டெல்லி: டிவி, ஏசி, வாஷிங் மெஷின் உள்ளிட்ட மின்னணு சாதன விற்பனையில் வேகமாக வளர்ந்து வரும் சந்தை இந்தியா. ஒரு காலத்தில் இந்திய மின்னணு சாதன சந்தையில் ஜப்பானை சேர்ந்த நிறுவனங்களே ஆதிக்கம் செலுத்தின. ஆனால் சீன மற்றும் கொரிய நிறுவனங்கள் குறைந்த விலைக்கு பொருட்களை விற்பனை செய்து இந்த சந்தையை பிடித்துவிட்டன.
இந்த நிலையில் ஜப்பானை சேர்ந்த நிறுவனங்கள் மீண்டும் அந்த இடத்தை பிடிக்க தொடங்கிவிட்டன. சோனி, பேனசோனிக், ஹிட்டாச்சி ஆகிய நிறுவனங்கள் ஜப்பானை சேர்ந்தவை. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த மூன்று நிறுவனங்கள் தான் இந்தியாவில் தொலைக்காட்சி உள்ளிட்ட வீட்டுக்கு தேவையான மின்னணு சாதனங்களை அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்து வந்தன.

ஆனால் இடைப்பட்ட காலத்தில் சீனா மற்றும் தென்கொரியாவை சேர்ந்த நிறுவனங்கள் குறைந்த விலைக்கு இந்த பொருட்களை விற்பனை செய்து இந்திய சந்தையை ஆக்கிரமிக்க தொடங்கின.
2023-24 ஆம் நிதியாண்டினை பொறுத்தவரை ஜப்பானை சேர்ந்த பேனசோனிக் நிறுவனம் 53 கோடி நஷ்டம் அடைந்திருப்பதாக தெரிவித்தது. கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி அடையாமல் ஒரே அளவாக இருந்த நிலையில் நடப்பு நிதியாண்டின் முதல் ஆறு மாதத்தில் வளர்ச்சி பாதைக்கு சென்றுள்ளது.
கடந்த ஆண்டில் தங்கள் நிறுவனம் 2038 கோடி ரூபாய்க்கு பொருட்களை விற்பனை செய்திருக்கும் நிலையில் நடப்பு நிதியாண்டில் 3000 கோடி ரூபாய்க்கு விற்பனை என இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.
சோனி இந்தியா நிறுவனம் கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்குப் பிறகு தங்களுடைய விற்பனையில் 20% வளர்ச்சி அடைந்துள்ளது. 2014-15ஆம் ஆண்டில் இந்நிறுவனம் இந்தியாவில் 11 ஆயிரம் கோடி ரூபாய்க்கு பொருட்களை விற்பனை செய்திருந்தது. அது 2024 ஆம் ஆண்டில் 7,063 கோடி என அதிகரித்துள்ளது. இதில் நிகர லாபம் 168 கோடி ரூபாய் என்ற அளவில் இருக்கிறது.
இந்திய எலக்ட்ரானிக்ஸ் சந்தை கடந்த ஐந்து முதல் ஏழு ஆண்டுகளாக சீன மற்றும் கொரிய நிறுவனங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. சீனாவை சேர்ந்த ஸியோமி, ஹையர் ஆகியவை குறைந்த விலையில் பொருட்களை விற்பனை செய்து இந்திய சந்தையில் நுழைந்தன. தென்கொரிய நிறுவனங்களும் இதே பாணியை பின்பற்றின. எனவே சந்தை நிலவரத்தை புரிந்து கொண்ட ஜப்பான் நிறுவனங்கள் தங்கள் உத்தியை மாற்றின.
இந்தியாவில் அதிகம் விற்பனையாகாத பொருட்களை கொண்டு வருவதையே குறைத்துவிட்டன, மாறாக தங்கள் பொருட்களை தரமாகவும் பிரீமியமாகவும் வழங்க தொடங்கின. சோனி இந்தியா நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் இந்திய சந்தையில் பிரீமியம் பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனம் என்ற பெயரை மீண்டும் சோனி இந்தியா பெற்று இருக்கிறது என கூறினார்.
இந்தியாவில் தற்போது பிரீமியம் பொருட்களுக்கான தேவை அதிகரித்துள்ளது என்பதால், அந்த இடத்தை ஜப்பான் நிறுவனங்கள் நிரப்ப தொடங்கியுள்ளன.
Story Written by: Devika


Click it and Unblock the Notifications