பிரதம மந்திரி ஜன் தன் யோஜனா திட்டத்தின் கீழ் இந்தியா முழுவதும் மக்கள் துவங்கப்பட்ட இலவச வங்கி கணக்குகளில் சுமா் 20 சதவீதம் செயல்படாமல் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
டிசம்பர் 6 ஆம் தேதி நிலவரத்தின் படி மொத்தம் 10.34 கோடி ஜன் தன் யோஜனா கணக்குகள் செயல்படவில்லை என்றும், இதில் 4.93 கோடி கணக்குகள் பெண்களுடையது என்றும் மத்திய நிதித்துறை இணையமைச்சர் பாகவத் கே காரத், மாநிலங்களவையில் அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.

வங்கிகளில் இருந்து பெறப்பட்ட தகவல்களின்படி மொத்தம் 51.11 கோடி ஜன் தன் யோஜனா கணக்குகள் திறக்கப்பட்டது என்றும், இதில் 20 சதவீத கணக்குகள் செயல்படவில்லை என்றும் தெரியவந்துள்ளது.
வங்கிகளில் உள்ள கணக்குகளுக்கு இணையான எண்ணிக்கையில் ஜன் தன் கணக்குகளும் செயல்படாமல் உள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் சமர்ப்பித்த அறிக்கையில், செயல்படாத இந்த கணக்குகளில் பிரதம மந்திரி ஜன் தன் யோஜனா திட்டத்தின் கீழ் ரூ.12,779 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இது ஜன் தன் கணக்குகளில் டெபாசிட் செய்த மொத்த தொகையில் இது 6.12 சதவீதம் ஆகும்.
செயல்படும் கணக்குகளுக்கு வழங்கப்படும் அதே வட்டித்தொகை இந்தக் கணக்குகளில் தொடர்ந்து டெபாசிட் செய்யப்படும். சம்பந்தப்பட்ட வங்கிக் கணக்கு உரிமையாளர்கள் இந்தத் தொகையை தாங்கள் விரும்பும் நேரத்தில் எடுத்து பயன்படுத்தலாம். அதன் பின் அந்த கணக்குகள் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.
செயல்படாத கணக்குகளின் சதவீதத்தை குறைப்பதற்கான நடவடிக்கைகளை வங்கிகள் மேற்ககொண்டு வருகின்றன, மேலும் இதை மத்திய அரசு கண்காணித்து வருகிறது. உள்ளூர் அளவில் சிறப்பு முகாம்களை நடத்தி இந்த கணக்குகள் பற்றிய விழிப்புணர்வை வாடிக்கையாளர்களிடையே ஏற்படுத்தும் நடவடிக்கைகளும் நடக்கின்றன.
இதுபோன்ற பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக 2017ல் 40 சதவீதமாக இருந்த செயல்படாத கணக்குகளின் எண்ணிக்கை இப்போது 20 சதவீதமாகக் குறைந்துள்ளது.
ரிசர்வ் வங்கி வழிகாட்டுதலின்படி இரண்டாண்டு காலத்துக்கு ஒரு வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கில் எந்தவிதப் பரிவர்த்தனைகளும் செய்யப்படாமல் இருந்தால் அதை முடங்கிய கணக்கு அல்லது செயல்படாத கணக்கு என்று கருதவேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜன் தன் கணக்குகள் செயல்படாமல் இருப்பதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. இதற்கும் கணக்குகளின் உரிமையாளர்களுக்கும் எந்த விதமான நேரடி தொடர்போ காரணங்களோ இல்லை.
செயல்படாமல் இருக்கும் கணக்குகளை மீண்டும் செயல்படுத்துவதற்கு சம்பந்தப்பட்ட கணக்கின் உரிமையாளர் எழுத்துப் பூர்வமான விண்ணப்பத்தை வங்கியில் எந்த நேரத்திலும் அளித்து பயன்படுத்தலாம். இதற்கு எந்தவித கட்டணமும் வசூலிக்கப்படாது என வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கணக்கு வைத்திருப்பவர்களின் நோ யுவர் கஸ்டமர்(KYC) நடைமுறையை முடித்தபின் இந்தக் கணக்குகள் செயல்பாட்டுக்குக் கொண்டு வரப்படும். இது தொடர்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் காரத், யூகோ வங்கியில் உடனடி பணப்பட்டுவாடா சேவை மூலம் ரூ.820 கோடி ரூபாய் ஜன் தன் கணக்குகளில் வரவு செய்யப்பட்டுள்ளது என்றார்.
டிசம்பர் 7 ஆம் தேதிப்படி 28,891 கணக்குகளில் இருந்து யூகோ வங்கி ரூ.705.31 கோடியை திரும்ப வசூலித்துள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications