2027-ஆம் மதிப்பீட்டு ஆண்டிற்கு வருமான வரி தாக்கல் செய்ய ஜூலை 31-ஆம் தேதி தான் கடைசி நாள். இதனால் வரி செலுத்துபவர்கள் ஐடிஆர் 1 மற்றும் ஐடிஆர் 2 படிவங்களை பரபரப்பாக சமர்ப்பித்து வருகின்றனர். ஒரு சிலர் கடந்த ஆண்டுக்கான ITR-ஐ தாக்கல் செய்யாமல் இருப்பார்கள். இன்னும் சிலர் குறிப்பிட்ட வருமானத்தை மட்டும் காண்பிக்க மறந்திருப்பார்கள்.
அப்படிப்பட்டவர்கள் மீண்டும் வருமான வரி தாக்கல் செய்வதற்காக அப்டேட்டட் ஐடிஆர் Updated ITR (ITR-U) என்ற ஆப்ஷனை வருமான வரித்துறை வழங்குகிறது. வருமான வரிச் சட்டம் 1961, பிரிவு 139(8A)-இன் கீழ், வரி செலுத்துபவர்கள் தங்களுடைய வரிக் கணக்கில் ஏதேனும் தவறு செய்திருந்தால் அதை திருத்திக் கொண்டு அதற்கு ஏற்ப கூடுதல் வரியை செலுத்துவதற்காக தான் இந்த வசதி வழங்கப்பட்டுள்ளது.

அப்டேட்டட் ஐடிஆர் என்றால் என்ன?: அப்டேட் ஐடிஆர் என்பது ஒரு மதிப்பீட்டாண்டில் வரி செலுத்துபவர்கள், தங்களுடைய வருமான வரி கணக்கை பிழையாக தாக்கல் செய்திருந்தாலோ அல்லது வரி செலுத்தாமல் இருந்தாலோ அதை சரி செய்து கொள்வதற்காக வருமானவரித்துறை வழங்கும் வசதியாகும்.
இதன் மூலம் தாமதமாக ITR தாக்கல் செய்யும் காலம் முடிந்திருந்தாலும் அல்லது ரிவைஸ்டு ஐடிஆர் தாக்கல் செய்யும் காலம் முடிந்திருந்தாலும், அதன் பிறகும் ITR தாக்கல் செய்யலாம். அரசுக்கு செலுத்த வேண்டிய சரியான வரியை.. சரியான நேரத்தில் செலுத்தத் தவறியவர்கள் தேவையற்ற சட்ட சிக்கல்களை தவிர்ப்பதற்காக இந்த அப்டேட்டட் ஐடிஆர்-ஐ தாக்கல் செய்யலாம்.
2026-ஆம் மதிப்பீட்டாண்டிற்கான ITR-ஐ இப்போது தாக்கல் செய்ய முடியுமா?: 2026-ஆம் மதிப்பீட்டு ஆண்டிற்கு விடுபட்ட ஐடிஆர்-ஐ, ITR-U படிவத்தைப் பயன்படுத்தி தாக்கல் செய்யலாம். இதற்கு வருமான வரித்துறை காலக்கெடு விதித்துள்ளது.
ITR-U-ஐ தாக்கல் செய்வதற்கான காலக்கெடு என்ன?: 2025-ஆம் ஆண்டின் நிதிச் சட்டத்தின் கீழ் ITR-U தாக்கல் செய்வதற்கு தற்போது 48 மாதங்கள் வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதாவது 4 ஆண்டுகள். இதற்கு முன்னர் வரை இந்த காலக்கெடு 2 ஆண்டுகளாக இருந்தது. எனவே வருமான வரி செலுத்துவோர் தாமாக முன்வந்து விடுபட்ட வருமானம் அல்லது பிழையாக செலுத்திய வரி ஆகியவற்றை சரி செய்து கொள்ள இது ஒரு வாய்ப்பு.
