பெங்களூரு: இந்தியாவில் பங்குச்சந்தைகளில் தினம்தோறும் வர்த்தகம் செய்வதை பல்வேறு செயலிகளும் எளிமையாக்கி உள்ளன. இதற்கு முன்னோடியாக இருந்தது நிகில் காமத்தால் தொடங்கப்பட்ட ஸெரோதா என்ற செயலி தான். கடந்த 2010 ஆம் ஆண்டு நிதின் காமத் மற்றும் அவருடைய சகோதரன் நிகில் காமத் ஆகிய இருவரும் இணைந்து பெங்களூருவை தலைமை இடமாகக் கொண்டு ஸெரோதா என்ற பங்கு வர்த்தக செயலியை தொடங்கினர். அனைத்து மக்களும் பங்கு வர்த்தகம் மேற்கொள்வதை இந்த செயலி எளிமைப்படுத்தியுள்ளது.
14 ஆண்டுகளாக இந்த நிறுவனம் பங்கு வர்த்தகத் துறையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 2024 ஆம் ஆண்டில் இந்த நிறுவனம் 9372 கோடி ரூபாய் வருமானம் ஈட்டிருக்கிறது . இதனை தொடங்கிய சகோதரர்கள் நிதின் காமத் மற்றும் நிகில் காமத் ஆகிய இருவருமே இந்தியாவின் இளம் பணக்காரர்களாக மாறியுள்ளனர்.

இந்த நிலையில் பெங்களூரில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் இந்தியாவின் எதிர்காலத்தை வடிவமைக்கும் இளம் கண்டுபிடிப்பாளர்கள் என்ற தலைப்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு ஸெரோதா நிறுவனர் நிகில் காமத் தலைமை தாங்கினார். இதில் ஜேஎஸ்டபிள்யூ சிமெண்ட் நிறுவனத்தின் பார்க் ஜின்டால், கோடக் வங்கியின் ஜெய் கோடக் மற்றும் முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தின் சுஸானா முத்தூட் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் கலந்து கொண்டு பேசிய கோடக் மகேந்திரா வங்கியின் நிறுவனர் உதய் கோடக்கின் மகன் ஜெய் கோடக்கும் , நிகில் காமத்திடம் நீங்கள் ஏற்கனவே தரகு தொழிலை மாற்றி அமைத்து விட்டீர்கள் தயவு செய்து வங்கிகள் பக்கம் வந்து விடாதீர்கள் எனக் கூறினார். அதற்கு நாங்கள் வங்கி தொழிலில் ஈடுபட வேண்டும் என்று நினைத்தாலும் எங்களுக்கு அதற்கான உரிமம் கிடைக்காது என கூறினார்.
ஸெரோதாவை பொறுத்தவரையில் தற்போது 1.6 கோடி பயனாளர்களைக் கொண்டுள்ளது மொத்தம் ஆறு லட்சம் கோடி மதிப்பிலான சொத்துக்களை அது மேலாண்மை செய்கிறது. இந்த நிறுவனம் வங்கி தொழிலில் கால் பதிக்க வேண்டும் என முயற்சி செய்து வருகிறது . ஆனால் அதற்கான உரிமம் கிடைக்கவில்லை. பல்வேறு ஃபின்டெக் ஸ்டார்ட் அப் நிறுவனங்களும் வங்கி தொழிலில் கால் பதிக்க வேண்டும் என திட்டமிடுகின்றன. இருந்தாலும் அதற்கான அனுமதியை இதுவரை ஆர்பிஐ வழங்காமல் இருக்கிறது.
நிகில் காமத் இதற்கு முன்னர் கலந்து கொண்ட ஒரு நேர்காணலில் கூட எங்களுக்கு வங்கி தொழிலில் ஈடுபட வேண்டும் என்பதில் மிகவும் ஆர்வம் இருக்கிறது, ஆனால் நாங்கள் பல ஆண்டுகளாக முயற்சி செய்தும் உரிமம் எங்களுக்கு கிடைக்கவில்லை என கூறினார்.
Written by: Devika


Click it and Unblock the Notifications