டோக்கியோ, ஜப்பான்: அமெரிக்க அரசின் வரிவிதிப்பு நடவடிக்கைகளுக்கு மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி ஜப்பானுக்கு அரசு முறை பயணமாக சென்றிருக்கிறார். இரண்டு நாள் பயணமாக ஜப்பான் சென்று இருக்கும் பிரதமர் மோடி ஜப்பான் நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய அழைப்பு விடுத்தார்.
தலைநகர் டோக்கியோவில் இந்தியா ஜப்பான் பொருளாதாரக் கூட்டத்தில் பங்கேற்று பிரதமர் மோடி பேசினார். அப்போது இந்தியா உலகின் வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதார நாடாக உள்ளது என தெரிவித்த அவர் மிக விரைவில் இந்தியா உலகில் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாறப்போகிறது என நம்பிக்கை தெரிவித்தார்.

ஜப்பானின் தொழில்நுட்பமும் இந்தியாவின் திறமையும் இணைந்தால் இந்த நூற்றாண்டின் தொழில்நுட்ப புரட்சியை உருவாக்க முடியும் என மோடி ஜப்பான் நிறுவனங்களுக்கு இந்தியாவில் முதலீடு செய்ய அழைப்பு விடுத்தார். வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களான செயற்கை நுண்ணறிவு ,செமி கண்டக்டர்,குவாண்டம் கணினி, உயிரி தொழில்நுட்பம் மற்றும் விண்வெளி ஆகியவற்றில் இந்தியா மிக சவாலான மற்றும் லட்சிய முயற்சிகளை எடுத்து வருகிறது என அப்போது மோடி தெரிவித்தார் .
ஏற்கனவே இந்தியாவும் ஜப்பானும் ரோபோடிக்ஸ் , கப்பல் கட்டுமானம் மற்றும் அணுசக்தி துறைகளில் வெற்றிகரமான கூட்டாளிகளாக செயல்படுவதாக சுட்டிக் காட்டிய பிரதமர் மோடி இந்தியாவில் தற்போது ராணுவம் மற்றும் விண்வெளி துறையில் தனியார் பங்களிப்பு ஊக்குவிக்கப்படுகிறது என தெரிவித்தார். அதே போல அணுசக்தி துறையிலும் தனியார் பங்களிப்பை அனுமதிக்கிறோம் என குறிப்பிட்டார். எனவே ஜப்பான் நிறுவனங்கள் இந்த துறைகளில் எல்லாம் இந்தியாவில் தாராளமாக முதலீடு செய்யலாம் என தெரிவித்தார்.
இந்தியாவின் பொருளாதாரமும் அரசியலும் நிலைத்தன்மையோடு இருக்கிறது என சுட்டிக்காட்டிய மோடி இதன் மூலம் முதலீட்டுக்கான நம்பிக்கைகுரிய ஒரு நாடாக இந்தியா மாறி இருக்கிறது என தெரிவித்தார் . இந்தியாவின் வளர்ச்சி பயணத்தில் ஜப்பான் முக்கிய பங்காற்றி இருக்கிறது என தெரிவித்த மோடி மெட்ரோ ரயில் திட்டங்கள் தொடங்கி பல்வேறு உற்பத்தி துறை சார்ந்த நிறுவனங்கள் வரை ஜப்பானின் பங்களிப்பை குறிப்பிட்டார்.
ஜப்பான் நிறுவனங்கள் இந்தியாவில் 40 பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்திருப்பதையும் மோடி சுட்டிக்காட்டினார். இந்தியாவில் நீங்கள் செய்யும் மூலதனம் வளராது பல மடங்கு பெருகும் அப்படி ஒரு சாதகமான சூழலை உண்டாக்கி வைத்திருக்கிறோம் என மோடி அப்போது நம்பிக்கை தெரிவித்தார். மேக் இன் இந்தியா திட்டம் குறித்தும் அவர் பெருமிதம் தெரிவித்தார். அமெரிக்கா உடன் வரி விவகாரத்தில் மோதல் ஏற்பட்டுள்ள நிலையில் மோடியின் ஜப்பான் பயணம் அமைந்துள்ளது. கிட்டதட்ட 7 ஆண்டுகள் கழித்து மோடி ஜப்பானுக்கு சென்றிருக்கிறார்.


Click it and Unblock the Notifications