மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் 2025-26ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அனைத்து தரப்பினரும் எதிர்பார்த்தது போல், நடுத்தர மக்களின் வரி சுமையை குறைக்கும் வகையில், வருமான வரி விதிமுறைகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை சீதாராமன் அறிவித்தார். குறிப்பாக, புதிய வரி விதிப்பு முறையில், ரூ.12 லட்சம் வரை வருமான வரி செலுத்த வேண்டியதில்லை. மத்திய அரசின் இந்த நடவடிக்கையால், மக்களின் செலவின வருவாய் அதிகரிக்கும், பணப்புழக்கம் மற்றும் நுகர்வு அதிகரிக்கும். இது நுகர்வோர் துறையை சேர்ந்த நிறுவனங்களுக்கு பெரிதும் பலன் அளிக்கும்.
மத்திய அரசின் வரி குறைப்பு நடவடிக்கை எதிரொலியாக, கடந்த 2 காலாண்டுகளாக மந்தகதியில் இருந்த நுகர்வு இனி வளர்ச்சி காணும் என நிபுணர்கள் நம்பிக்கை தெரிவித்தனர். மேலும் இந்த ஆண்டில் தனியார் நுகர்வு அதிகரிக்கும் எனவும் அவர்கள் தெரிவித்தனர். பட்ஜெட் அறிவிப்பின் எதிரொலியாக, ஐடிசி, இந்துஸ்தான், டாபர், மரிக்கோ போன்ற நுகர்வோர் துறையை சேர்ந்த பெரிய நிறுவன பங்குகளின் விலை 5 சதவீதத்துக்கு மேல் உயர்ந்துள்ளது. பட்ஜெட் அறிவிப்புக்கு பின், மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே ஐடிசி பங்கின் விலை 5 சதவீதத்துக்கு மேல் உயர்ந்து ரூ.471.30ஐ எட்டியது.

இந்துஸ்தான் யூனிலீவர் பங்கின் விலை வர்த்தகத்தின் இடையே 5 சதவீதத்துக்கு மேல் உயர்ந்து ரூ.2,600ஐ தொட்டது. மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே டாபர் இந்தியா இப்பங்கின் விலை 5 சதவீதத்துக்கு மேல் உயர்ந்து ரூ.551.70 வரை சென்றது. மும்பை பங்குச் சந்தையில் இன்று மரிக்கோ நிறுவன பங்கின் சுமார் 10 சதவீதம் ஏற்றம் கண்டு ரூ.736.10க்கு சென்றது.
பங்குச் சந்தை நிபுணர்கள் கணித்தது போல், இன்று நுகர்பொருள் துறையை சேர்ந்த பல பங்குகளின் விலை ஏற்றம் கண்டது குறிப்பிடத்தக்கது. பட்ஜெட் அறிவிப்பு வெளியான உடனே, ஐடிசி, இந்துஸ்தான் யூனிலீவர், மரிக்கோ,டாபர் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் விலை கிடுகிடுவென உயர்ந்தாலும், பின்பு முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி செயல்பாட்டதால் பங்குகளின் உயர்வு சற்று சரிந்தது.
story written by: Subramaian


Click it and Unblock the Notifications