படையப்பா படத்தில் வயசானாலும் உன் ஸ்டைலும், அழகும் குறையவே இல்லை என்பது போல் இன்னும் எத்தனை படம் வந்தாலும், ரஜினிகாந்த்-க்கு எவ்வளவு வயசானாலும் அவர் படத்துக்கு கிரேஸ் எப்போதும் குறையாது. 72 வயதில் அவர் நடித்திருக்கும் ஜெயிலர் படத்தின் ஓப்பனிங் சீன்-க்கு இன்றும் மக்கள் கூச்சல் தியேட்டருக்கு வெளியே கேட்கிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'ஜெயிலர்' படத்தின் தாக்கம் இந்தியா முழுவதும், ஏன் தமிழர்கள் அதிகம் வாழும் அனைத்து பகுதிகளிலும் உள்ளது. ஜெயிலர் படத்திற்காக பெங்களூரு, கோயம்புத்தூர் மற்றும் சென்னையில் உள்ள சில அலுவலகங்கள் விடுமுறை அறிவித்தது.

சென்னையில் இயங்கி வரும் Freshworks நிறுவனம் 2200 ஊழியர்களுக்கும் இலவசமாக டிக்கெட் கொடுத்து ஒரே நேரத்தில் ஒரு தியேட்டரில் இருக்கும் 7 திரைகளை மொத்தமாக புக் செய்து பலரையும் வியக்கவைத்தது. இதன் தொடர்ச்சியாக பிரபல ஆன்லைன் ஆட்டோ மற்றும் பைக் டாக்சி புக்கிங் தளமான ரேபிடோ நிறுவனம் சிறப்பான சம்பவத்தை செய்துள்ளது.
பாட்ஷா படம் மூலம் ரஜினிகாந்த் மற்றும் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு பெரிய பந்தம் உருவாகியுள்ளது அனைவருக்கும் தெரியும். இதை அடிப்படையாக வைத்துக்கொண்டு ரேபிடோ ஜெயிலர் படத்திற்கு சென்னையில் தங்களது ஆட்டோ ஓட்டுனர்களுக்காக சிறப்பு காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.
ரேபிடோ நிறுவனத்தின் கேப்டன்களுக்கு அதாவது ஓட்டுனர்களை மகிழ்விக்கும் வகையிலும், அவர்கள் செய்யும் பணியை பாராட்டும் வகையிலும் ஜெயிலரின் பிரத்யேக காட்சி ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் நிர்வாகத்துடன் ஊழியர்கள் இணக்கம் மற்றும் வொர்க் லைப் பேலென்ஸ் ஆகியவை மேம்படுத்தும் முயற்சிகள் கையில் எடுக்கப்பட்டு உள்ளது என்று ரேபிடோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 12ஆம் தேதி சென்னை கிருஷ்ணவேணி திரையரங்கில் 500க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் தங்களின் தலைவர் படத்தின் சிறப்புக் காட்சியைக் கண்டு மகிழ்வார்கள் என ரேபிடோ தெரிவித்துள்ளது.
இதற்கு ஏற்றார் போல் 2 வருடத்திற்கு பின்பு ரஜினி நடித்து வெளியாகும் படம் ஜெயிலர் என்பதால் அனைத்து தரப்பினரையும் மகிழ்விக்கும் வகையில் படம் அமைந்திருந்தது. இதன் மூலம் முதல் நாளிலேயே 52 கோடி ரூபாய் கலெக்ஷன், 2வது நாள் முடிவில் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக கலெக்ஷனாகியுள்ளது.


Click it and Unblock the Notifications