இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய தூணாக இருக்கும் இந்திய ஐடி துறை 2025ஆம் ஆண்டில் வாங்காத அடி இல்லை என்று தான் சொல்ல வேண்டும். டிரம்ப்-ன் விசா கட்டுப்பாடுகள், பணநீக்கம், ஏஐ சேவையின் ஆதிக்கம், ஊழியர்களுக்கு சம்பள உயர்வில் மறுப்பு, ஐடி நிறுவனங்கள் பெறும் புதிய ஆர்டர் மற்றும் வருமானத்தில் தொய்வு என பல விஷயங்கள் இந்திய நிறுவனங்கள், ஐடி ஊழியர்களை மட்டும் அல்லமால் ஒட்டுமொத்தமாக ஐடி துறையை பாதித்துள்ளது.
கடந்த ஒரு ஆண்டாக ஐடி பங்குகள் பலவீனமாக செயல்பட்டு வருவதற்கும் இதுதான் முக்கிய காரணமாக இருந்து வருகிறது. இந்திய ஐடி சேவை துறை எதிர்கொள்ளும் பிரச்சனைகளை கருத்தில் கொண்டு வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்களின் (FII) தொடர்ந்து ஐடி பங்குகள் மீதான முதலீட்டை குறைத்து விற்பனையை அதிகரித்துள்ளது.

மும்பை பங்குச்சந்தையில் ஐடி குறியீட்டில் உள்ள 76 நிறுவன பங்குகளில் 49 பங்குகளில் அதாவது 64 சதவீத பங்குகளில் FIIகள் தங்கள் பங்கு முதலீட்டை குறைத்துள்ளனர். மீதமுள்ள 27 நிறுவன பங்குகளில் அதாவது 36 சதவீதம் பங்குகளில் மட்டுமே அதிகரித்துள்ளனர். இந்த விற்பனையின் மூலம் ஏற்பட்ட பாதிப்பு தான் ஐடி துறை பங்குகளின் விலையை குறைத்துள்ளது.
ஆனால் முதலீட்டு சந்தை நிபுணர்கள் புதிதாக முதலீடு செய்ய விரும்புவோருக்கு தற்போது ஐடி சேவை துறை நிறுவனங்களின் மதிப்பீடுகள் கவர்ச்சிகரமாக உள்ளதாக கூறுகின்றனர். அமெரிக்க ஃபெடரல் ரிசர்வின் டிசம்பர் வட்டி குறைப்பு மற்றும் ரூபாயின் பலவீனம் ஆகியவை ஐடி துறை மீதான கண்ணோட்டம் மாறுப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெரிய தலைகள்
இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனங்களில் டெக் மஹிந்திராவில் FII முதலீட்டாளர்கள் தங்களுடைய பங்கு இருப்பை சுமார் 3.59 சதவீதம் குறைந்துள்ளனர். இதன் மூலம் டெக் மஹிந்திராவின் பங்கு விலை கடந்த ஒரு ஆண்டில் 11 சதவீதம் சரிந்துள்ளது.
இதேபோல் TCS-ல் 2.35 சதவீதம், இன்போசிஸில் 3.22 சதவீதம், HCL டெக்னாலஜிஸில் 2.74 சதவீதம் FII முதலீட்டாளர்கள் தங்களுடைய பங்கு இருப்பை குறைந்துள்ளனர்.
இதன் எதிரொலியாக டிசிஎஸ் பங்குகள் மிக மோசமாக செயல்பட்டு 28 சதவீதம் சரிந்துள்ளது. இதை தொடர்ந்து இன்போசிஸ் 19 சதவீதமும், HCL டெக் 13 சதவீதமும் குறைந்துள்ளன.

சிறிய தலைகள்
பெரிய நிறுவனங்கள் பட்டியலில் டிசிஎஸ் அதிகளவில் பாதிக்கப்பட்டு இருக்கும் வேளையில், சிறிய அளவிலான நிறுவனங்கள் பட்டியலில் சைன்ட் பங்கில் FII பங்கீடு 10.67 சதவீதம் குறைந்து 17.56 சதவீதமாக உள்ளது. இதன் பங்கு விலை கடந்த 12 மாதங்களில் 45 சதவீதம் சரிந்துள்ளது.
நடுத்தர அளவிலான கோஃபோர்ஜில் FII பங்கு இருப்பு 8.46 சதவீதம் குறைந்தாலும், இது ஒரு விதிவிலக்காக கடந்த ஒரு ஆண்டில் 2.31 சதவீத லாபம் தந்துள்ளது. பெர்சிஸ்டன்ட் சிஸ்டம்ஸில் FII பங்கு இருப்பு 3.51 சதவீதம் குறைந்துள்ளது. இந்த விற்பனை ஐடி துறையின் ஒட்டுமொத்த உணர்வை பாதித்துள்ளது.

2026ல் மீண்டு வருமா எதிர்பார்ப்பு:
ஐடி பங்குகள் அதன் அதிகப்படியான மதிப்பீடுகள் துறைந்து தற்போது கவர்ச்சிகரமாக உள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். அமெரிக்க பெடரல் ரிசர்வின் டிசம்பர் வட்டி விகித குறைப்பிற்கு பின்பு உலகளாவிய பொருளாதாரத்தை மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிற. இதோடு ரூபாய் மதிப்பு 91 ரூபாய் வரையில் சரிந்து டாலர் வருவாய் ஈட்டும் நிறுவனங்களுக்கு மிகவும் சாதகமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. இவை அனைத்தும் ஐடி துறையின் மீது மீண்டும் FII முதலீட்டை மீண்டும் ஈர்க்க சாதகமாக அமைந்துள்ளது.
ஐடி துறை அமெரிக்கா, ஐரோப்பா சந்தைகளை நம்பியுள்ளதால், உலக வளர்ச்சி மேம்பட்டால் லாபம் உயரும். ஆனால் ஏஐ தாக்கத்தை இந்திய ஐடி சேவை நிறுவனங்கள் எப்படி எதிர்கொள்ளும் என்பது முக்கிய கேள்வியாக உள்ளது. இதற்கான விடையோ, தெளிவையோ இந்திய ஐடி சேவை நிறுவனங்கள் முன்வைத்தால் முதலீட்டாளர்களுக்கு கூடுதல் நம்பிக்கை வரலாம்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications