இந்தியாவில் ஐடி சேவை வழங்கும் முன்னணி நிறுவனமான டிசிஎஸ் நிறுவனம் தங்களுடைய ஊழியர்களில் 2 சதவீதம் பேரை நடப்பு ஆண்டில் பணிநீக்கம் செய்ய இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டது. இதனை தொடர்ந்து டிசிஎஸ் நிறுவனத்தின் பல்வேறு நடவடிக்கைகளும் தொடர்ச்சியாக விமர்சனத்திற்கு ஆளாக்கப்பட்டு வருகின்றன.
ஊழியர்கள் பணிநீக்கம் மட்டுமில்லாமல் டிசிஎஸ் நிறுவனம் வேண்டுமென்றே சம்பளத்தை வழங்காமல் தவிர்க்கிறது, மூத்த நிலையில் இருக்கும் ஊழியர்களுக்கு எந்த ப்ராஜெக்ட்டையும் ஒதுக்காமல் கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைக்கிறது என பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ரெடிட் தளத்தில் ஒரு நபர் வெளியிட்டு இருக்கும் பதிவில் தன்னுடைய சகோதரர் நீண்ட காலம் டிசிஎஸ் நிறுவனத்தில் வேலை செய்ததாகவும் அவரை கட்டாயப்படுத்தி டிசிஎஸ் நிர்வாகம் ராஜினாமா செய்ய வைத்ததாகவும் தெரிவித்திருக்கிறார்.

இவ்வாறு நிர்பந்தம் செய்து ராஜினாமா செய்ய வைத்த தன்னுடைய சகோதரருக்கு டிசிஎஸ் நிறுவனம் எந்த ஒரு நிதி சார்ந்த இழப்பீடையும் வழங்கவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியிருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டு இருக்கக்கூடிய பதிவில் 30 ஆண்டுகாலம் டிசிஎஸ்-இல் வேலை செய்த நபர் எந்த ஒரு நிதி சார்ந்த இழப்பீடும் வழங்கப்படாமல் கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைக்கப்பட்டுள்ளார் என கூறியுள்ளார்.
என்னுடைய சகோதரர் கிட்டத்தட்ட 30 ஆண்டு காலம் டிசிஎஸ் நிறுவனத்திற்காகவே வேலை பார்த்தவர் , ஜூன் மாதம் திடீரென அவரை அழைத்த ஹெச்ஆர் குழுவினர் உங்களுக்கு 20 நிமிடங்கள் நேரம் கொடுக்கிறோம், நீங்களாகவே வேலை விட்டு ராஜினாமா செய்கிறீர்களா அல்லது நாங்கள் வேலையில் இருந்து நீக்கவா என முடிவெடுத்துக் கொள்ளுங்கள் எனக் கூறினார்களாம். டெர்மினேஷன் செய்தாலோ பணி நீக்கம் செய்தாலோ அடுத்த வேலை கிடைக்காது என்பதால் வேறு வழியில்லாமல் அவர் பணி ராஜினாமா செய்துள்ளார் என தெரிவித்துள்ளார்.

அந்த ஊழியர் தன் எதிர்காலத்தையும் குடும்பத்தின் எதிர்காலத்தையும் தீர்மானிக்க நிறுவனம் வழங்கியது வெறும் 20 நிமிடங்கள் தான் ஆனால் 30 ஆண்டு காலம் அவர் அந்த நிறுவனத்திற்காக வேலை செய்திருக்கிறார் என குறிப்பிட்டிருக்கிறார். மேலும் severance pay போன்ற நிதி ரீதியாக எந்த ஒரு தொகையையும் அவருக்கு வழங்கவில்லை என கூறியுள்ளார். தற்போது 50 வயதாக கூடிய தன்னுடைய சகோதரருக்கு வெளியில் எந்த ஒரு வேலை வாய்ப்பும் கிடைக்கவில்லை என சுட்டிக்காட்டியுள்ள அவர் டிசிஎஸ் நிறுவனம் இதுபோல 50 வயது நெருங்கியவர்களை குறிவைத்து செயல்படுகிறது என குற்றம் சாட்டியிருக்கிறார்.
இதற்கிடையே டிசிஎஸ் நிறுவனத்தின் பணி நீக்க நடவடிக்கைகள் மற்றும் ஊழியர்களை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைக்கும் நடவடிக்கைகளை கண்டித்து அனைத்து இந்திய ஐடி ஊழியர்கள் சங்கம் சார்பாக நொய்டா மற்றும் கொல்கத்தா ஆகிய பகுதிகளில் போராட்டம் நடைபெற்றது. பல்வேறு ஐடி ஊழியர்களும் டிசிஎஸ் நிறுவனத்திற்கு எதிரான பதாகைகளை ஏந்தியபடி இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். அதில் கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைக்க கூடாது, ஊழியர்கள் யாரும் நிறுவனத்திற்கு பயந்து ராஜினாமா செய்யாதீர்கள் என்பன உள்ளிட்ட வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.


Click it and Unblock the Notifications