இந்திய ஐடி சேவை நிறுவனப் பங்குகள் கடந்த 8 நாட்களாக பெரும் சரிவைச் சந்தித்து வந்த நிலையில் இன்று மீண்டுள்ளது, ஆனால் இதேவேளையில் முதலீட்டாளர்கள் இந்த உயர்வை லாபம் பார்க்க முடிவு செய்த காரணத்தால் அதிகளவில் விற்கத் துவங்கினர்.
இதன் எதிரொலியா காலையில் அதிரடியாக உயர்ந்த ஐடி பங்குகளும், ஐடி குறியீடும் மாலை வர்த்தகம் அந்தர் பல்டி அடித்துச் சரிந்து சில புள்ளிகள் உயர்வுடன் முடிந்தது. நேற்றைய வர்த்தகத்தில் இன்போசிஸ், விப்ரோ பங்குகள் 6 வருடத்தில் இல்லாத அளவுக்கு பெரும் சரிவைப் பதிவு செய்து பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த நிலையில், இன்று 6 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது.

மேலும் நிஃப்டி ஐடி குறியீடு கடந்த 8 நாள் வர்த்தகத்தில் 5 சதவீதம் வரையில் குறைந்த நிலையில், இன்று காலை வர்த்தகத்தில் 3 சதவீதம் உயர்ந்தது. ஆனால் வர்த்தக முடிவின் போது 0.13 சதவீத உயர்வுடன் முடிந்தது.
இன்று ஐடி பங்குகள் உயர்வதற்கு மிக முக்கியமான காரணம் டாலர் மதிப்பு, அமெரிக்கா- ஈரான் மத்தியிலான அமைதி பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில் இரு நாடுகளும் பெரும் போருக்குத் தயாராகி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் கச்சா எண்ணெய் விலை உயரத் துவங்கியுள்ளது.
அடுத்தாக அமெரிக்காவின் மத்திய வங்கி பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வட்டி விகிதத்தை உயர்த்துவதில் மிகவும் தீவிரமாக உள்ளது. இதனால் டாலர் மதிப்பு பெரியளவில் உயர்வும் என்பது உறுதியாகியுள்ளது.
இந்திய ஐடி சேவை நிறுவனங்கள் பொதுவாக அமெரிக்கச் சந்தையில் இருந்து தான் அதிகப்படியான வருமானத்தைப் பெற்று வரும் வேளையில் இந்த டாலர் மதிப்பு உயர்வு அடுத்த சில காலாண்டுகளுக்கு ஐடி நிறுவனங்களின் லாபத்தை அதிகரிக்கும் என எதிர்பார்ப்பு காரணமாக இன்று காலை வர்த்தகத்தில் பெரும்பாலான ஐடி நிறுவனப் பங்குகள் பெரும் உயர்வைப் பதிவு செய்தது.
ஆனால் முதலீட்டாளர்கள் 8 நாட்களுக்குப் பின்பு பெரும் உயர்வைப் பதிவு செய்திருக்கும் காரணத்தால் இதை லாபமாக்க முயற்சி செய்து பங்குகளை அதிகளவில் விற்றுள்ளனர். இதனால் ஏறிய வேகத்தில் இறங்கி அந்தர் பல்டி அடித்துள்ளது ஐடி சேவைத் துறை பங்குகள்.
மேலும் அடுத்த சில நாட்களில் செப்டம்பர் காலாண்டு முடிவுகளை வெளியிடும் சீசன் துவங்க உள்ள நிலையில், ஒட்டுமொத்த முதலீட்டுச் சந்தையும் ஐடி துறை மீது மிகுந்த எச்சரிக்கை உடன் செயல்படுகிறது. அக்டோபர் 8ஆம் தேதி முதல் நிறுவனமாக டிசிஎஸ் தனது செப்டம்பர் காலாண்டு முடிவுகளை வெளியிடுகிறது.


Click it and Unblock the Notifications


