இந்தியாவில் சாமானிய மக்கள் பரவலாக பயன்படுத்திய செல்போன்கள் என்றால் அது நோக்கியா பிராண்டு செல்போன்கள் தான். இன்னமும் கூட நோக்கியா நிறுவன போன்கள் என்றால் பேட்டரி நீடிக்கும் தன்மை, தரம் ஆகியவற்றை நாம் நினைவு கூற முடியும்.
என்ன தான் போட்டி போட்டு கொண்டு நிறுவனங்கள் புதிது புதிதாக ஸ்மார்ட் போன்களை அறிமுகம் செய்தாலும், சாதாரண நோக்கியா போன்கள் நம் மனதில் பிடித்த இடத்தை அவற்றால் இன்னும் எட்ட முடியவில்லை. ஆனால் அப்படிப்பட்ட நோக்கியா எனும் பெயரில் இனி செல்போன்கள் வெளிவராது என்பது தான் சோகம்.

ஹெச்எம்டி குளோபல் நிறுவனமும் நோக்கியாவும்:
கடந்த 7 ஆண்டுகளாக நோக்கியா பிராண்டட் ஸ்மார்ட்போன்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது ஹெச்எம்டி(HMD) குளோபல் நிறுவனம்.
கடந்த 2016ஆம் ஆண்டில் மைக்ரோசாப்ட் நிறுவனத்திடம் இருந்து நோக்கியா பிராண்டின் உரிமையை பெற்றது ஹெச்எம்டி குளோபல் நிறுவனம். 10 ஆண்டுகளுக்கு இந்த பிராண்டின் பெயரில் போன்களை தயாரித்து விற்பனை செய்வது என அப்போது ஒப்பந்தம் போடப்பட்டது.
அதன் படி ஹெச்எம்டி நிறுவனம் நோக்கியா பெயரில் ஸ்மார்ட்போன்கள், டேப்லட்களை சந்தையில் அறிமுகம் செய்து விற்பனை செய்து வருகிறது.
இனி நோக்கியா பெயரில் போன் இல்லையா?
திடீரென நோக்கியா பிராண்டை குறிக்கும் இணையதள பக்கம், எக்ஸ் வலைத்தள பக்கங்களில் அந்த பெயரானது ஹெச்எம்டி குளோபல் என மாற்றப்பட்டுள்ளது. ஏற்கனவே ஹெச்எம்டி குளோபல் என்ற பிராண்டின் கீழ் ஸ்மார்ட் போன்கள் அறிமுகத்தை கடந்த ஆண்டே இந்த நிறுவனம் தொடங்கி விட்டது. இந்நிலையில் நோக்கியா என்ற பெயருக்கு பதிலாக ஹெச்எம்டி பெயரில் புதிய ஸ்மார்ட் போன் தொடர்பான தகவல்களை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.
ஹெச்எம்டி பெயரில் போன்கள் அறிமுகம்:
நோக்கியா என்ற பெயரை பயன்படுத்த மாட்டோம் என அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இருப்பினும் பெயரை மாற்றியது, தங்கள் நிறுவனப் பெயரில் புதிய போன்கள் மற்றும் சாதனங்களை அறிமுகம் செய்வதில் தீவிரம் ஆகியவற்றை பார்க்கும் போது இனி நோக்கியா என்ற பிராண்டை இந்நிறுவனம் பெருமளவில் பயன்படுத்தாது என்றே நிபுணர்கள் கணிக்கின்றனர்.
ஏற்கனவே நோக்கியா பெயரில் அறிவிக்கப்பட்ட போன்கள், டேப்லெட்களின் விற்பனை தொடரும், ஆனால் இனி புதிதாக நோக்கியா பெயரில் ஸ்மார்ட்போன்கள் வராது அதற்கு பதிலாக ஹெச்எம்டி பெயரில் போன்கள் வெளியிடப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும் நோக்கியா என்ற பெயருக்கு இருக்கும் செல்வாக்கு இதற்கும் கிடைக்குமா? அதே தரம் இந்த செல்போன்களிலும் காணப்படுமா என்பதெல்லாம் வருங்காலங்களில் தெரிந்துவிடும்.


Click it and Unblock the Notifications