மத்தியில் தொடர்ந்து 3வது முறையாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. இருப்பினும் கடந்த பத்து ஆண்டுகளில் மோடி அரசு எந்தவித நெருக்கடியும், தொந்தரவும் இல்லாமல் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தது.
ஆனால் வரும் ஆண்டுகளில் மோடி அரசுக்கு பட்ஜெட் தாக்கல் செய்வது பெரிய தலைவலியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. அதிக இடங்களில் வெற்றி பெற்ற கட்சியாக இருந்தாலும், அது பெருன்பான்மையை காட்டிலும் குறைவாகவே இருந்தது. இதனால் தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் தயவோடு ஆட்சியை அமைத்தது.

மத்தியில் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள கூட்டணி கட்சிகளை பா.ஜ.க அதிகம் நம்ப வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் இனி வரும் பட்ஜெட்களை முன்பு போல் பா.ஜ.க.வால் அவ்வளவு சுதந்திரமாக தாக்கல் செய்ய முடியுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ஏனென்றால், கூட்டணி கட்சிகளின் கோரிக்கைகளுக்கு இணங்கி போக வேண்டிய நிலையில் பா.ஜ.க. உள்ளது. மேலும் எதிர்பார்த்ததை போலவை, பாஜகவின் கூட்டணி கட்சிகள் குடைச்சல் கொடுக்க தொடங்கி விட்டன. அண்மையில் தெலுங்கு தேச கட்சியின் தலைவரும், ஆந்திர முதல்வரான சந்திரபாபு நாயுடு, மத்திய பட்ஜெட்டில் தங்களது மாநில வளர்ச்சிக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று மோடியை சந்தித்து கோரிக்கை வைத்தார்.
இந்த சூழ்நிலையில், பாஜகவின் மற்றொரு கூட்டணி கட்சியான நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், எதிர்வரும் மத்திய பட்ஜெட்டில், பீகாருக்கு சென்ற ஆண்டைக் காட்டிலும் கூடுதலாக நிதி ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக, ஐக்கிய ஜனதா தள கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், அம்மாநில அமைச்சருமான விஜய் குமார் சவுத்ரி கூறுகையில், கடந்த ஆண்டு அரசு அமைக்கப்பட்டது முதல், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரச பீகாருக்கு தாராளமாக உதவி வருகிறது. கடந்த பட்ஜெட்டில் பீகார் பல திட்டங்களுக்கு நிதி பெற்றது. இருப்பினும் இந்த முறை கடந்த ஆண்டு பட்ஜெட்டை விட கவனிப்பு தேவை.
கடந்த ஆண்டு, சிறந்த வெள்ள மேலாண்மை மற்றும் பிற உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு நிதி கிடைத்தது. மாநிலத்தின் நீர்வள அமைச்சராக, வெள்ள நீர்ப்பாசனம் மற்றும் அதை சுற்றியுள்ள உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு அதிக நிதி கிடைக்கும் என்று எதிா்பார்க்கிறேன் என்று தெரிவித்தார்.
இந்த ஆண்டு இறுதியில் பீகாரில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளநிலையில், பாஜகவின் முக்கிய கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தளத்தின் இந்த கோரிக்கை மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரும் சனிக்கிழமையன்று எதிர்வரும் 2025-26ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.
Story written by: Subramanian


Click it and Unblock the Notifications