நம் நாட்டில் சிகரெட் விற்பனையில் சக்கை போடு போட்டு வரும் நிறுவனம் ஐ.டி.சி நிறுவனம். இந்நிறுவனம் தற்போது சிகரெட் விற்பனையை மட்டும் நம்பி இருக்காமல் பல்வேறு துறை வர்த்தகங்களில் ஈடுபட்டு வருகிறது.
சோப்பு, மாவு பொருட்கள், மசாலா, பிஸ்கட், காகிதம், ஹோட்டல் என பல துறைகளில் தனது வர்த்தகத்தை விரிவுப்படுத்தியுள்ளது. இந்நிலையில், கடந்த பல ஆண்டுகளாக சிகரெட் விற்பனையில் தொடர் சரிவை சந்தித்து வந்த ஐ.டி.சி., தற்போது விற்பனையில் பழைய உச்சத்தை நெருங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.

ஐ.டி.சி. நிறுவனத்தின் தலைவர் சஞ்சீவ் பூரி நிறுவன கூட்டத்தில் பேசுகையில், சிகரெட் மீதான வரிகளில் அதிகப்படியான உயர்வு காரணமாக 2012-13 முதல் 2019-20ம் நிதியாண்டு வரையிலான காலத்தில் சிகரெட் விற்பனை அளவு 20 சதவீதம் குறைந்தது.
இருப்பினும் 2021-22ம் நிதியாண்டு முதல், புதிய சிகரெட் வகைகள் அறிமுகம் மற்றும் நிலையான வரி விதிப்பு போன்ற காரணங்களால் சட்டவிரோத வர்த்தகத்தில் இழந்த விற்பனையை நிறுவனம் திரும்ப பெற்றது.
ஒட்டு மொத்த சிகரெட் விற்பனையில் புதிய ரகங்களின் பங்களிப்பு 17 சதவீதமாக உள்ளது. புகையிலை வர்த்தகத்தில் சிகரெட் திறனை அதிகரிக்கவும், சட்டவிரோத விற்பனை எதிர்க்கவும் மற்றும் சந்தை நிலையை வலுப்படுத்தவும் நிறுவனம் விரும்புகிறது.
இந்தியாவின் தனிநபர் சிகரெட் நுகர்வு உலகிலேயே மிகக் குறைவாக உள்ளது, சட்டப்பூர்வ சிகரெட் பங்கு 9 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது. சிகரெட் தொழிலில் மூன்றில் ஒரு பங்கை சட்டவிரோத சிகரெட்டுகள் கொண்டுள்ளன. சிகரெட் மீது அதிக வரி விதிக்கப்படுகிறது. இருப்பினும் நுகர்வு குறைவதில்லை, ஆனால் விற்பனை சட்டவிரோத நிறுவனங்களுக்கு மாறுகிறது. எஃப்.எம்.சி.ஜி. வர்த்தகத்தில் ஒவ்வொரு ஆண்டும் EBITDA வரம்பை 0.80 சதவீதம் முதல் 1 சதவீதம் வரை அதிகரிக்க நிறுவனம் உறுதி பூண்டுள்ளது.
கடந்த 3 ஆண்டுகளில் பேக்கேஜ் செய்யப்பட்ட கோதுமை மாவு சந்தையில் நிறுவனத்தின் பங்கு 1.90 சதவீதம் உயர்ந்துள்ளது. பிஸ்கட் சந்தையில் கிரீம் பிஸ்கட் (24 சதவீத சந்தை பங்களிப்பு) மற்றும் சாக்கோ பில்ஸ் (60 சதவீத சந்தை பங்கு) போன்றவற்றில் கவனம் செலுத்துகிறது.
மேற்கு வங்கத்தில் 53 சதவீத சந்தை பங்களிப்பை கொண்ட மசாலா பிராண்டான சன்ரைஸை வாங்கியதில் இருந்து அதன் சந்தை பங்களிப்பு 11 சதவீதம் அதிகரித்துள்ளது. நூடுல்ஸ் சந்தையில் 20 சதவீத சந்தையை ஐ.டி.சி. கொண்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் கிளாஸ்மேட் ஸ்டேஷனரி பிராண்ட் 2.60 சதவீதம் சந்தை பங்கை மேம்படுத்தியுள்ளது. கடந்த சில ஆண்டுகளில் அகர்பத்தி சந்தையில் நிறுவனத்தின் சந்தை பங்கு 1.10 சதவீதம் உயர்ந்துள்ளது என்று தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications