தனிநபர்கள் வருமான வரி செலுத்துவதற்கு இன்னும் 5 நாட்களே மீதமிருக்கிறது. 2027-ஆம் ஆண்டிற்கு இதுவரையில் 3.6 கோடிக்கும் அதிகமானோர் ITR தாக்கல் செய்துள்ளனர். இருந்தாலும் இன்னும் லட்சக்கணக்கானோர் வரி செலுத்தாமல் இருக்கின்றனர். ஒரு சிலர் ஜூலை 31-ஆம் தேதிக்குப் பிறகும் காலக்கெடு நீட்டிக்கப்படும் என்ற நம்பிக்கையில் உள்ளனர். ஆனால் இதுவரையில் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
தேவையின்றி அபராதம் மற்றும் வட்டி செலுத்துவதைத் தவிர்ப்பதற்கு முன்கூட்டியே ITR தாக்கல் செய்வது நல்லது. கடந்த ஆண்டு மத்திய அரசு ஜூலை 31-ஆம் தேதிக்குப் பிறகும் ITR தாக்கல் செய்வதற்கு அனுமதித்தது. 2025 ஆம் ஆண்டில் செப்டம்பர் 16-ஆம் தேதி வரை டெட்லைன் வழங்கப்பட்டிருந்தது.

ஆனால் இந்த முறை காலக்கெடு நீட்டிக்கப்படாமலும் போகலாம் என்று வரி நிபுணர்கள் தொடர்ந்து எச்சரிக்கின்றனர். எனவே ஜூலை 31-ஆம் தேதிக்குள் வரி செலுத்துவோர் ஐடிஆர் தாக்கல் செய்வது நல்லது. இந்தக் காலக்கெடுவைத் தவறவிட்டால் சில சலுகைகள் கிடைக்காமல் போவதற்கும் வாய்ப்புள்ளது.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சீக்கிரமாக ஐடிஆர் படிவங்கள் ஆன்லைனில் வெளியிடப்பட்டது. இதனால் வரி செலுத்துபவர்களுக்கும் அதிக நேரம் இருந்தது. மேலும் தளத்தில் ஏற்படும் பிரச்சனைகளையும் அவ்வப்போது மத்திய அரசு சரி செய்து வந்தது. இதனால் பெரிதாக தொழில்நுட்ப கோளாறுகள் எதுவும் ஏற்படவில்லை. கடந்த முறை இருந்ததைப் போல் இந்த முறை தொழில்நுட்பக் கோளாறை காரணம் காட்டி காலக்கெடு நீட்டிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்றே கூறப்படுகிறது.
ஜூலை 31-ஐ தவறவிட்டால் என்ன நடக்கும்?: ஐடிஆர் 1 மற்றும் ஐடிஆர் 2 ஆகிய படிவங்களைப் பயன்படுத்தி ஐடிஆர் தாக்கல் செய்பவர்கள் ஜூலை 31ஆம் தேதியை தவறவிட்டால் வருமான வரி சட்டம் பிரிவு 234 F-இன் கீழ் தாமதக் கட்டணம் செலுத்த வேண்டி வரும். இதை பிலேட்டட் ரிட்டன் என்று கூறுவார்கள்.
தாமதமாக வரி செலுத்துபவருடைய வருமானம் ரூ.5 லட்சத்திற்கு அதிகமாக இருந்தால் ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படும். அதுவே ரூ.5 லட்சத்திற்குள் இருந்தால் 1,000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டி வரும். அதே நபருக்கு ஏற்கனவே வரி பாக்கி இருந்தால் மீதமிருக்கும் வரி தொகைக்கு 1 சதவீதம் வட்டி விதிக்கப்படும்.
அடுத்தபடியாக ரீஃபண்ட் பெறும் வரி செலுத்துபவர்களுக்கும் இது பிரச்சனை தான். தாமதமாக ஐடிஆர் தாக்கல் செய்யும்போது ரீஃபண்ட் தொகை அக்கவுண்டுக்கு வரவும் தாமதமாகும். எனவே இது போன்ற பிரச்சனைகளை எல்லாம் தவிர்ப்பதற்கு கடைசி நேரம் வரை காத்திருக்காமல் முன்கூட்டியே தாக்கல் செய்வது நல்லது.
இந்த கட்டுரை எழுதும் வரை டெட்லைன் தேதி நீட்டிக்கப்படுவதற்கான எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. எனவே கடைசி நேரத்தில் ஏற்படும் தொழில்நுட்பக் கோளாறுகளை தவிர்ப்பதற்கு ஜூலை 31-ஆம் தேதிக்கு முன்னரே வரி தாக்கல் செய்வது பரிந்துரைக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications
