரோனா தாக்கம் சற்று ஓய்ந்திருந்தாலும் அடுத்தடுத்த அலை குறித்த அச்சம் இருந்து வருகின்றது. இதற்கிடையில் கொரோனா காலகட்டத்திலும் வழக்கத்திற்கு மாறாக ஒரு துறை மிகுந்த வளர்ச்சி கண்டது எனில் அது ஐடி துறை தான்.
சொல்லப்போனால் கொரோனா காலகட்டத்தில் தான் வழக்கத்திற்கு மாறாக தேவை அதிகரித்தது. அந்த காலகட்டத்தில் தேவை காரணமாக பணியமர்த்தலும் அதிகரித்தது.
ஒரு காலகட்டத்தில் ஐடி துறையில் பணி நீக்கம், வேலையின்மை பிரச்சனை இருந்து வந்த நிலையில், இன்று ஊழியர்களுக்கு பற்றாக்குறையே நிலவி வருகின்றது.
சம்பள உயர்வு: ஹெச்சிஎல் கொடுத்த குட்நியூஸ்.. ஐடி ஊழியர்கள் கொண்டாட்டம்..!

பிரச்சனையே இது தான்
கடந்த சில காலாண்டுகளாக ஐடி நிறுவனங்கள் எதிர்கொண்டு வரும் மிகப்பெரிய பிரச்சனையே அட்ரிஷன் விகிதம் தான். நிறுவனங்களும் ஊழியர்களை தக்க வைத்துக் கொள்ள பல்வேறு யுக்திகளை கையாண்டு வந்தாலும், அது எதுவும் கைகொடுத்ததாக தெரியவில்லை. மாறாக ஊழியர்கள் வெளியேறும் விகிதமானது தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.

சம்பளம் அதிகரிப்பு
இது ஐடி நிறுவனங்கள் பல்வேறு புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு வரும் நிலையில், ஊழியர்களுக்கான தேவையும் அதிகளவில் இருந்து வருகின்றது. இந்த நிலையில் ஐடி நிறுவனங்கள் ஆரம்ப கால நுழைவு ஊழியர்களுக்கு சம்பளத்தினை உயர்த்த ஆரம்பித்துள்ளன. இது திறன் வாய்ந்த ஊழியர்களை தக்க வைத்துக் கொள்ளும் விதமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

எவ்வளவு சம்பளம் அதிகரிப்பு
இத்துறை சார்ந்த நிபுணர்கள் சம்பள விகிதம் குறைந்தபட்சம் 15% அதிகரிக்கலாம். சில சந்தர்ப்பங்களில் புதியதாக வேலைக்கு பணியமர்த்தப்படுபவர்களுக்கு சம்பளம் 60% வரை கூட உயரும் என தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக ஆரம்ப கால பொறியாளர்களுக்கு 3.65 லட்சம் ரூபாய் சம்பளத்தில் இருந்து, 4.25 லட்சம் ரூபாயாக அதிகரித்துள்ளது.

ரூ. 6 லட்சம் சம்பளம்
ஐடி நிறுவனங்கள் அதிகளவில் திறன் வாய்ந்த பணியாளர்களை பணியமர்த்த கல்லூரிகளுடன் கைகோர்த்துள்ளதாகவும், சில கோர்ஸ்களையும் வழங்கி வருவதாகவும் தெரிவித்துள்ளன. இந்த கோர்ஸ்களில் சேர்ந்து படித்த மாணவர்களுக்கு ஹெச் சி எல், 6 லட்சம் ரூபாய் சம்பளத்தில் பணியமர்த்திக் கொள்வதாகவும் ஹெச் சி எல் டெக்னாலஜி நிறுவனத்தின் தலைமை மனிதவள அதிகாரி அப்பராவ் தெரிவித்துள்ளார்.