யார் யாருக்கு இந்த ஐடிஆர்-U?: ஏதேனும் வருமானத்தை மறந்து தவறாக ஐடிஆர் தாக்கல் செய்தவர்கள், குறைத்துக் காட்டப்பட்ட வருமானத்தை மீண்டும் சரி செய்து.. தாக்கல் செய்ய விரும்புபவர்கள் ITR-U தாக்கல் செய்யலாம். சிலர் அப்டேட்டட் ஐடிஆர்-ஐ பயன்படுத்தி ஏற்கனவே செலுத்திய வரியைக் குறைக்கலாம் என்று நினைக்கின்றனர். இதற்கு அப்டேட்டட் ஐடிஆர்-ஐ பயன்படுத்த முடியாது. அதே போல ரீஃபண்ட் பெறுவதற்காகவும் நீங்கள் அப்டேட்டட் ஐடிஆர் தாக்கல் செய்ய முடியாது.
யாரெல்லாம் அப்டேட்டட் ஐடிஆர் தாக்கல் செய்ய முடியாது?: ரீஃபண்ட் பெற விரும்புபவர்கள் அல்லது ஏற்கனவே பெற்ற ரீஃபண்ட் தொகையை அதிகரிக்க விரும்புபவர்கள், முன்பே தாக்கல் செய்த வரியைக் குறைத்து காண்பிக்க விரும்புபவர்கள், வருமான வரித் துறையின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்ட நபர்கள், பண மோசடி மற்றும் வரி ஏய்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட நபர்கள் அப்டேட்டட் ஐடிஆர் தாக்கல் செய்ய முடியாது.
இதற்கு கூடுதல் வரி உண்டா?: ஒரு நிதியாண்டில் டெட்லைன் தேதி முடிந்த பிறகு தாமதமாக வரி செலுத்தும் பட்சத்தில் தாமத கட்டணம் செலுத்த வேண்டும். அதேபோல வரி பாக்கி மீதம் இருப்பவர்களுக்கு 1 சதவீதம் வரை வட்டி வசூலிக்கப்படுகிறது. எனவே வட்டி, அபராதம் தாமத கட்டணம் ஆகியவற்றை சேர்த்து அப்டேட் ஐடிஆர் தாக்கல் செய்பவர்கள் அடிஷ்னல் டேக்ஸ் என்று சொல்லப்படுகிற கூடுதல் வரியை செலுத்த வேண்டும்.
12 மாதங்களுக்குள் தாக்கல் செய்து விட்டால் 25 சதவீதம் வரை கூடுதல் வரி விதிக்கப்படும். அதுவே 12 மாதங்கள் முதல் 24 மாதங்களுக்குள் தாக்கல் செய்தால் 50 சதவீதம் வரை வரி விதிக்கப்படும். 24 மாதம் முதல் 36 மாதங்களுக்குள் தாக்கல் செய்தால் கூடுதலாக 60% வரி விதிக்கப்படும். 36 முதல் 48 மாதங்களுக்குள் தாக்கல் செய்தால் 70% வரி விதிக்கப்படும். ஆக நீங்கள் தாமதமாக ஐடிஆர் தாக்கல் செய்யும் ஒவ்வொரு மாதத்திற்கும் ஏற்ப கூடுதல் வரி செலுத்த வேண்டி வரும்.
அப்டேட்டட் ஐடிஆர் தாக்கல் செய்ய எந்த படிவத்தை பயன்படுத்த வேண்டும்?: வரி செலுத்துபவர்கள் குறிப்பிட்ட மதிப்பீட்டு ஆண்டில் ஐடிஆர் தாக்கல் செய்யும்போது அப்டேட்டட் ஐடிஆர் படிவம், ITR-Uவை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். அதற்கான வரி, வட்டி மற்றும் அடிஷனல் டேக்ஸ் ஆகியவற்றையெல்லாம் செலுத்தி தாக்கல் செய்யலாம்.


Click it and Unblock the Notifications