டிசிஸ்-ன் சம்பள அதிகரிப்பு திட்டம்
ஊழியர்களை தக்க வைத்துக் கொள்ள ஹெச் சி எல்-லின் இந்த யுக்தியானது, இன்ஃபோசிஸ், காக்னிசண்ட், விப்ரோ, டிசிஎஸ் உள்ளிட்ட நிறுவனங்களையும் பின்பற்ற தூண்டலாம். 2022ம் ஆண்டு பேட்ச் மாணவர்களுக்கான சம்பளத்தினை அதிகரிக்க டிசிஎஸ் முயன்று வருவதாகவும் இத்துறை சார்ந்த மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சம்பள அதிகரிப்பு யுக்தி
கடந்த சில காலாண்டுகளாகவே உச்சம் தொட்டு வரும் அட்ரிஷன் விகிதத்தினை, கட்டுக்குள் வைக்க திட்டமிட்டு வரும் நிறுவனங்கள், அதனை கட்டுக்குள் வைக்க சம்பள அதிகரிப்பு என்ற ஆயுதத்தினை எடுக்க தொடங்கியுள்ளன. குறிப்பாக பிரெஷ்ஷர்களை பணியமர்த்த தொடங்கியுள்ள நிறுவனங்கள், அவர்களுக்கு சம்பளத்தினை அதிகரிக்க தொடங்கியுள்ளன.

பணியமர்த்தல் திட்டம்
ஹெச்சிஎல் நிறுவனம் நடப்பு நிதியாண்டில் 45000 பிரெஷ்ஷர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளது. இது கடந்த ஆண்டில் இருந்த 23000 என்ற விகிதத்தில் இருந்து கிட்டதட்ட இருமடங்காகும். 2022ம் நிதியாண்டில் இன்ஃபோசிஸ் நிறுவனம் 85000 பேரை பணியமர்த்தியது, இந்த ஆண்டும் 50,000 பிரெஷ்ஷர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளது. இதே டிசிஎஸ் நிறுவனம் கடந்த நிதியாண்டில் 78000 பிரெஷ்ஷர்களை -பணியமர்த்திய நிலையில் இந்த ஆண்டில் 40000 பேரை பணியமர்த்த திட்டமிட்டுள்ளது.

பிரெஷ்ஷர்களுக்கு நல்ல வாய்ப்பு
பிரெஷ்ஷர்களுக்கு நல்ல வாய்ப்பளிக்கும் விதமாக உயர்மட்ட நிறுவனங்களின் அதிகாரிகள், அதிகளவில் உள்ள தேவையை நிர்வகிக்க பிரெஷ்ஷர்களுக்கு பயிற்சி கொடுத்து பணியர்த்துவது தான் சிறந்த வழி. ஏனெனில் அனுபவம் உள்ளவர்களுக்கு வாய்ப்புகள் அதிகம் உள்ள நிலையில், அவர்கள் சிறந்த வாய்ப்புகள் கிடைக்கும்போது வெளியேறிவிடுகின்றனர்.

மொத்த ஊழியர்கள்
குறிப்பாக திறமை மிக்க ஊழியர்களுக்கு என்றுமே போட்டி இருந்து வருகின்றது. இந்தியாவின் டெக் துறையில் 5.1 மில்லியனுக்கும் அதிகமான ஊழியர்கள் உள்ளனர். அவர்களில் 1.6 மில்லியன் பேர் டிஜிட்டல் திறன் கொண்டவர்கள். 2022ம் நிதியாண்டில் மட்டும் 450000 பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். ஆனால் அவர்களில் பெரும்பாலானவர்கள் பிரெஷ்ஷர்கள் என்றும் நாஸ்காமின் மூத்த துணைத் தலைவரும், தலைமை அதிகாரியுமான சங்கீதா குப்தா தெரிவித்துள்ளார்.
மொத்தத்தில் ஐடி நிறுவனங்களின் இந்த முடிவானது ஐடி ஊழியர்களுக்கும் , பிரெஷ்ஷர்களுக்கும் கிடைத்த நல்ல வாய்ப்பு.